ஆபிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதன்முறையாக இந்த மர்ம நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டது. இதுவரையில் 419 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மர்ம நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்று சிறுவர்கள் வெளவாலை சாப்பிட்டதாகவும், அதையடுத்து தீவிர காய்ச்சல் ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் அந்த மூன்று குழந்தைகளும் இறந்தாகவும் அதுவே மர்ம நோய் பரவலுக்கான தொடக்கமாக இருந்ததாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
காட்டு விலங்குகள் அதிகமாக உண்ணப்படும் இடங்களில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் வேகமாகப் பரவுவது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஆப்ரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு நோய்ப்பரவல் ஏற்படுவது 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த 2022-இல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.