வடக்கு மக்கள் தற்போது நிம்மதியாக வாழத் தொடங்கியுள்ள நிலையில், அபிவிருத்தியின்றி அரசியல் பிரச்சினைகளை மட்டும் பேசினால் அந்த அரசியல் மக்களால் நிராகரிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றன. எனினும், தேர்தலை நடத்துவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும் அல்லவா?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதி 42 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசாங்கம் இருந்தால் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருக்காது எனவும் கேள்வி எழுப்பினார்.
“வடக்கு மக்கள் தற்போது சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தற்போது அபிவிருத்தி அவசியம். அபிவிருத்தியையும் முன்னெடுத்துக்கொண்டே அரசியல் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும். அபிவிருத்தியின்றி அரசியல் பிரச்சினைகளை மட்டும் பேசினால் அந்த அரசியல் நிராகரிக்கப்படும்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.