செம்மணி மனிதப் புதைகுழியை இன்று நேரில்
பார்வையிடுகின்றனர் ஐரோப்பிய தூதுவர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிடவுள்ளனர்.
செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், அன்றைய தினமே நீதிமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் மற்றும் நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் திருமதி கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா ஆகிய 8 உறுப்பினர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தளத்தைப் பார்வையிடவுள்ளனர்.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட இன்று வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் செம்மணி வளைவுப் பகுதியில் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.