கடந்த புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்" மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இது எப்படி நடத்தப்பட்டது என்று குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இப்போதைய நிலையில் ராணுவ நடவடிக்கையின் முழுமையான விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தி உள்ளார்.
எனினும் ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து பாதுகாப்பு துறை சார்ந்த சர்வதேச ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டு உள்ளன.
கடந்த 3-ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் முப்படை தளபதிகள் விரிவான ஆலோசனை நடத்தினர்.
அப்போது இந்திய உளவு அமைப்பான ரா-வின் சார்பில் பாகிஸ்தானில் செயல்படும் 21 தீவிரவாத முகாம்கள் குறித்த பட்டியல் அளிக்கப்பட்டது. இதில் மிக முக்கியமான 9 தீவிரவாத முகாம்கள் தேர்வு செய்யப்பட்டன.
அந்த தீவிரவாத முகாம்களை அழிப்பது தொடர்பான வியூகங்கள் கடந்த 6-ம் திகதி வகுக்கப்பட்டது. இந்திய எல்லை அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களை ட்ரோன்கள் மூலமும் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்களை போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகளை வீசியும் அழிக்க முடிவு செய்யப்பட்டது.
வான்வழி தாக்குதல் குறித்த வியூகங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது இந்திய ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்' என்று பிரதமர் மோடி பெயரிட்டார். மேலும் தாக்குதலுக்கான திகதியும் இறுதி செய்யப்பட்டது.
இதன்படி கடந்த புதன்கிழமை அதிகாலை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 5 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தானில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்நகரில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் செயல்பட்டன.
இரு முகாம்களும் இந்திய எல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளன. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி நகரில் லஷ்கர் இ தொய்பாவின் 2 முகாம்கள் செயல்பட்டன. இந்த இரு முகாம்களும் இந்திய எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளன. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிம்பெர் நகரில் லஷ்கர் இ தொய்பாவின் முகாம் செயல்பட்டது.
இந்திய எல்லை அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட இந்த 5 தீவிரவாத முகாம்கள் மீதும் ட்ரோன்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதில் 5 முகாம்களும் முழுமையாக அழிந்தன. ஏராளமான தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாவல்பூரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாத முகாம் செயல்பட்டது. இது இந்திய எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது. அதே மாகாணம், முரித்கே நகரில் லஷ்கர் இ தொய்பாவின் முகாம் செயல்பட்டது. அதே மாகாணம் சியால்காட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பாவின் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டன.
பாகிஸ்தானில் அமைந்துள்ள இந்த 4 தீவிரவாத முகாம்கள் மீதும் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் மூலம் நீண்ட தொலைவு பாயும் ஸ்கால்ப் -இஜி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 4 தீவிரவாத முகாம்களும் தரைமட்டமாகின. ரஃபேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. இந்திய எல்லையில் இருந்தே 24 ஏவுகணைகள் அடுத்தடுத்து சீறிப் பாய்ந்தன.
பிரான்ஸ், பிரிட்டன் கூட்டு தயாரிப்பான ஸ்கால்ப்-இஜி ஏவுகணைகளை ரேடாரில் கண்டறிவதோ, இடைமறித்து அழிப்பதோ மிகவும் கடினம். இந்திய விமானப் படைக்கு பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கியபோது இந்த ஸ்கால்ப் -இஜி ஏவுகணைகளும் வாங்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்ட 5 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் அழித்தது. இதேபோல பாகிஸ்தானில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. ஆக்கிமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ட்ரோன்
கள், தற்கொலை ட்ரோன்கள் ஆகும்.
இவை சம்பவ இடத்திலேயே வெடித்துச் சிதறிவிடும். இந்திய விமானப் படையின் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. இதனால் இந்திய போர் விமானங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இவ்வாறு இந்திய, சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.