உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை வடக்கு, தெற்கு என எப்பகுதியில் வாழும் மக்களுக்கும் உள்ளது. ஆனால் புலிகளின் சின்னம், படங்கள் என்பவற்றை பாவித்து அந்நிகழ்வுகளை செய்வது தடை. அவ்வாறு செய்திருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வடக்கில் மாவீரர் நினைவேந்தல், பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டன் என்பன பற்றி தயாசிறி ஜயசேகர எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
'வடக்கில் கடந்தவாரம் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
புலிகளை நினைவுகூருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலி சின்னம், அடையாளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸார் செயல்படுகின்றனர்.
நினைவேந்தல்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தினர். வர்த்தமானி அறிவித்தலை மீறும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் பிரபாகரனின் படத்தை வைத்து நினைவேந்நதல் நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைதீவிலும் அதே போன்று நிகழ்வு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலீபன் விவகாரம் தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." - என்றார்.