- ஐங்கரன் விக்கினேஸ்வரா-
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் புத்தளம் இரணவிலவில் அமைந்திருந்த அமெரிக்க அரசின் வானொலியான ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’வின் ஒலிபரப்பு கோபரங்கள் 1984 ஆரம்பத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்களால் தகர்க்கப்பட இருந்தன.
இதன் பின்னர் 1984 பிற்பகுதியில் பேதுருதாலகால( Piduruthalagala)
மலையகத்தில் இருந்த சிங்கள அரசின் பொய்ச் செய்திகளை பறைசாற்றிய ரூபவாஹினி ஒளிபரப்பு கோபரங்கள் ஈரோஸ் அமைப்பால் தகர்க்கப்பட்டது.
ஒரு காலத்தில் தங்கள் பிரச்சார நலனுக்காக பயன்படுத்திய ஊடகங்களை இப்போது அந்த நாட்டின் அரசே முடக்குவது என்பது இந்த ஊடகங்களின் நம்பகத் தன்மையை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
உலகெங்கும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் ஊதுகுழலான வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (Voice of America) செய்தி நிறுவனத்தை மூட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அரசின் நிதியுதவி பெற்ற செய்தி நிறுவனமான வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவை டிரம்புக்கு எதிரானது மற்றும் தீவிரமானது என்று குற்றம் சாட்டி, அதை முடக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக சுயாதீன (Freedom House) கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு அண்மையில் தெரிவித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக தொடர்பூடக சுதந்திரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக
வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
வலதுசாரி ஊடக ஆதிக்கம் :
அமெரிக்காவில் வரி செலுத்துவோர் இனி தீவிர பிரச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது . அமெரிக்காவில் அரசியல்வாதிகள் , முக்கிய தலைவர்களை விமர்சிக்கும் ஊடகங்களின் நிலை தற்போது மிகவும் மோசமாகி உள்ளது
சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் முதன்மையன ஊடக சேவையாக இருக்கும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா - VOA, இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனிய நாஜி பிரச்சாரத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது.
இந்த ஊடக நிகழ்ச்சிகள் மூலமாக தற்போது உலகளவில் ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
VOAவின் ஊடக இயக்குனர் மைக் அப்ரமோவிட்ஸ், தனது நிறுவனத்தின் 1,300 பேர் கொண்ட அவரது முழு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இன்று அமெரிக்காவுடன் பகைமையை கொண்டுள்ள ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்றவை அமெரிக்காவை இழிவுபடுத்துவதற்காக தவறான கதைகளை உருவாக்குவதில் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து வருகின்றன என்று அப்ரமோவிட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த மூடும் உத்தரவு VOAவை அதன் முக்கியமான பணியைச் செய்ய முடியாமல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த புதிய உத்தரவால் சுதந்திரமான பத்திரிகைக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அமெரிக்க தேசிய பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் ஒரு முழு செய்தி அறையையும் ஒரே இரவில் ஓரங்கட்ட முடிந்தால், அது பத்திரிகை சுதந்திரத்தின் நிலையைப் பற்றி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த மூடு விழா VOA இல் சுயாதீன ஊடகத்தின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் ஒரு அடிப்படை மாற்றமாகும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கம்யூனிச எதிர்ப்பு ஊடகங்கள்:
ஜனாதிபதி டிரம்பின் மூடும் உத்தரவு VOA இன் தாய் நிறுவனமான US Agency for Global Media (USAGM) அமைப்பையும் குறிவைத்துள்ளது. இந்த ஊடகங்கள் முதலில் கம்யூனிசத்தை எதிர்க்க அமைக்கப்பட்ட Radio Free Europe மற்றும் Radio Free Asia போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் நிதியளித்தது.
VOA மற்றும் USAGM இன் கீழ் உள்ள பிற ஊடக நிலையங்கள் 400 மில்லியனுக்கும் அதிகமான கேட்போருக்கு சேவை செய்வதாகக் கூறுகின்றன. அவை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிபிசி உலக சேவைக்கு பரந்த அளவில் சமமானவையாக இருக்கின்றன.
இந்த நேரத்தில் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜான் லிபாவ்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம் பிராகாவில் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா/ரேடியோ லிபர்ட்டி இயங்க உதவ முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.
அத்துடன் ஒளிபரப்பாளரின் செயல்பாடுகளை குறைந்தபட்சம் ஓரளவுக்கு பராமரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய திங்களன்று நடைபெறும் கூட்டத்தில் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களிடம் கேட்பதாக அவர் கூறியுள்ளார்.
எலோன் மஸ்க் X ஊடக ஆதிக்கம் :
அதிபர் டிரம்பின் உயர் ஆலோசகருமான எலோன் மஸ்க், தனது சமூக ஊடக தளமான X ஐப் பயன்படுத்தி VOA ஐ மூட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வீடற்றவர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கு நிதியளிப்பது உட்பட பல பொது நிறுவனங்களுக்கான நிதியையும் குறைத்து உள்ளார்.
அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் தனக்கு எதிராகவும், பாரபட்சமாக இருப்பதாக ஜனாதிபதி தொடர்ந்து கூறி வந்துள்ளார். அதே வேளை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் VOA ஐ கடுமையாக விமர்சித்தார். இதனால் சமீபத்தில் USAGM இன் சிறப்பு ஆலோசகராக தீவிர விசுவாசி கரி லேக்கை நியமித்துள்ளார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் ஒரு உரையின் போது அவர் CNN மற்றும் MSNBC நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை என்றும் குறிப்பிட்டார்.
நாஜி - ஜப்பானிய எதிர் பிரச்சார ஊடகங்கள்:
இரண்டாம் உலகப்போரின் போது நாஜி மற்றும் ஜப்பானிய பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரச ஆணையுடன் 1942 இல் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடங்கப்பட்டது.
1942 இல் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடங்கப்பட்ட அதன் முதல் ஒளிபரப்பு, பிரித்தானிய பிபிசியால் அமெரிக்காவிற்கு கடன் வழங்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மிட்டரின் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜெரால்ட் ஃபோர்டு, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க 1976 இல் VOA இன் பொது சாசனத்தில் கையெழுத்திட்டார். இதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் இராணுவம் நலன் சார்ந்திராத ஒளிபரப்பை மேற்பார்வையிடும் ஆளுநர்கள் வாரியம் நிறுவப்பட்டது.
இதன் பின்னர் 2013 ஆம் ஆண்டில், புதிய சட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் VOA மற்றும் துணை நிறுவனங்கள் அமெரிக்காவில் ஒளிபரப்பை சுயாதீனமாக தொடங்க அனுமதித்தது.
ஊடகங்களுக்கான அமெரிக்க முகாமை (USAGM)
உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகாமை நிறுவனம் (USAGM) தனது மேலாளர்களை பணியை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மனித வளத்தை குறைத்துக் கொண்டு விதிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் ரேடியோ ஃப்ரீ யூரோப் அல்லது ரேடியோ லிபர்டி ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சிபிஎஸ்-க்கு கிடைத்துள்ளது. இதனில் அந்நிறுவனங்களுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி ரத்து செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.