புலிகள் அமைப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கும் உளவாளியாக அவர் செயல்பட்டுள்ளார் எனவும் தேரர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியும் என நேற்று முன்தினம் கண்டியில் வைத்து ஞானசார தேரர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இணைய ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின்போதே, பிரதான சூத்திரதாரி தொடர்பான சமிக்ஞைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதான சூத்திரதாரி தொடர்பில் அனைத்து தகவல்களும் தனக்கு தெரியும் எனவும், பிரதானமாக செயல்பட்ட நால்வரில் ஒருவர்தான் அந்த சூத்திரதாரி எனவும் தேரர் குறிப்பிட்டார்.
குறித்த நால்வரும் முஸ்லிம்கள் எனவும், அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, பிரதான சூத்திரதாரியென கருதப்படும் நபர் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்தார். அவர் தொடர்பில் புலிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரச படைகளுக்கு தகவல் வழங்கும் உளவாளி இவரென சந்தேகித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து இவரை புலிகள் விரட்டினார்கள்.
இவர் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கும் நபராக செயல்பட்டுள்ளார். அவர்தான் சஹ்ரானை பயிற்றுவித்தார்." எனவும் பரபரப்பு தகவல்களை மேற்படி நேர்காணலின்போது ஞானசார தேரர் வெளிப்படுத்தியுள்ளார்.