(சிறுவர் இலக்கியத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் முத்து காமிக்ஸ் படைப்புகளை தமிழில் உருவாக்கிய சிவகாசியைச் சேர்ந்த திரு. சௌந்தரபாண்டியன் அண்மையில் (27.03.2025 )காலமானார். அவரின் நினைவாக இந்த ஆக்கம் பிரசுரமாகிறது)
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சுவராசியமாக விரும்பிப் படிக்கும் சித்திரக்கதை புத்தகங்களில் முத்து காமிக்ஸ் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது. அந்தக் கதைகளில் அனைவருக்கும் பிடித்த துப்பறியும் வீரர் இரும்புக்கை மாயாவியின் கதைகள் இன்னமும் பலருக்கும் நினைவில் இருக்கும்.
முத்து காமிக்ஸ் கதாநாயகர்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த முத்து காமிக்ஸ் படைப்புகளை தமிழில் உருவாக்கிய திரு. சிவகாசி சௌந்தரபாண்டியன் அண்மையில் 27.3.2025 அன்று காலமானார்.
பல கதாநாயகர்களை கற்பனையால் உருவாக்கி எங்களது இளமைப் பருவத்தில் எங்களுக்கு சினிமா வாய்ப்பில்லாத பொழுது பொழுது போக்கை உருவாக்கித் தந்த பெருமை மறைந்த சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு உரித்தாகும்.
எழுபதுகளில் பள்ளிப்பருவத்தில் முத்து காமிக்ஸ் புத்தகங்களுக்கு அடிமையான சிறுவர்களே அதிகம் எனலாம். அத்துடன் தமிழ் வாசிப்பும், எழுத்தும் நல்லபடியாக முன்னேற்ற அமைந்ததில் முத்து காமிக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளதெனில் மிகையல்ல.
சிறுவயதில் வாசிப்புத் திறனை மேம்படுத்திய நூல்கள் பல. குறிப்பாக இரும்புகை மாயாவி, மாயாஜால மன்னன் மான் ரக், காட்டுலக வேதாள மாயாவி, துப்பறியும் ரிப் கர்வி போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் சிறுவர்களுக்குள் ஊடுருவி இன்றளவும் பசுமையாக இருக்கும் சித்திரக் கதை காமிக்ஸ் கதாபாத்திரங்கள் சிலவாகும்.
முத்து காமிக்ஸ் பதிப்பகம்:
தமிழ் நாட்டில் முத்து காமிக்ஸ், பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து வெளிவந்த ஒரு சித்திரக் கதை இதழாகும். சிவகாசியில் சௌந்தரபாண்டியன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட முத்து காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்தும் அவரது மகன் எஸ்.விஜயனினால் கொண்டு நடத்தப்பட்டது.
நீண்ட காலமாக பல்வேறு வகையான தமிழ் வரைகதைப் புத்தகங்களும் வெளிவருவது நின்றபின்னாலும் முத்து காமிக்ஸ் நீண்டகாலமாக வெளிவந்தமை குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
லயன் காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் ஆகிய சித்திரக்கதை இதழ்கள்ளையும் பிரகாஷ் பதிப்பகத்தாரே பதிப்பித்து வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முத்து காமிக்ஸ் முதலில் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. முத்து காமிக்ஸின் முதலாவது புத்தகம் இரும்புக்கை மாயாவி எனும் தலைப்பில் வெளிவந்தது. 128 பக்கங்களை கொண்டிருந்த அந்த முதல் புத்தகம் இந்திய 0.90 பைசாவிற்கு விற்கப்பட்டது. இதன் பின்னர் சௌந்தரபாண்டியனின் மகனான விஜயன் என்பவர் தந்தையைப் போலவே தானும் லயன் காமிக்ஸ் எனும் புதிய சித்திரக்கதை இதழை 1984 இல் வெளியிட்டார். லயன் காமிக்ஸின் முதல் இதழ் மாடஸ்டி பிளைசி எனப்படும் பிரிட்டிஷ் காமிக்ஸ் கதாநாயகியைக் கொண்டு “கத்தி முனையில் மாடஸ்டி” எனும் தலைப்பில் 2.00 ரூபா விலையில் வெளிவந்தது.
லயன் காமிக்ஸ் தொடங்கிய சமயத்தில் அதன் பதிப்பு ஆசிரியர் விஜயனின் வயது 17 மட்டுமே. ஆனாலும் லயன் காமிக்ஸை வெற்றிகரமாக நடத்திய விஜயன் பின்னர் முத்து காமிக்ஸையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து திகில், மினி லயன் போன்ற காமிக்ஸ் இதழ்களையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார் விஜயன்.
பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை:
எந்த வித விஷத்தையும் குழந்தைகள் மனதில் விதைக்காத அருமையான வரைகதைப் புத்தகங்களே இந்த காமிக்ஸ் புத்தகங்கள் ஆகும். தமிழ் கற்க குழந்தைகளுக்கு இதுதான் சிறந்த நூல் என்றும் சொல்லலாம். தமிழ்ப் பாடத் திட்டத்தில் ஒரு அம்சமாக சேர்க்கப்பட வேண்டிய புத்தகங்கள் முத்து காமிக்ஸ் எனவும் தமிழ் நாட்டில் ஓர் கோரிக்கை எழுந்தது.
இரும்புக்கை மாயாவி, ரிப் கெர்பி மாயாஜால மான்ரொக் என எத்தனை எத்தனையோ பாத்திரங்கள் படைக்கப்பட்டன. பால்ய வயதிலே சித்திரக் கதைகள் மூலம் அந்தக் காலங்களில் சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்துக்கு தீனி போட்டவை இந்த நூல்கள் எனலாம்.
அதேவேளை அந்த நேரத்தில் பொன்னி காமிக்ஸ் போன்ற பெயர்களிலே வேறு பல காமிக்ஸ் நூல்களும் வெளிவந்தன.ஆனால் முத்து காமிக்ஸ் வெளியீடுகளில இருந்த சித்திரங்களின் நேர்த்தி, மொழிபெயர்ப்பின் தரம் வேறு எந்த வெளியீடுகளிலும் இருக்கவில்லை என்பதால் சிறுவர்கள் விருப்பத்திற்குரியதாகமுத்து காமிக்ஸ் புகழ் பெற்றது.
தினத்தந்தியின் ராணி காமிக்ஸ்:
1984 காலப்பகுதியில் லயன் காமிக்ஸுக்குப் போட்டியாக ராணி காமிக்ஸ் தமிழில் அறிமுகம் ஆகியது. ராணி காமிக்ஸை தினத்தந்தி நிறுவனத்தார் பதிப்பித்தனர்.
ஆயினும் 2005 ஆம் ஆண்டளவில் வாசிப்பு பெருமளவில் நலிவடைந்து ராணி காமிக்ஸ் வெளியீடு நிறுத்தப்பட்டது.
குறிப்பாக 2000 ஆண்டின் தொடக்கத்தில் கேபிள் டிவி, இண்டர்நெட், வீடியோ கேம்ஸ், சினிமாக்களின் வருகையின் தாக்கம் காரணமாக வாசிப்பு பழக்கம் குறைந்து போனது எனவும் கணிக்கப்படுகிறது.
வாசகர்கள் குறைவு காரணமாக கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், பாலமித்ரா, மேத்தா காமிக்ஸ், அசோக் காமிக்ஸ் போன்ற தமிழ் சிறுவர் மாத இதழ்கள் அனைத்தும் ஒரு காலகட்டத்தில் நின்று போயின.
அம்புலிமாமா எனும் சிறுவர் இதழ் 2013 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்து நின்று போனது. எனினும் லயன் காமிக்ஸும்,முத்து காமிக்ஸும் இன்றளவும் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பெருமளவில் வாசிப்பு குறைந்து போனதால் லயன் காமிக்ஸ் முன்பு போல கடைகளில் பெரும்பாலும் விற்கப்படுவதில்லை. ஆண்டு சந்தா வழியாகவும், புத்தகக் கண்காட்சி விழாக்களிலும் மட்டுமே லயன், முத்து காமிக்ஸ் என்பன விற்கப்படுகின்றன.
முத்து காமிக்ஸ் நாயகர்கள் :
முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா போன்ற இதழ்கள் ஒவ்வொரு குழந்தையும் நல்லவனாக கதாநாயகனாக மாற்ற அடித்தளம் அமைத்தன. 1970களில் குழந்தைகளின் முதல் பொழுதுபோக்குத் தேர்வு முத்து காமிக்ஸ் எனலாம்.
இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் , மான் ரொக் , லோதார், குதிரை வீரன் கிஸ்கோ கிட், போன்ற பல மனதில் நிறைந்த கதாபாத்திரங்கள் இன்றும் சிறுவர் மனதில் நிறைந்துருக்கும் . வேறு ஊடக வசதிகள் இல்லாத காலத்தில் இந்த கதை நூல்களே இளம் வாசகர்களை மகிழ்வித்த காலமாகும்.
இத்தகைய காமிக்ஸ் புத்தகங்களிலேயே முறையான, சிறப்பான படங்கள் வரையப்பட்டு இருக்கும். அதிலும் இரும்புக்கை மாயாவி கதைகள் மறக்க முடியாது. அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கென்ற தனி உலகைப் படைத்தது இந்த முத்து காமிக்ஸ்.
ஆனாலும் பெரும்பாலான காமிக்ஸ் கதைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெளிவந்த கதைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பிரிட்டிஷ் சிறுவர் இதழான ப்ளீட்வே பதிப்பகத்தின் பிரதம நாயகர்கள் முத்து காமிக்ஸில் முக்கியமான நாயகர்களாக வலம் வந்தனர். இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, C.I.D. லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, சார்லி, மாண்ட் ரொக், பிலிப் காரிகன், போன்ற மிகவும் பிரபலமான ஆங்கில காமிக்ஸ் பத்திரங்கள் முத்து காமிக்ஸில் தொடர்ந்து வந்தனர்.
பின்னாளில் பெல்ஜியத்தின் மிகப் பிரபலமான கேப்டன் டைகர், லார்கோ வின்ச், தோர்கல், ரிப்போர்டர் ஜானி, ப்ளூகோட் பட்டாளம், சிக் பில் ஆகிய நாயகர்களும் முத்துவில் தொடர்ந்து வந்தனர், இத்தாலியின் போனெல்லி பதிப்பகத்தின் டிடெக்டிவ் ராபின், மர்ம மனிதன் மார்டின் போன்ற நாயகர்களும் முத்து காமிக்ஸில் இடம் பெற்றனர்.
வாழ்ந்த காலம் மீண்டும் வருமா?
முத்து காமிக்ஸ் 1970களில் இன்றைய ஸ்மார்ட் போன் போல அந்த காலகட்டங்களில் சிறுவர்களின் கரங்களில் தவழ்ந்தன. குறிப்பாக இரும்புக்கை மாயாவியை எடுத்தால் படித்து முடித்த பின்னரே கீழே வைக்கமுடியும். அந்தளவுக்கு விறுவிறுப்பான கதையம்சத்தோடும், படங்களோடும் இருக்கும்.
1970களில் சிறுவர்களாக இருந்த யாரும் முத்து காமிக்ஸ் படிக்காமல் இருந்திருக்க முடியாது. தஒலைக்காட்சி இல்லாத நாட்களில் முத்து காமிக்ஸ் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். அத்துடன் முத்து காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற புத்தகங்களை படித்த காலம் பொற்கால மாகும்.