பழனியப்பன் சுப்பிரமணியனுடன் ஒரு நேர்காணல்
நேர்கண்டவர்: ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
பசுமைக் கட்சியின் வேட்பாளர் பழனியப்பன் சுப்பிரமணியனுக்கு அரசியல் என்பது ஒரு சாதாரண கருத்தியல் செயற்பாடு அல்ல. அது மிகவும் தனித்தன்மை வாய்ந்தது . கணினித் தொழில்நுட்பவியல் நிபுணராக தனது புலம்பெயர் வாழ்க்கையைத் தொடங்கியவர் , அரசாங்கத்தின் செயலற்ற தன்மையின் காரணமாக ஏற்பட்ட கோரமான ஆபத்துகளை நேரடியாகக் கண்டிருக்கிறார் .
காலநிலை மாற்றங்கள் தொடர்பான செயற்திட்டங்களில் அரசாங்கத்தின் மெத்தன நடவடிக்கைகள் , கோவிட் -19 தொற்றுநோயின் போது தவறான தகவல் பரவல் மற்றும் அலட்சியத்தின் பேரழிவு விளைவுகள் வரை இவரை பாதித்திருக்கின்றன . இவ்வாறான பாதிப்புகளுக்கு எதிராக களப்போராளியாக இருந்தவர் தற்பொழுது தேர்தல் அரசியலில் களமிறங்கியிருக்கிறார் . வரவிருக்கும் 2025 மாகாணத் தேர்தலில் கிரீன்வே தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். எதிரொலிக்காக அவர் வழங்கிய நேர்காணல் இது.
எதிரொலி : அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி அன்றாட ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் இந்தக் கடுமையான சூழ்நிலையில், குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைக்க மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்ய தேவையான எந்தவிதமான கொள்கைகளை வலியுறுத்துவீர்கள்?
பழனியப்பன் : பெரிய நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் பணக்காரச் சொத்து முதலீட்டாளர்களின் பேராசை நடவடிக்கைகளின் விளைவுகளே நாம் இன்று காணும் கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளுக்கு காரணமாகும் . அவர்கள் தங்கள் நியாயமான வரிப் பங்கைச் செலுத்துவதற்குத் தூண்டுவதற்கு தேவைப்படும் துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இரண்டு பெரிய கட்சிகளும் ( லேபர் ,லிபெரல் ) அவர்களுக்குப் பெரிய அளவிலான வரிச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்குகின்றன. PRRT (பெட்ரோலிய வள வாடகை வரி) , புதைபடிவ ( fossil fuel ) எரிபொருள் துறைக்கு வரி விதிப்பதை விட, HECS கடன் மூலம் உயர்கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து அரசாங்கம் அதிகமாக வசூலிக்கும் கொடுமையான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். நம் கண்களுக்கு புலப்படாத பணக்காரர்களுக்கு எல்லாவிதமான நலன்களையும் செய்யும் ஒரு அமைப்பு இரண்டு பெரிய கட்சிகளுக்கும் வேலை செய்கிறது, ஏனெனில் இரண்டு பெரிய கட்சிகளும் அதே பெரிய நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலரை நன்கொடைகளாகப் பெறுகிறார்கள் .ஆதலால் நம்மை ஏமாற்றுவதற்கு தேவையான மொத்த குத்தகையும் அவர்களிடம் ஏகபோகமாக குவிந்திருப்பதால் , இந்த பில்லியனர்கள் நம்மைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள்
பசுமைக் கட்சியினராகிய நாங்கள் எந்தப் பணக்காரர்களிடமும் நன்கொடை கேட்டு கையேந்தி நிற்காமல் சுயாதீனமாகத் தேர்தல் செலவுக் கொள்கைகளை வகுத்துள்ளோம். அந்தத் திட்டத்தின்படி பெரிய நிறுவனங்கள் மற்றும் பில்லியனர்கள் தங்கள் நியாயமான பங்கைச் செலுத்தச் செய்வதன் மூலம் $514 பில்லியன் திரட்ட முடியும். இதன்மூலம் இலவச பல் மருத்துவம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச குழந்தைப் பராமரிப்பு ( Day Care ) போன்றவற்றிற்கு நிதியளிக்க முடியும் . பணக்காரச் சொத்து முதலீட்டாளர்களுக்கு வழங்கும் $176 பில்லியன் வரிச் சலுகைகளை நிறுத்துவதன் மூலம் பணப்பற்றாக்குறையினை குறைக்க முடியும்.
எல்லோருக்கும் வீட்டு வசதி வழங்கத் தேவையான குறைந்த சதவிகித வட்டியில் வீட்டுக்கடன் வழங்க வங்கிகளை ஒழுங்குபடுத்துவோம், மேலும் வாடகை உயர்வுகளைக் கட்டுப்படுத்தல் ,பல்பொருள் அங்காடி விலை ஏற்றத்தை சட்டவிரோதமாக்குதல், மாணவர் கடனை ரத்துச் செய்தல் மற்றும் தேசிய அளவில் 50 சென்ட் கட்டணத்தில் பொதுப்போக்குவரத்தைச் செயற்படுத்துதல் போன்ற மக்கள் நலன் பேணும் பல்வேறு கொள்கைகளும் எங்களிடம் இருக்கின்றன.
எதிரொலி : பசுமைக் கட்சியானது காலநிலைக் கொள்கைகளை வலுவாக்க, ஆதரவுக்குரல் கொடுத்து வருகிறது அல்லவா . இதன் காரணமாக நாம் அனைவரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறும்போது , தற்போது புதைபடிவ எரிபொருட்களை சார்ந்துள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பாடாமல் பாதுகாப்பான, நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குவதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்வீர்கள்?
பழனியப்பன் : நியாயமான மாற்றத்திற்கான திறவுகோல் என்பது புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் தங்கள் நியாயமான வரிப் பங்கைச் செலுத்துவதை உறுதி செய்வதே. தற்போது, இரு முக்கியமான கட்சிகளும் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் $1 பில்லியனுக்கும் அதிகமான வரிச் சலுகைகளை வழங்குகின்றன. புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் நீண்ட காலமாக இந்த வரிச்சலுகைகளை தள்ளுபடி செய்யும் மசோதாவைத் தவிர்த்து வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கு தேவையான முதலீடு செய்வதன்மூலம் நாம் ஆயிரக்கணக்கான நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் . அந்த வேலைவாய்ப்புகளில் புதைபடிவ எரிபொருள் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை பசுமைக் கட்சியானது உறுதி செய்யும்.
குறிப்பாக, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி ஏற்றுமதி படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் , மற்ற அனைத்து புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதிகளும் 2040 ஆம் ஆண்டுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். புதைபடிவ எரிபொருட்களின் சுரங்கங்கள் விரிவாக்கத்தை நிறுத்த விரும்புகிறோம். நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் ,அவற்றைச் சுத்தம் செய்ய பணம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பெரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான பங்கைச் செலுத்தச் செய்வதன் மூலம், மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள மிகுந்த வரிச்சுமை குறைந்து , மிகக்குறைந்த வரி செலுத்தும் நிலை ஏற்படும்.
எதிரொலி : வாடகை மற்றும் வீட்டு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், பல ஆஸ்திரேலியர்கள் வீடு வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மலிவு விலை மனைகளை அதிகரிக்கவும் , பாதுகாப்பான வீட்டு வசதிகளை வழங்கவும் நீங்கள் என்ன நடவடிக்கைகளை முன்மொழிகிறீர்கள்?
பழனியப்பன் : நமது நாட்டில், வீடு என்பது ஆடம்பர வசதியாக இருந்துவிடாமல் அடிப்படை உரிமையாக மீட்டெடுப்பதில் பசுமைக் கட்சியினர் உறுதியாக உள்ளனர். தொழிற்கட்சி மற்றும் தாராளவாதிகளால் பணக்கார ,சொத்து முதலீட்டாளர்களுக்கு பல தசாப்தங்களாக வழங்கப்பட்ட கட்டுப்படுத்தப்படாத வரிச் சலுகைகளே ( மொத்தம் $176 பில்லியன் அளவிலான ) இப்போது நாம் அனுபவித்துவரும் நீடித்த வீட்டு விலை மற்றும் வாடகை அதிகரிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன . இதை எதிர்கொள்ள, நாங்கள் ஒரு பன்முக அணுகுமுறையை முன்மொழிகிறோம்: 1. RBA ரொக்க விகிதத்தை விட ஒரு சதவீதத்தில் வீட்டுக்கடன் வட்டி விகித உயர்வுகளை வரம்பிடுதல்
2. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் வாடகை அதிகரிப்பை இரண்டு சதவீதமாகக் கட்டுப்படுத்துதல்
3. பில்லியனர்கள் இந்தக் கொள்கைகளை ஆபத்து இல்லாத முதலீடுகளாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நெகடிவ் கியர் மற்றும் மூலதன ஆதாய வரி தள்ளுபடிகளைக் கட்டுப்படுத்துதல்.
4. ஆசிரியர்கள் , செவிலியர்கள், குழந்தை பராமரிப்புத் தொழிலாளர்கள் மற்றும் சராசரி $55,000 ஆண்டு வருமானம் ஈட்டும் தொழிலாளிகள் ஆகியோரால் வாங்கக்கூடிய விலையில் வீடுகள் கிடைக்க ஏற்பாடு செய்தல்
5. நல்ல தரமான வீடுகளை கட்டி வாடகைக்கு விட தேவையான அரசாங்கத்திற்குச் சொந்தமான வீட்டுக் கட்டுமான அமைப்பு முதலான பல திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம் .நாங்கள் பணக்காரச் சொத்து முதலீட்டாளர்களுக்காக அரசியல் செய்யவில்லை . அன்றாடம் பாடுபடும் சாதாரண பொதுமக்களால் இயக்கப்படுவது எங்கள் பசுமைக் கட்சி. செய்யவில்லை . அன்றாடம் பாடுபடும் சாதாரண பொதுமக்களால் இயக்கப்படுவது எங்கள் பசுமைக் கட்சி.
எதிரொலி : ஒரு புலம்பெயர்ந்தோர் சார்ந்த வேட்பாளராக, அனைத்து குடிமக்களுக்கும் நியாயத்தை உறுதி செய்யும் அதே வேளையில், புதிய ஆஸ்திரேலியர்களுக்கான குடியேற்ற செயல்முறை, வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் என்ன கொள்கைகளை ஆதரிப்பீர்கள்?
பழனியப்பன் : தொழிலாளர் மற்றும் தாராளவாத அரசாங்கங்கள் பெரும்பாலும் தங்கள் பணக்கார முதலாளிகளின் நலன் சார்ந்தே சிந்திப்பதால் , புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் அச்சத்தைத் தூண்டும் விஷயங்களில் எப்போதும் ஒருங்கிணைந்து செயற்படுகின்றன. சமீபத்தில், அல்பானீஸ் அரசாங்கம் டட்டனின் தாராளவாதிகளுடன் இணைந்துகொண்டு மிகக் கொடுமையான அகதிகள் எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு தொடர்பான மூன்று மசோதாக்களை விரைவாக நிறைவேற்றியது. ஆனால் பசுமைக் கட்சியினரான நாங்கள் ஆஸ்திரேலியா என்பது ஆயிரம் கலாசாரங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட புலம்பெயர் சமூகங்களின் நாடு என்று உறுதியாக நம்புகிறோம்.
முதலாவதாக, ஆஸ்திரேலியாவில் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்கும் ஒரு குடியேற்ற அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பசுமைக் கட்சி உறுதிபூண்டுள்ளது - அகதிகளை கண்ணியத்துடன் வரவேற்பது, புலம்பெயர்ந்த குடும்பங்களை நியாயமாக ஆதரிப்பது மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது.
இரண்டாவதாக, சுரண்டப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து திருடப்பட்ட ஊதியத்தை மீட்டெடுக்கத் தேவையான தீர்வுகளைத் தேடும் வகையில், நியாயமான பணிக் குறைதீர்ப்பு மையத்திற்கு தேவையான இலக்கு நிதியை ஈட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் . மேலும், இந்த நாட்டிற்குத் தேவையான வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் உள்ள இடைவெளிகளை நிரப்ப, ஒவ்வொரு புலம்பெயர்ந்தவருக்கும் அவர்களின் தனித்துவமான திறமைகளைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு தேவையான சுதந்திரம் அளிக்க விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு தேவைப்படும் வேலைவாய்ப்புகளை அணுகக்கூடிய வழிகளுக்கு நிதியளிப்பதன் மூலம்,திறன் பற்றாக்குறை இடைவெளியைக் குறைத்து, புதிய வருகையாளர்கள் தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலம் இதை அடைய விரும்புகிறோம்.
மூன்றாவதாக, ஆஸ்திரேலியாவின் இடம்பெயர்வு முறையானது தங்கள் அன்புக்குரியவர்களை பல தசாப்தங்களாக அல்லது துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இறக்கும் வரை என்றென்றும் பிரித்து வைத்திருக்கிறது, அதிக செலவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் 30 ஆண்டுகள் வரை தாங்க முடியாத காத்திருப்பு நேரங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன . மூன்று ஆண்டுகளுக்குள் குடும்பம் மற்றும் தம்பதியர் விசா விண்ணப்பங்களின் காலதேக்கத்தை நீக்குவதன் மூலம் குடும்பங்களை விரைவாக மீண்டும் ஒன்றிணைக்க விரும்புகிறோம்.
வேலை தேடுபவர் தகுதி வயதை 18 ஆகக் குறைப்பதன் மூலமும், வேலை தேடுபவர் விகிதங்களை அதிகரிப்பதன் மூலமும் இளைய ஆஸ்திரேலிய மாணவர்கள் நிதி உதவியைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் .
எதிரொலி : மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அல்லாடும் நிலை ஒரு நீண்ட கவலையாக உள்ளது. மருத்துவக் காப்பீட்டை வலுப்படுத்தவும், மனநலச் சேவைகளை மேம்படுத்தவும், அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் சமமான சுகாதாரப் பராமரிப்பு அணுகலை உறுதி செய்யவும் நீங்கள் எவ்வாறு பாடுபடுவீர்கள்?
பழனியப்பன் : பல் மற்றும் மனநல சேவைகளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைத்து, பொது மருத்துவமனைகளுக்கான ஆதரவை விரிவுபடுத்துவதன் மூலம் உண்மையிலேயே உலகளாவிய சுகாதார அமைப்பை உருவாக்க பசுமைக் கட்சியினர் விரும்புகிறார்கள். இவ்வாறாக நாம் திட்டங்களை செயற்படுத்தும்போது தற்போது பலர் மருத்துவ உதவி பெற பல்லாண்டுகள் காத்திருக்கும் நிலைமை மாறி ,துரித நேரத்தில் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும் .
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இளம்பருவத்தை வழங்க வேண்டும், , மேலும் காலநிலை மாற்றத்தின் உடல்நலப் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மேம்பட்ட மாத்திரை சோதனை உள்ளிட்ட மேம்பட்ட தீங்கு குறைப்பு உத்திகளை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் ஒரு தலைமை வாய்வழி மற்றும் பற்சுகாதார அதிகாரியை ஏற்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து காத்துக்கொள்ள முடியும்.. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ADHD மற்றும் ஆட்டிசம் நோயறிதல்களை நெறிப்படுத்தவும், நாடு முழுவதும் மனநல சேவைகளை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.
மது போன்ற பிற மருந்துகளைப் போலவே கஞ்சாவும், குற்றவியல் நீதி அமைப்பு மூலம் கையாளப்படுவதற்குப் பதிலாக உரிமம் பெற்று ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். தீங்குகளைக் குறைப்பதற்கும் பொது நன்மையை அதிகரிப்பதற்கும் மருத்துவ-கஞ்சாவை ஒழுங்குபடுத்துவதை பசுமைக் கட்சியினர் விரும்புகின்றனர் . தொழிற்கட்சி மற்றும் தாராளவாதிகள் இருவரும் எங்கள் "இலவச GP கொள்கையை" நகலெடுத்துள்ளதால், பசுமைக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் நீங்கள் மாற்றத்திற்கான பாதையை முன்வைக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.
எதிரொலி : நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் தொகுதியில் உள்ள எந்த குறிப்பிட்ட உள்ளூர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பீர்கள் . நாடாளுமன்றத்தில் அவற்றுக்காக எவ்வாறு வாதிடத் திட்டமிட்டுள்ளீர்கள்?
பழனியப்பன் : நீண்ட காலமாக, நான் மேற்கு சிட்னியை என் தாயகமாகக் கருதி என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இங்குள்ள பல்வேறு சமூகங்கள் எவ்வாறு பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகளை சமாளித்து வருகின்றன என்பதும் எனக்குத் தெரியும், ஏனென்றால் இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நானும் அனுபவித்திருக்கிறேன்; கட்டுமானர்களின் தவறான அணுகுமுறைகளால் இயக்கப்படும் பின்தங்கிய உட்கட்டமைப்பு ; பெருநிறுவனஒ பேராசையால் இயக்கப்படும் விலைவாசி உயர்வினால் ஏற்படும் பணவீக்கம் ; பெருநிறுவன பில்லியனர்கள் வரி ஏய்ப்பதனால் ஏற்படும் பொது நலநிதிக் குறைப்பு . இது போன்ற சிதைந்த அரசியல் அமைப்பால் ஏற்படும் சமத்துவமின்மையானது துன்பத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. எனவே கிரீன்வே தொகுதியில் வாழும் குடும்பங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பான மற்றும் வளமான வாழ்க்கைக்கான ஆஸ்திரேலியக் கனவு நழுவி வருகிறது.
முக்கியமான கட்சிகள் வாக்காளர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன. கிரீன்வே அவசர சிகிச்சை மருத்துவமனை கட்டுமானங்கள் ஏன் தேர்தலுக்கு மிக அருகில் நடக்க வேண்டும்? கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், பாண்ட்ஸ் மொபைல் டவர் மற்றும் டூங்காபி பாலத்திற்கான அறிவிப்புகள் ஏன் இப்போது நடக்க வேண்டும்?
இந்தத் தேர்தல் என்பது வாக்காளர்கள் மாற்றத்தை உறுதி செய்வதற்கான ஒரு தலைமுறைக்கு ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாகும். கிரீன்ஸுக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் அதிகார சமநிலையை வைத்திருக்க முடியும். அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் எங்கள் கொள்கைகளை தீவிரமாக செயற்படுத்த சிறுபான்மை தொழிலாளர் அரசாங்கத்தை எங்களால் கட்டாயப்படுத்த முடியும் . ஜூலியா கில்லார்ட் தலைமையில் நடந்த சிறுபான்மை அரசாங்கத்தின் காலத்தில் நாங்கள் சாதனை அளவில் 561 மசோதாக்களை நிறைவேற்றினோம், மேலும் எங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீட்டில் பல் மருத்துவத்தை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.அதன் அடுத்தகட்டமாக பல் மருத்துவத்தை அனைவருக்கும் சேர்க்க வேண்டிய நேரம் இது.
கிரீன்வேயில் எனக்கும் செனட்டில் மெஹ்ரீன் ஃபரூக்கிக்கும் #VOTE1FORGREENS அளிக்க சில காரணங்கள் இங்கே.
1. பெருநிறுவனங்களின் பேராசையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
2. கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துக்கு முழுமையாக நிதியளிக்கவும்.
3. கோடீஸ்வரர்கள் தங்கள் நியாயமானவரியினை செலுத்தச் செய்யுங்கள்
4. வீட்டுவசதியை ஆடம்பரமாக அல்ல, உரிமையாக ஆக்குங்கள்.
5. அவசர காலநிலை நடவடிக்கை பேரழிவுகளைக் குறைத்தல்
இறுதியாக, நமது நாடாளுமன்றம் நமது பன்முக சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனக்கு வாக்களிப்பதன் மூலம், நீங்கள் அதிக பிரதிநிதித்துவ நாடாளுமன்றத்தை உருவாக்க முடியும்.