பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது எனக் கூறப்படுகின்றது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் திகதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பெப்ரவரி 14-ம் திகதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 2019-ம் ஆண்டு பெப்ரவரி 26-ம் திகதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த முறை பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம். இல்லையெனில் ட்ரோன்கள் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் தற்போது குஜராத் கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து நேற்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது.