இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையை சேர்ந்த 236 படையினர் நேற்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலுக்கு உள்ளானபோது , அதிலிருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரும், ஐஆர்ஐஎஸ் புஷேர் என்ற கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
236 ஈரானியர்கள் நேற்று இரவு தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்களை அழைத்துச் செல்வதற்காக ஈரானின், மெராஜ் விமானசேவைக்குச் சொந்தமான ‘Iran-09’ என்ற சிறப்பு விமானம் தெஹ்ரானில் இருந்து நேற்று மாலை 4.00 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.
இதையடுத்து, வெலிசறை தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 204 பேரும், கொக்கல தடுப்பு மையத்தில் இருந்த 32 பேரும் விமானத்தில் ஏற்றப்பட்டதை அடுத்து அந்த விமானம் இரவு 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த நடவடிக்கை, அனைத்துலக மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.