இலங்கையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், காணிகளைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகளுக்கு நாளை (நவம்பர் 1) முதல் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 102(3) ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தும்.
இதன்படி, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், காணிகள் அல்லது காணி உரிமைகளைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல், இலங்கை நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் போது, பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவர் ஆகிய இருவரும் தங்களது TIN விபரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
இந்தப் பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துவதற்கு முன்னர், உரிய TIN ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், இறுதி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திணைக்களத்தின் மின்னணு சேவைத் தளத்தின் (e-Services) ஊடாக முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-Services இணையத்தளத்தின் ஊடாக தனிநபர்கள் தங்களது TIN இலக்கத்தைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
இதன்போது, தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றைக் கொண்ட சரிபார்ப்பு முடிவின் அச்சுப் பிரதியை உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாகச் சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியன்று 18 வயதைப் பூர்த்தி செய்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இலங்கை வதிவிடத் தனிநபர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
அத்துடன், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் அந்த வயதை அடைந்தவுடன் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.