காசாவிலிருந்த இஸ்ரேல் படையினர் வெளியேறாவிடின் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் அமைப்பினர் நேற்று ஒப்படைத்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் ஒவ்வொரு வாரமும் மூன்று, நான்கு பேராக விடுவித்து வந்தனர்.
பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வந்தது. இதுவரை 24 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் உயிருடன் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் நால்வரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளனர்.
30 குழந்தைகள் உட்பட 250 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் மூலம் பாதிக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர்.
இஸ்ரேல் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் 8 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். தாக்குதலில் அல்லது பாதுகாப்பில் இருந்தபோது உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன.
இருதரப்பினர் போர் நிறுத்தம் தொடருமா என தெரியவில்லை.
இந்நிலையில் 6 பிணைக் கைதிகளை நாளை உயிருடன் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பிணைக் கைதிகளின் உடல்களை அடுத்த வாரம் ஒப்படைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், போர் நிறுத்தத்தை நீட்டித்து, இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறவில்லை என்றால், மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் எனவும் ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.