எட்டு அத்தியாவசிய பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தை கட்டாயமாகச் சமர்ப்பிக்கும் நடைமுறையை 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்திருந்த நிலையில், மேலும் ஐந்து மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள், இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் ஏற்பட்ட நீண்ட வரிசைகள் மற்றும் இணையவழி பதிவுச் சேவையில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், காணிகளைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய எட்டு பரிவர்த்தனைகளுக்கான TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்கும் கட்டாய நடைமுறையே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தற்காலிக நிவாரணம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.