“மகா சங்கத்தினரை வெகுவிரைவில் கொழும்பில் அணிதிரள வைப்போம். அதற்கு முன்னதாக ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசாங்கத்தை விரட்டுவதற்கான போராட்டம் ஆரம்பமாகும்” என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் சூளுரைத்துள்ளார்.
விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“வன்முறையைத் தூண்டிவிட்டுப் பிக்குகளின் போராட்டத்தை ஒடுக்கலாம் என இந்த அரசாங்கம் கருதுமானால், அது ஒருபோதும் நடக்காது.
ஜனாதிபதிக்கு எங்களால் இரண்டு தேர்வுகளைத்தான் வழங்க முடியும். ஒன்று, ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; இல்லாவிடின், ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்.
பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய அதிகாரம் நிறைவேற்று அதிகாரக் கொண்ட ஜனாதிபதிக்கே இருக்கின்றது. அதனால்தான் இந்த விடயத்தை வலியுறுத்துகின்றோம்.
பௌத்த கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கே இந்த அரசாங்கம் முற்படுகின்றது. ஆனால், மகா சங்கத்தினர் இருக்கும் வரை அது ஒருபோதும் நடக்காது. வெகுவிரைவில் மகா சங்கத்தினரை நாம் கொழும்புக்கு அழைப்போம்.
அதற்கு முன்னதாக ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஜனாதிபதிக்கு அவர் வகிக்கும் பதவி இல்லாமல் போகும். விகாரமகாதேவி பூங்காவில் இருந்து அரசை விரட்டுவதற்கான போராட்டம் ஆரம்பமாகும்” என்றார்.