இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹாமஸுக்கு அழுத்தும் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இஸ்ரேல், இப்போது காசா பகுதிக்குச் செல்லும் மின்சாரத்தை மொத்தமாக முடக்கியுள்ளது.
இதனால் காசா பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் சூழலில், குடிநீர் பஞ்சம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே வெடித்த மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்தது. டிரம்ப் ஜனாதிபதியான சமயத்தில் தான் இரு தரப்பும் தற்காலிக போர் நிறுத்தம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டன. இதனால் அந்த பகுதியில் மெல்ல அமைதி திரும்பி வந்தது.
இதற்கிடையே இப்போது மீண்டும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.
இந்தச் சூழலில் காசா மீதான அடுத்தகட்ட நடவடிக்கையாகக் காசா பகுதிக்கு வழங்கப்படும் மின்சாரத்தை உடனடியாக நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் வசம் இன்னுமே பல பணய கைதிகளை உள்ளனர். அவர்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ஹாமஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இப்போது மின்சார விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.