உலகெங்கும் இனப்படுகொலை நினைவகங்கள் எழவேண்டும்
எட்டுத்திக்கிலும் நீதிக்கான குரல் ஒலிக்க வேண்டும்
நேர்கண்டவர் - ஜே ஜே
தாயகத்தில் நடத்தப்பட்ட இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக கனடாவின் பிரம்டன் நகரத்தில் உள்ள நகர பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் திறந்து வைப்பட்டது. இந் நினைவகம் குறித்து கனேடியத் தமிழர் தேசிய அவையின் தலைவர் பேராசிரியர் இரா.சிறீ ரஞ்சன் அவர்களுடனான நேர்காணல் இது.
கேள்வி: தமிழின அழிப்பு நினைவகம் உருப்பெற காரணம் என்ன?
பதில்: யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழின அழிப்பு நினைவிடத்தை தை மாதம் 8 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசு இடித்தழித்திருந்தது. இவ்விடிப்பு சம்பவம் உலக தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. . இந்த இடித்தழிப்பே தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் உயிர்பெற காரணமாக இருந்தது.
கேள்வி: தமிழர் தேசிய பேரவை மட்டும் தான் தமிழின அழிப்பு நினைவிடத்தை நிறுவ முயற்சி செய்ததா..?
பதில்: இல்லை. எங்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிப்பு செய்யப்பட்ட அதே மாதம் 20 ஆம் திகதி பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் அவர்களின் தலைமையில் தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கனேடியத் தமிழர் தேசிய அவையை பிரம்டன் தமிழ் ஒன்றியம், பிரம்டன் தமிழ் மூத்தோர் சங்கம் மற்றும் ஏனைய பங்காளிப்பாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்குமாறு 2023 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மேலும் ஒரு தீர்மானம் பிரம்டன் மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது.
கேள்வி: தமிழின அழிப்பு நினைவகத்தின் வடிவம் குறித்த மக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்து அவர்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கினீர்களா அல்லது உங்கள் அமைப்புக்குள்ளோரால் வடிவமைக்கப்பட்டதா?
பதில்: இனவழிப்பு என்பதை இங்கு வருவோர் தெளிவாகப் புரிந்துகொள்ள கூடிய – நாம் மீண்டெழுந்து வருவோம் - இந்த இனவழிப்பு எங்கு நடந்தது போன்ற விடயங்கள் உள்ளடங்கிய வகையில் வடிவமைப்பு வேண்டும் என நாங்கள் மக்கள் மத்தியில் கோரியிருந்தோம். பெருமளவானோர் அனுப்பியிருந்தனர். அவ்வாறு கோரப்பட்ட இடத்தில் ஒரு சீக்கிய இனத்தை சார்ந்த ஒருவரும் அனுப்பியிருந்தார். அவரது வடிவமைப்பே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதேவேளை சிலர் அதற்கு எதிர்ப்பும் வெளியிட்டனர். தமிழர்களின் வரை வடிவமைப்புகளில் ஒன்றை தெரிவு செய்திருக்கலாம் என்ற எதிர்ப்பு வந்தது. ஆனால் இதில் இனவழிப்பின் வடிவம் சரிவர தெரியவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. அந்த வகையிலேயே தற்போது இருப்பது தெரிவு செய்யப்பட்டது.
கேள்வி: தமிழின அழிப்பு நினைவகத்தின் அடையாளங்கள் எவற்றைக்குறிக்கின்றன? அசை எவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டன?
பதில்: புத்தகம்: துருப்பிடிக்காத உருக்கிலான புத்தகம் தமிழர்வரலாற்றையும் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பையும் சுட்டக்காட்டி நிற்கிறது. தமிழீழ வரைபடம்: இலங்கைத்தீவில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் தமிழர்வரலாறு – அவர்களின் பண்பாடு- தன்னாட்சியுரித்துடைய அவர்களின் தாயகம்- அத்தாயத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இனவழிப்பையும் குறிக்கிறது.
கைகள்: பித்தளையால் செய்யப்பட்ட கைகள் தாயகத்தைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் சர்வதேசத்தின் துணையுடன் தமது வரலாற்றைப்பாதுகாப்பதையும் குறிக்கிறது.
சுவர்கள்: ஒன்பது சுவர்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழீழத்தின் ஒன்பது மாவட்டங்களையும் குறிக்கின்றன. ஒவ்வொரு சுவர்களிலும் வெளிபுறத்தில் 1948 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட இனவழிப்புகளின் ஆவணப்படுத்தலையும் சுவரின் உட்புறங்கள் அவற்றின் முழுமையான விபரங்களையும் கொண்டிருக்கின்றன.
தூண்கள்: கருங்கற்காளல் செய்யப்பட்டவை. தமிழர்களின் பாரம்பரிய கட்டடகலையையும் பாரம்பரியத்தையும் காட்டிநிற்கின்றன.
கேள்வி: சரி, முள்ளிவாய்க்கால் படுகொலை - நினைவு நாள் என்றுதானே பல இடங்களில் நினைவு கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் இனவழிப்பு நினைவகம் என்று பெயரிட்டுள்ளீர்களே?
பதில்: முள்ளிவாய்க்கால் ஒரு குறியீடாக இருக்கலாம் ஆனால் சொல்லவேண்டிய விடயம் இன அழிப்பே!
இனப்படுகொலை என்று சொல்வது தவறு. இன அழிப்பு என்பது இனப்படுகொலை மட்டுமல்ல. ஒரு இனக்குழவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அவர்களது வாழ்க்கையை வாழ முடியாமல் செய்வது இனவழிப்புதான். இப்போ நடந்துகொண்டிருப்பதும் இனவழிப்பு தான். அதற்காகத்தான் முதல் நடந்தது மட்டுமின்றி தொடர்ந்தும் இனவழிப்பு நடந்துகொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகதான் தமிழின அழிப்பு என பயன்படுத்துகிறோம்.; இலங்கையில் தமிழின அழிப்பு தொடர்ந்தும் நடைபெறுகிறது என நினைவகத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி: இந் நினைவக உருவாக்கத்துக்கான நிதியை எப்படித் திரட்டினீர்கள்..? எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது?
பதில்: 20 வருடங்களுக்கு நாங்கள் தான் பராமரிப்பு செய்யவேண்டும். அதன் பின்னர் நகர சபையே அதன் பரமரிப்பு வேலைகள் செய்யும். நிலம் மட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. மக்களிடமிருந்து சுமார் அரை மில்லியன் டொலர் வசூலிக்கப்பட்டது. அதனை விட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு அல்லுபகலும் வேலை செய்திருந்தனர். சுமார் 100 பேர் தினமும் வேலை செய்வர். அவர்களுக்கான உணவை எங்களின் மக்களே வழங்கினர்.
கேள்வி: நினைவகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகம், கை , தூண்கள் போன்ற படிமங்கள் கனடாவில் தான் செய்யப்பட்டனவா அல்லது வேறு இடங்களில் செய்யப்பட்டு தருவிக்கப்பட்டனவா?
பதில்: தூண்கள் மகாபலிபுரத்தில் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டன. கைகள் மற்றும் புத்தகம் என்பன சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டன.
கேள்வி: தாயகம் முதல் புலம்பெயர் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை யார் நடத்துவது என்பதில் போட்டிக்கு மேல் போட்டியாக உள்ளது. நீங்கள் எப்படி நடத்துவதாக திட்டம்?
பதில்: எங்கள் அமைப்பு நினைவேந்தலை , நாம் தான் நடத்துவதாகச் சொல்வதில்லை. அமைப்புகளின் பெயர்களை போட்டுக்கொள்வதில்லை. மாணவர் சமூகமும் மக்களும் சேர்ந்து தான் நினைவேந்தலை நடத்துவார்கள்.
கேள்வி: இந் நினைவகத்தை பார்வையிட நேரகாலம் கட்டணம் ஏதாவது உண்டா..?
பதில்: கட்டணம் ஏதும் இல்லை. பூங்காவை பார்வையிடும் நேரம் வரையறையை பொறுத்து பார்வையிடலாம்.
கேள்வி: இலங்கை அரசின் ஏவல் கைக்கூலிகள் நினைவகத்தை சிதைப்பதற்கான முயற்சி செய்தால் அதனை தடுப்பதற்கான திட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் உண்டா?
பதில்: அதனை பற்றியும் நாங்கள் யோசித்திருந்தோம். அப்படி நடந்தால் அச்சம்பவத்தை தழுவி தமிழின அழிப்பை மறுத்தோருக்கு எதிரான சட்டத்தை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வாய்ப்பாக அமையும். அதாவது யூத இன மக்களின் ஹாலோகாஸ்டை மறுதலித்தால் தண்டனைக்குரிய குற்றம். அதேபோல் ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கான வழியை அவர்களே ஏற்படுத்திக்கொடுப்பார்கள்.
கேள்வி: இவ்வளவு விடயத்தையும் ஒப்பேற்ற விடாமல் செய்யும் வகையில் இலங்கை அரசின் அழுத்தங்கள் ஏதும் வரவில்லையா…?
பதில்: பல ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன, பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டன. இலங்கை அரசு ,கனடா அரசுடன் பேச்சு நடத்தியது. ஆனால் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு தாங்கள் தலையிட முடியாது என அவர்களுக்கு கைவிரித்துவிட்டது.
கேள்வி:தமிழகத்தை தாண்டி இதுதானே புலம்பெயர்தேசத்தில் அமைக்கப்பட்ட முதலாவது தமிழின அழிப்பின் நினைவகம்..?
பதில்: இல்லை. மொறிஸியஸிலும் அமைத்துள்ளனர்.
கேள்வி: நீங்கள் ஒரு பிரமாண்ட நினைவகத்தை அமைத்துவிட்டீர்கள். ஏனைய புலம்பெயர் நாடுகளில் தமிழின அழிப்பு நினைவகம் பிரமாண்டமாக அமையவேண்டுமா ?அல்லது தமிழின அழிப்பு நினைவகம் ஒன்று அமைத்தால் போதுமானதா..?
பதில்: இதைபோல எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும். அப்போதுதான் நீதிக்கான குரல் எல்லா திசைகளிலும் ஒலிக்கும்.
கேள்வி:அந்த நினைவகங்களும் கனடா நினைவக வடிவத்தை ஒத்ததாக இருப்பது நல்லதா?
பதில்: இ ல்லை இல்லை என்ன வடிவமைப்பில் வைத்தாலும் அது பிரச்சினையில்லை. சின்னது பெரியது என்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் பெரிதாக இருந்தால் அதிகமான மக்கள் வந்து பார்ப்பார்கள் .
கேள்வி: கனடாவைப் பொறுத்தவரை அரசியலில் தீர்மானம் மிக்க சக்தி கொண்டவர்களாக ஈழத்தமிழர்கள் உள்ளனர் . எனினும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பல மாநிலங்களில் ஈழத்தமிழர்கள் சிதறுண்டு வாழ்கின்றனர். ஆகவே நாகராட்சி மன்றங்கள் சிறிய நிலங்களை வழங்குவதால் பெரியளவில் செய்ய முடியாது. எனினும் அதற்காக நினைவகம் ஒன்றை செய்யாமலே ஒதுக்கிவிடவும் முடியாது. இதற்கு என்ன தீர்வினைக் கண்டடையலாம்?
பதில்: ஒருவிடயத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கனடா நினைவகத்தை உருவாக்க காரணமான பற்றிக் பிறவுண் 2009 ஆம் ஆண்டு , பேறே என்ற இடத்தில் எம்.பி.யாக இருந்தவர். அந்தப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று தமிழ்க்குடும்பங்கள்தான் இருந்தன. யுத்தத்தை நிறுத்த வழி செய்யுங்கள் என்று அந்தக் குடும்பங்கள் அவரிடம் எமது இனவழிப்பு குறித்து சொன்ன விடயம் தான் இன்று அவர் இந்த நினைவகத்தை உருவாக்குவதற்கான விதை. ஆகவே இங்கு வாக்கு விகிதம் செல்வாக்கு செலுத்தவில்லை. இப்படியொரு நினைவகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் அரசியல்வாதிகளிடம் ஏற்படுத்தினாலே போதும். மிகுதி தன்னாலே நடக்கும்.
கேள்வி: இந்நினைவகத்தை உருவாக்கியவர்களில் நீங்களும் ஒருவர். இந்த விவகாரத்தால் நீங்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் இல்லையா..?
பதில்: இல்லை. இப்போது போகமுடியாது. அப்படி இலங்கைக்கு மீண்டும் செல்வதில் தனிப்பட்ட ரீதியாகவும் எனக்கு உடன்பாடில்லை.