தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவம் உடன் மீளப்பெறப்படும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரியவால் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையாக முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ அனைத்து அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அதன்மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
சிவில் நிர்வாகத்தில் இராணுவ செயற்பாட்டை நிறுத்தல், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவம் மீளப்பெறப்பட வேண்டும்.
வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக 13 ஐ முழுமையாக அமுல்படுத்தி அதிகாரப்பகிர்வுக்கு புத்துயிர் வழங்க வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.” -என்றுள்ளது.