உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பயணிகளை மீட்கும் வகையில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி தொடரும், அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகளில் 58 பேர் ஆண்கள், 31 பேர் பெண்கள், 15 பேர் குழந்தைகளாவர்.
அவர்கள் அனைவரும் மற்றுமொரு ரயில் மூலம் பாலோசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
அப்போது பலுச் விடுதலை படையை சேர்ந்தவர்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர்.