விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கையில், விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து, மூவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடலின் வடக்கு பகுதியில் பெலிஸ் எனும் நாடு உள்ளது. இங்கு மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள கொரோசல் என்ற நகரத்தில் இருந்து சுற்றுலா தளமான சான் பெட்ரோசுக்கு ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணம் செய்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் சென்ற அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து விமானத்தை கடத்த போவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் விமானி மற்றும் 2 பயணிகளை அவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதை பார்த்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள்.
அப்போது கத்திக்குத்தில் காயம் அடைந்த பயணி ஒருவர் வலியை பொறுத்துக்கொண்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த இளைஞரை நோக்கி சுட்டார். இதில் அவன் விமானத்தில் சுருண்டு விழுந்து இறந்தார்.
அவரின் இந்த மிரட்டலால் விமானம் நடுவானில் சுமார் 2 மணி நேரம் திசை மாறி வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது. பின்னர் கடலோர நகரமான லேடிவில்லில் அந்த விமானம் பொலிஸ் ஹெலிகாப்டர் உதவுயுடன் பத்திரமாக தரை இறங்கியது.
உடனடியாக கத்திக்குத்தில் காயம் அடைந்த 3 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பொலிஸார் நடத்திய விசாரணையில் விமானத்தை கடத்தியவர், அகின் யேலா சாலா டெய்லர் என்பது தெரியவந்தது. எதற்காக அவன் விமானத்தை கடத்த முயன்றார் என தெரியவில்லை. அவர் விமானத்தில் கத்தியுடன் எப்படி ஏறினான் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.