மாவை நித்தியானந்தன்
இலங்கையில் இளையோரின் தற்கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. அண்மையில் கொழும்பில் ஏழாம் மாடியிலிருந்து குதித்து, டில்ஷி அம்சிகா என்ற பாடசாலை மாணவி மரணமடைந்தார். இந்தத் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்த நிகழ்வுகள், பாலியல் துன்புறுத்தலுடன் ஆரம்பித்துள்ளன. இந்த மாணவியின் மரணத்துக்கு யார் யாரெல்லாம் பொறுப்பு என்ற கேள்வி, நாடெங்குமுள்ள பெற்றோர் மத்தியில் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
இந்த மரணம் பற்றிய தகவல்கள், செய்திகளாகவும், அபிப்பிராயங்களாகவும், வதந்திகளாகவும் குவிந்துள்ளன. டிசம்பர் மாதத்தில் தொடங்கிய பிரச்சினையை அதிகாரிகள், ஏற்ற முறையில் கையாளாததால் தான், ஏப்ரல் 29 திகதித் தற்கொலை நடந்துள்ளது என்பது பலரும் கொண்டுள்ள கருத்து.
இந்த மாணவி படித்த பாடசாலை, பம்பலப்பிட்டியில் உள்ள இந்து மகளிர் கல்லூரி. மாணவியைப் பரிசீலித்த வைத்தியர்கள் காவல் துறைக்குச் செய்த முறைப்பாட்டின் பேரில், கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். பாடசாலையைப் பொறுத்தவரை, கதை அத்துடன் முடிந்தது போலாயிற்று. (இலங்கையில் சட்டமும், நீதியும் அமுலாகும் விதம் தெரிந்தது தானே? பணம், அதிகாரம், அரசியல் - இவைதான் நீதியின் ‘காவல் நாய்கள்’).அதிபருக்கோ பாடசாலையின் நற்பெயரும், தனக்கு நட்பான ஆசிரியரும் தான் முக்கியம். பிள்ளை எக்கேடு கெட்டாலென்ன?
ஏற்கனவே பாதிக்கப்பட்ட அம்சிகா, பாடசாலையில் பலவிதமான உளரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆசிரியத் தொழிலுக்கே அவமானச் சின்னங்களாக இருக்கக்கூடிய பல ஆசிரியர்கள், அரக்கத்தனமாக நடந்துகொண்டனர். கொழும்புத் தமிழ்ப் பெற்றோர் மத்தியில் ஒரு நோய் இருக்கிறது. ஒரு மாணவி பாதிக்கப்பட்டால், தங்கள் தங்கள் பிள்ளைகளைத் தூர விலக்கி, வேலி போட்டுவிடுவார்கள். அந்த மாணவியுடன் பழகவோ, உரையாடவோ கூட விட மாட்டார்கள். இவையெல்லாம் அம்சிகாவை உளரீதியாக வருத்தின. நண்பர்களையும் இழந்து, இயல்பாகவே அவர் மன அழுத்தத்துக்கும் ஆளானார்.
கணித ஆசிரியர் உற்சாகமாகப் பாடம் நடத்த, மாணவி பாடசாலையை விட்டு வெளியேறி இன்னொரு பாடசாலையில் சேர வேண்டியதாயிற்று. குசுகுசுப் பேச்சுக்காரர்களும், பூராயம் தேடுவோரும் அவளை அங்குகூட விட்டு வைக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல், அவள் மாலையில் படிக்கச் சென்ற பிரத்தியேகக் கல்வி நிலையத்தின் பொறுப்பாளர் (ஒரு அரசியல்வாதி), எல்லோருக்கும் முன்நிலையில் மரியாதையற்ற வார்த்தைகளைப் பிரயோகித்தது மட்டுமன்றி, இனிமேல் கல்வி நிலையத்துக்கு வரவேண்டாமெனவும் கூறியதாகத் தாயார் தெரிவித்திருக்கிறார். இதுவே அம்சிகாவின் மீது விழுந்த பலமான இறுதி அடி.
மாணவி இறந்த பிறகுதான், மற்றவர்கள் விழித்தெழுந்தார்கள். பாடசாலை முன் மக்கள் அணி திரண்டது. சமூக வலைத் தளங்களில் பூகம்பம் வெடித்தது. பாராளுமன்றத்துக்குள்ளும் கூக்குரல் கேட்டது. இந்தச் சத்தத்தில் தான், அதிகாரிகளின் தூக்கமும் ஒருவாறு கலைந்தது. இடமாற்றமென்றும், வேலை இட நிறுத்தமென்றும், விசாரணை என்றும் பலவித ஆலாபரணங்கள்.
இந்த இழிநிலைக்குக் காரணமென்ன? எங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?ஒன்று: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அது முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். (இதற்குப் பொறுப்பாக இருக்கும் அமைச்சரின் மனோபாவமும் மாறவேண்டும்.)
இரண்டு: பாடசாலை அதிபர் என்பது மிக முக்கியமான பொறுப்பு. தகுதி இல்லாதவர்கள், தலைமை வகிக்கத் தெரியாதவர்கள் அகற்றப்பட வேண்டும் (“எல்லாருக்கும் பதவி உயர்வு” என்ற பழைமை வாதத்திலிருந்து விடுபட வேண்டும்.)
மூன்று: பிள்ளைகள் பாதுகாப்பு என்பது ஒரு சில்லறை விடயமல்ல. பிள்ளைகளின் நலனுக்கு, எத்தனையோ திசைகளிலிருந்து,எத்தனையோ விதமான அச்சுறுத்தல்கள் உள்ளன. இலங்கை, முன்னேறிய நாடுகளிலிருந்து படித்தல் வேண்டும். ஒரு முழுமையான பிள்ளைகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். வெறுமனே ஒரு அதிகார சபை மட்டும் இருந்து, ஒன்றும் செய்ய முடியாது. முழுமையான தீர்வு அவசியம்.
இறுதியாக ஒன்று. மரணித்த ஒரு அம்சிகாவை மட்டுமே நாம் அறிவோம். எமக்குத் தெரியாமல் மரணித்த அல்லது இன்னும் மரணிக்கப் போகிற, அல்லது மரணிக்காமலே நரகத்துள் வாழ்கிற அம்சிகாக்கள் பல்லாயிரம். இறுதியில், எல்லா அம்சிகாக்களுக்கும் பொறுப்பு, சமூகம் தான்.