கட்டுரையாளர் - சியாமளா
உலகின் பழமையான பண்பாடுகளில் அவுஸ்ரேலியப் பழங்குடியினரதும், அவுஸ்ரேலியத் தீவக மக்களினதும் பண்பாடு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பண்பாடானது அம்மக்களின் உள உறுதியை மேம்படுத்துவதாகவே காணப்படுகின்றது. காலனித்துவக் குடியேற்றம் நடைபெற முன்னரோ அல்லது கடந்த ஐம்பது ஆண்டு காலமாகவோ அவுஸ்ரேலியப் பழங்குடியினர் மற்றும் தீவக மக்களிடையே தற்கொலைகள் மிகவும் அரிதாக நிகழ்ந்தன.
1980கள் முதல் தற்கொலை விகிதங்கள் அதிகரித்து, இன்று இந்த மக்கள் தொகையில் ஐந்தாவது முக்கியமான மரண காரணமாகத் தற்கொலைகள் காணப்படுகின்றன.
காலனித்துவ ஆதிக்கம் பெற்ற நாடுகளில் உள்ள பூர்வீக மக்களிடையே ‘மிக்க துயரத்தையும் கோபத்தையும்’ வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்றாகத் தற்கொலைகள் விவரிக்கப்படுகின்றன. அந்தக் கோபமும் துயரமும் ஏற்படுவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றை விக்டோரிய மரண விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது.
தற்கொலைகள் ஏற்படுத்தும் பிரிவின் வலியானது குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்களின் தற்கொலையைத் தடுப்பதற்குச் சரியான திட்டங்களையோ, தடுப்பு முன்னேற்பாடுகளையோ மேற்கொள்வதற்கு ஆய்வுகள் மூலம் சரியான தரவுகள் கிடைக்காமையே ஒரு மூலகாரணம் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
2020 முதல் 2024 வரை தற்கொலை செய்து கொண்ட பூர்வகுடி மக்களில் 56.6 சதவீதமானோர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தனர், அதே வயதுப் பிரிவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 30 சதவீதமானோர் மட்டுமே பூர்வகுடியினர் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் வெளியிடப்பட்ட விக்டோரியாவின் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையானது 2022 முதல் பூர்வகுடி மக்களின் தற்கொலை மரணங்களில் 42 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதில் தற்கொலை செய்த ஆண்களின் சராசரி இறப்பு வயது 37 என்றும் பெண்களின் வயது 29.6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்டோரியாவில் உள்ள பூர்வகுடி மக்களில் நிகழ்ந்த 54.9 சதவீதமான தற்கொலைகளில் 45.1 சதவீதம் நகர்புறங்களிலேயே நிகழ்ந்திருக்கின்றன. மரணத்தின் போது 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மனநல நோய்களுக்கான மருத்துவ அறிகுறிகளைப் பெற்றிருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
முன்னணி மனநல நிபுணர் டாக்டர் டிரேசி வெஸ்டர்மன் மற்றும் The Westerman Jilya Institute இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அவுஸ்ரேலியாவில் பூர்வகுடி இளையோரின் மனநிலை குறித்த விரிவான தரவுகளில் 42 சதவீதம் பேருக்கு தற்கொலை சிந்தனைகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. 2007 முதல் 2022 வரை மனநல சேவைகளை நாடிய 1226 பூர்வகுடி இளையோரில் நான்கில் ஒருவர் ஒருமுறை அல்லது அதற்கு மேற்பட்டமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.
நீதிமன்றத் தரவுகளின் படி, 2020 முதல் 2023 வரை தற்கொலைக்கு வழி வகுத்த காரணிகளில் மனநல பிரச்சினைகள், சமூகப்பிரச்சினைகள், போதைப்பொருள் பயன்படுத்தல், குடும்ப வன்முறையை சந்தித்தல் மற்றும் குற்றத்தொடர்பு ஆகியவை மிகமுக்கியமான காரணங்கள் எனக் தெரியவருகின்றது.
எனவே, முன்னேற்றமான தலையீட்டுத் திட்டங்களை வடிவமைக்க உள்ளூர் மட்டத்தில் பூர்வகுடிகளின் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மிகவும் தேவையானவை. பூர்வகுடி மக்களுக்கு தற்கொலை பற்றிய துல்லியமான தகவல்களையும் விழிப்புணர்வையும் வழங்குவது மிக முக்கியமாகின்றது. மருத்துவ ஆய்வுக்கான தரவுகளை மட்டுமே பயன்படுத்தியதால் சில சமூக மட்டத்திலான காரணிகளை அளவிட முடியவில்லை என்பதுடன் சில முக்கியமான கேள்விகளுக்கு பதில் தரப்படாததும் ஒரு குறையாகவே பார்க்கப்படுகின்றது. மருத்துவப் பணியாளர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கப் பூர்வகுடியினர் தயங்கியிருப்பதும் சரியான தகவல்களைத் திரட்டுவதற்குத் தடையாக இருந்திருக்கின்றது.
சமூக உறவுகளிடையேயான இணைப்பு, விளையாட்டுகளில் பங்கேற்பது போன்றன தற்கொலை நடத்தைகளை குறைக்கும் காரணிகளாக உள்ளன. அத்துடன் 'பண்பாட்டுத் தொடர்ச்சி' (Cultural Continuity) சார்ந்த அம்சங்கள், பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்கவும், சமூக பண்புகளைக் காப்பாற்றவும் உதவுவதால், அவை தற்கொலை அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகளில் அல்லது சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழந்தைகளைப் பராமரித்து வளர்ப்பது, முழநேர வேலை செய்தல் ஆகியவை தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கும். வேலை பார்த்தல் பாதுகாப்புணர்வைக் கொடுத்து தற்கொலை போன்ற எண்ணங்களைக் குறைக்க உதவுகிறது.
மாறாக, தற்காலிக வேலை அல்லது ஒப்பந்த வேலை செய்தல், வீடற்ற நிலை, சூதாட்டப் பிரச்சினை போன்றவை தற்கொலை அல்லது தன்னைக் காயப்படுத்திக் கொள்ளும் எண்ணங்களை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன. பூர்வகுடிப் பெண்களை எடுத்துக் கொண்டால் பகுதி நேரமாக வேலை செய்தல், விவாகரத்து அல்லது உறவுச்சிக்கலை அனுபவித்தல் ஆகியவை இத்தகைய எண்ணங்களை அதிகரிக்கும் முக்கியமான காரணிகளாக உள்ளன.
பூர்வகுடி மற்றும் தீவக மக்களுக்கான தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகள், சமூக மற்றும் பண்பாட்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கு அந்த சமூகத்தின் தலைமையிலான மற்றும் குழு சார்ந்த ஆய்வுகள் அவசியம். மேலும், மருத்துவ சேவைகளில் தொகுக்கப்படும் தகவல்களை பயன்படுத்தி, தற்கொலை தடுப்பு திட்டங்களை மேம்படுத்துவது பலனளிப்பதாக இருக்கும். பூர்வகுடியினர் மற்றும் தீவுமக்களின் தற்கொலைக்கான காரணிகளைக் குறைக்க அரசு, மருத்துவம், சமூக ஆராய்ச்சி மற்றும் சமூக அமைப்புகள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.