இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் எனவும், பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
" கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது.
நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நமது சகோதரிகள், மகள்களின் குங்குமத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் தௌ;ளத் தெளிவாக இப்போது உணர்த்தப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி." - எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
கடந்த 7ஆம் திகதி அதிகாலை பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டன. இதுபோன்ற தண்டனையை அவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், லண்டன் சுரங்கப் பாதை ரயில்கள் மீதான தாக்குதல், பஹல்காம் தாக்குதல் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான சதித் திட்டங்கள் அனைத்தும் பாவல்பூர், முர்டேவில் உள்ள தீவிரவாத முகாம்களில் தீட்டப்பட்டன.
எனவே அங்கு செயல்பட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமை அலுவலகங்களை அழித்து தரைமட்டமாக்கி உள்ளோம். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் பெரும் எண்ணிக்கையில் ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவியது. அவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை மட்டுமே தாக்க முடிந்தது. ஆனால் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் இதயத்தின் மீதே தாக்குதல் நடத்தியது." எனவும் மோடி சூளுரைத்துள்ளார்.