இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில் குண்டுகள் வெடித்த நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பலகோணங்களில் பேசப்படுகின்றது.
தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியுள்ளார்.
மேற்குகரையில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னணியில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலில் பேருந்துகள் முழுமையாக எரிந்த நிலையில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
3 வெடிகுண்டுகள் வெடித்த நிலையில், இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் வேறு பேருந்துகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய, நாடு முழுவதும் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.