உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை: மீண்டும் ஓரங்கட்டும் ட்ரம்ப்!
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை எனவும், ஆனால் புடினுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
3 ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவர் அது தொடர்பாக அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேசியுள்ளார்.
முந்தைய பைடன் அரசு உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் வழங்கிவந்தது.
இந்நிலையில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலைப்பாட்டில் 360 டிகிரி மாற்றம் ஏற்பட்டது.
இது ஜெலன்ஸ்கியையும், நேட்டோ உறுப்பு நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முன்புபோல் அமெரிக்க ஆதரவை இனியும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஜெலன்ஸ்கிக்கு ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை தொடர்ச்சியாக ட்ரம்ப் உணர்த்தி வருகிறார்.
அந்த வகையில் பாக்ஸ் நியூஸ் நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்துள்ள அண்மைப் பேட்டியும் கவனம் பெறுகிறது.
அந்தப் பேட்டியில் ட்ரம்ப் “ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. ஆனால் உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசவில்லை. உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் நான் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கான அவசியமில்லை என்று கருதுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஜெலன்ஸ்கி தேர்தல் நடைமுறைகளில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.