திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் அனைவரும் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவர்களில் நான்கு பௌத்த பிக்குமாரும் பொதுமக்கள் அறுவரும் அடங்குகின்றனர்.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியன்று, முறையான அனுமதி இன்றி கடற்கரை பாதுகாப்பு வலயத்துக்குள் புத்தர் சிலையை நிறுவப்பட்டது.
இந்தநிலையில், கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் சிலையை அகற்ற முயன்றபோது அங்கு பதற்றமான சூழல் உருவானது.
தேரர்களும் பிரதேச மக்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சட்டவிரோத கட்டுமானம் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற காரணிகளின் கீழ், அவர்கள் மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.
இதனால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, நூற்றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.