ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
படகில் ஏறினோம்
படகுகளை விற்று
இங்கே வீடு கிடைப்பதற்குள்
அங்கே நாடு கிடைத்துவிடும்
இராமேசு வரத்தில்
எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள்
குதித்துக் கரையேறுகிறோம்.
கவிஞர் அறிவுமதி
வெகு நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட The Visitor எனும் ஆங்கிலத்திரைப்படம் பார்த்தேன். அந்த படம் சட்டவிரோதமாக குடியேறிய புலம்பெயர்ந்த அகதிகளுக்கும் , அந்த மண்ணில் வாழும் ஒரு வெள்ளையருக்கும் ஏற்படும் இயல்பான அன்பையும், எவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மிகக்கொடூரமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் மிக நன்றாக காட்டியிருப்பார்கள் .
கண்ணீர் சிந்தும் வசனங்களோ , மிகைப்படுத்தப்பட்ட சோகத்தை வரவழைக்கும் காட்சிகளோ இன்றி மிக இயல்பாக செல்லும் ,நமது மனத்தினுள்ளே நுழைந்து நம்மை சில நாட்கள் தொந்தரவு செய்யும் படம்.
அந்த மாதிரி படங்களையெல்லாம் பார்த்துவிட்டு , Tourist Family எனும் இந்த தமிழ்ப்படத்தில் ட்ரைலரில் இலங்கைத்தமிழ் பேசும் பாத்திரங்களை பார்த்துவிட்டு ,இயல்பான திரைப்பத்தை மகா எதிர்பார்த்து சென்றேன். ஆனால் இது மற்றைய தமிழ்ப்படங்களைப் போல் இதுவும் சாதாரணமான மசாலா திரைப்படமாக முடிந்துவிட்டதை எண்ணி வருத்தம் தான்,
இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் ஈழத்தமிழர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை என் வாழ்வில் கண்ட அனுபவங்களை இங்கே சொல்லிவிடுகிறேன்.அப்பொழுது தான் உண்மைக்கும் ,சினிமாவுக்கும் எவ்வளவு தூரம் என்பது விளங்கும் . எங்கள் ஊரில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென்ற தனி காலனி இருக்கிறது , அதன் பெயர் சிலோன் காலனி. அங்கே நான் சென்றிருக்கிறேன்.
மக்கள் வாழவே முடியாத ஊருக்கு வெளியில் வெகுதொலைவில் அவர்களுக்கென்றே தனி ஊர் அமைத்துக்கொடுத்திருந்தார்கள் . இப்பொழுது அந்த பகுதியில் எல்லோரும் ஊடுருவி விட்டார்கள் . நானே நேரடியாக பார்த்திருக்கிறேன். ஈழத்தமிழர் வேலைக்கு வந்தால் கூலி மிகவும் குறைவாகவே கொடுப்பார்கள். அது மட்டுமின்றி இப்போது நாம் எப்படி வடக்கன்களை நடத்துகிறோமோ அப்படித்தான் அவர்களையும் மதித்திருக்கிறோம். இப்போது நிலைமை மாறியிருக்குமா என்று தெரியவில்லை.
நான் கல்லூரியில் படிக்கும்போது என்னுடன் ஒரு மாணவன் படித்தான் .அவன் ஈழத்தமிழர் வகையில் அவனுக்கு பொறியியல் படிப்பு கிடைத்ததால் மற்ற மாணவர்கள் அவனை கோட்டா மாணவன் என்று அழைப்பார்கள். அது மட்டுமின்றி அவன் நல்ல மதிப்பெண்கள் இருந்தபோதிலும் கல்லூரியில் நடைபெற்ற எந்த வளாக நேர்காணல்களில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலைதான். இது தான் நிதர்சன நிலைமை . நான் கூறுவதெல்லாம் நடந்தது ஒரு 25 வருடங்களுக்கு முன்பு. இப்பொழுது நிலைமை எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தவரை பெரியதாய் ஒரு மாற்றமும் இல்லை. இந்தியா குறிப்பாக தமிழகம் வராமல் மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
படத்தின் கதைச்சுருக்கம் எல்லாம் முகநூல் திடீர் விமர்சகர்களும், யூடுப் சுடச்சுட சூறாவளி விமர்சனம் தருபவர்களும் ஏற்கெனவே செய்துவிட்டதால் நான் இந்தப்படம் ஏன் எனக்கு பிடிக்காமல் போனது என்றும் ,ஒரு நல்ல படமாவதற்கு எவ்வளவோ வாய்ப்பு இருந்தபோதும் ஏன் சறுக்கியது என்பதையும் இங்கே விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். முதலில் பாத்திரத்தேர்வு - சசிகுமார் ,சிம்ரன் மற்றும் அவர்களின் இரண்டாவது மகனாக வருபவரும் கொஞ்சம் கூட இந்த படத்தில் ஒட்டவில்லை. அவர் மூத்தமகனாக நடித்தவர் மட்டும் தான் ஓரளவில் ஈழ பாத்திரத்தோடு ஒன்றியிருப்பதாக இருந்தது. சசிகுமாருக்கு பதில் குரு .சோமசுந்தரம் அவர்களை பயன்படுத்தியிருக்கலாம். வெகு இயல்பாக பொருந்தியிருப்பர். நமக்கெல்லாம் தெரியும் தானே ,சசிகுமார் அவர்களுக்கு முகத்தில் எந்த உணர்ச்சிகளும் வராதென்று. எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே போன்று முகபாவனை அளிப்பவர் என்று.
இரண்டாவது இந்த படத்தில் ஈழத்தமிழ் என்ற பெயரில் எல்லாருக்கும் புரியவேண்டும் என்பதற்காக ஒரு வெகுஜன தமிழ்ச்சினிமா மொழியில் கொஞ்சம் சிலோன் தமிழ் வார்த்தைகளை கலந்துவிட்டு ஈழத்தமிழ் என்று ஜல்லியடித்திருக்கிறார்கள். வெகு செயற்கையாக இருக்கிறது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு படம் வணிக ரீதியில் ஓட வேண்டுமென்பதற்காக ஏகப்பட்ட சமரசம் செய்திருக்கிறார். படகில் இருந்து வெகு இயல்பாக குதித்து வருகிறார்கள் சசிகுமார் தம்பதிகள் .அவர்களைப் பார்த்தல் எங்கோ தீர்த்தயாத்திரை போய்விட்டு ரொம்ப கூலாக வருகிறார்கள். படம் ஆரம்பித்த்திலிருந்து இறுதி வரை அவர்களுக்கு எந்த பதட்டமும் இல்லை. அதனால் தான் என்னவோ இந்த படத்திற்கு டூரிஸ்ட் பேமிலி என்று பெயர் வைத்தார்களோ என்னவோ. தெரியவில்லை.
படம் சோர்வடையாமல் வெகு விரைவாக முடிய வேண்டும் ,பார்வையாளன் ஒரு நிமிடம் யோசிக்க கூடாது அல்லது அவனது கவனம் கையிலுள்ள செல்பேசிக்கு செல்லக்கூடாது என்பதால் 2.15 மணி நேரம் காமெடி காட்சிகள் வைத்து நகர்த்தியிருக்கிறார்கள் . இங்கே எங்கே அய்யா ஈழத்தமிழனின் சோகமும் ,வலியும் ,வேதனையும். சோக ரசம் பிழியவேண்டாம் .ஆனால் இரண்டொரு காட்சிகள் அமைத்திருக்கலாம். செய்யவில்லை.
ஒரு ஒரு காட்சியில் மட்டும் ,தர்மதாஸ் (சசிகுமார் ) மூத்தமகன் நிதுசன் தனது கவலையை தெரிவிக்கிறார். அது கூட பிற்பாடு கேலி செய்து பாட்டு பாடி ,நடனம் ஆடி களைந்து விடுகிறார்கள். தர்க்கம் என்பதை நாம் அனுவளவிற்கும் எதிர்பார்க்க கூடாது என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இந்த படத்திலும் அது வலுவாக காப்பாற்றப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரம் காவல்துறையினர் cctv காணொளி கிடைத்த போதிலும் பல நாட்கள் எடுக்கிறார்கள் சசிகுமார் குடும்பத்தை கண்டடைவதற்கு. போலீஸ் கமிஷனர் ஏதோ ஒரு வழிப்பறி கொள்ளையனை தேடி வந்தது போல ஒவ்வொரு வீடு வீடாக சென்று சசிகுமார் குடும்பத்தினரை தேடுகிறார்கள்.
CCTV யில் சசிகுமார் முகம் தெரிந்தபோதிலும் அவரை அடையாளம் காட்ட ஒரு போலீஸ்காரரை கூட்டிச் செல்வதன் மூலம் தமிழ்நாடு போலீஸ் தனது டிபார்ட்மெண்ட் தவிர வேறு யாவரையும் நம்பாது என்பதை சுட்டிக்காட்டிய இயக்குனருக்கு நன்றி. அநியாயத்திற்கு எல்லோரும் நல்லவராக இருக்கிறார்கள் அல்லது அடிமுட்டாளாக இருக்கிறார்கள் .ஒரே ஒருவர் மட்டுமே கெட்டவர். ,அவரும் வடக்கிந்தியாவை சேர்ந்தவர். இதன் மூலம் இயக்குனரின் திராவிடப் பற்றை அறிந்துகொள்ள முடிகிறது.ஒரு கட்டத்தில் நாம் ஏதோ விக்ரமன் படம் பார்க்கிறோம் என்ற பிரேமை வருவது வெகு இயல்புதான்.
என்னப்பா ,குறைகளே சொல்கிறாயே நிறைகள் இல்லையா என்று கேட்கலாம். கண்டிப்பாக இருக்கிறது. இந்தப் படத்தின் கதைக்களம் மிகப் புதியது. இன்னும் நன்றாக உண்மையைச் சொல்லும் படமாய் எடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் தான். இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் குடிகாரர் கதாபாத்திரத்தில் வருவது ,தீடிரென அவர் திருந்தி நல்லவராகி சசிகுமார் அவர்களை புகழ்ந்து தள்ளுகிறார். ஆனால் அவரின் flashback காட்சிகள் வெகுஇயல்பாக இருந்தது.படத்தின் பாடல்கள் எல்லாம் துருத்திக்கொண்டிராமல் இயல்பாக இருப்பது ஒரு ஆறுதல்.
படத்தின் பலம் எம்.ஜே .பாஸ்கர் மற்றும் இளங்கோ குமரவேல் கதாபாத்திரங்கள். இன்னும் நன்றாய் யதார்த்தமாக அமைத்திருந்திருக்கலாம். நந்தா , தெனாலி மற்றும் நளதமயந்தி போன்ற ஏனைய தமிழ் படங்கள் போன்றில்லாமல் வெகு கண்ணியமான மனிதர்களாக இலங்கைத்தமிழர்களை காட்டியதற்காக இயக்குனரை பாராட்டலாம். கத்தி போன்ற கூர்மையான வசனங்கள் குறிப்பாக எம்.ஜே .பாஸ்கர் பேசும் ஒரு வசனம் , " இப்போ நான் என்ன மாதிரியான தமிழ் பேசுகிறேன் என்பது பிரச்சினையா ? இல்லை தமிழில் பேசுகிறதே உனக்கு பிரச்சினையா " என்று வடக்கிந்திய காவல்துறை அதிகாரியைப் பார்த்து கேட்குமிடம்.
சில வருடங்களுக்கு முன்பு என் நண்பரின் குடும்பத்தோடு NSW மாகாணத்திலுள்ள ஒரு கடற்கரை நகருக்கு சுற்றுலா சென்றோம். அப்போது அந்த குடும்பமானது மளிகைக்கடைப் பட்டியல் போல் ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டே சென்றார்கள். எங்களுக்கென்றால் பயங்கர கோபம். என்னடா இது சுற்றுலா என்றால் காலாற அமர்ந்துகொண்டு இயற்கையை ரசிக்க வேண்டும் .ஒரு கட்டத்தில் ஒரு கப்பல் பயணத்தை நாங்கள் அவர்களோடு தவறவிடும் சூழ்நிலை அமைந்துவிட்டது.
அப்பொழுது நாங்கள் காரை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஒரு குடாவிற்கு சென்றோம்.அற்புதம் . நீலவானம் ,நீலக்கடல் ,தெளிந்த நீர் , நீருக்கடியில் மண் மற்றும் பச்சை பாசிகள். என்னவொரு இயற்கையின் அதிசயமென்று அடுத்த மூன்று மணிநேரம் அந்த கடற்கரையிலேயே இருந்தோம். இத்துணை வருடம் கழித்தும் அந்த நீல வண்ணம் என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது. இதைப்போன்ற ஒரு அனுபவத்தை எண்ணித்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். ஆனால் அது ஒரு மளிகைக்கடைப் பட்டியல் போல் எல்லாவித சமரசங்களையும் உள்ளடக்கி ஒரு கனகச்சித வணிகப்படமாக ஆனதில் வருத்தமே எஞ்சுகிறது.