9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக போப் போற்றப்படுகிறார்.
கடந்த 2013 மார்ச் 13-ம் திகதி 266-வது போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே போல் பிரான்சிஸ் உடல்நலமின்றி இருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், வைத்தியசிhலையில் சேர்க்கப்பட்டார். 38 நாள் சிகிச்சைக்கு பிறகு, உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், கடந்த மார்ச் 23-ம் திகதி வத்திக்கான் திரும்பினார்.
வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் போப் பிரான்சிஸ் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சுவாச பிரச்சினை, சுவாச பாதையில் தொற்று, நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில், உடல்நலம் தேறிய நிலையில், மீண்டும் வத்திக்கான் இல்லத்துக்கு திரும்பினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு மறுநாளான நேற்று காலை 7.35 மணி அளவில் வாடிகனின் உள்ள தனது இல்லத்தில் போப் பிரான்சிஸ் காலமானார்.
இதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்கு போப் மறைவு செய்தியை கார்டினல் கெவின், முறைப்படி தெரிவித்தார். இதையடுத்து போப் பிரான்சிஸ் மறைவுக்காக உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் துக்க மணி ஒலிக்கப்பட்டது.
வழக்கமாக போப் மறைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, வத்திக்கான் நிர்வாக பொறுப்பை கார்டினல்கள் குழு ஏற்கும். அதன்படி, தற்போது அக்குழுவினர் வாடிகன் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளனர். போப்பின் இறுதிச் சடங்கு மற்றும் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை இவர்கள் மேற்கொள்வார்கள். போப் மறைந்தது முதல் புதிய போப்பை தேர்ந்தெடுப்பது வரை இடைக்கால நிர்வாகத்தில் வத்திக்கான் இருக்கும்.
போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, வத்திக்கானில் அவர் வாழ்ந்த இல்லம் பூட்டப்பட்டது. தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப் இறுதி சடங்கு 4 முதல் 6 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும். வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.