முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மூத்த மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், நீதித்துறையை நம்பிச் செயற்படுமாறும், அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர் தனது மகனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசிப்பதற்கு நாமல் தனது அனுமதியைக் கோரியதை நினைவுகூர்ந்த மஹிந்த ராஜபக்ச , அரசியலில் ஈடுபடத் தீர்மானித்தால் சிறை வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அப்போது அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் பிரவேசித்த ஆரம்ப காலத்திலேயே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாம் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்திலிருந்தே இந்த அறிவுரையை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் நீதித்துறையின் மீதே தாம் நம்பிக்கை வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச , மற்றவர்கள் என்ன கூறினாலும் நாமலும் அதே கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலைகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், தாமும் தனது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே மருத்துவமனையில்தான் நாமலும் பிறந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமது மற்ற மகன்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் பெற்றோரின் நலன்களைக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யோஷித ராஜபக்சஷ எதிர்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மஹிந்த, தனது இரண்டாவது மகன் இலங்கை கடற்படையில் இணைந்ததன் காரணமாகவே சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரின் பிள்ளைகளும் அவ்வாறு வேலைவாய்ப்புகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வரும்போது அந்த நபர்களின் பிள்ளைகளை இலக்குவைத்துச் செயற்பட வேண்டாம் என நாமலுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“பெற்றோர் செய்த செயல்களுக்காகப் பிள்ளைகளைப் பொறுப்பாக்கக் கூடாது என்பதே எனது கருத்து. பழிவாங்குவதைத் தவிர்ப்பதே ராஜபக்ச குடும்பத்தின் பாரம்பரியம்” என மஹிந்த ராஜபக்ச தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துன்பப்படும் இலட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக நாட்டை விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் ராஜபக்ச குடும்பத்தினரை இந்தச் சமூகம் குற்றவாளிகளாகக் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், நன்றியுணர்வுடன் நடந்துகொள்வதையும் நன்றிக்கடனை நினைவில் வைத்திருப்பதையும் மதிக்கும் சமூகத்திலேயே இந்த நாட்டு மக்கள் வாழ்கின்றனர் என்பதை நாமல் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
“மும்மணிகளின் ஆசீர்வாதம் உனக்குக் கிடைக்கட்டும்!” எனக் கூறி அவர் தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.