இஸ்ரேல் - லெபனான் எல்லையில் தெற்கு கடலோர நகரமான நகோராவில் உள்ள ஐ.நா. அமைதிப்படை தலைமையகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு ஐ.நா. அமைதிப்படை சிப்பாய் காயமடைந்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த ஐந்தாவது ஐ.நா. அமைதிப்படை சிப்பாய் இவராவார்.
காயமடைந்த சிப்பாய், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
இஸ்ரேலிய துருப்புக்கள் சமீபத்தில் தெற்கு லெபனானில் தாக்குதலை அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொந்தளிப்பான எல்லையில் அமைதியை நிலைநாட்ட 1978 ஆம் ஆண்டு முதல் லெபனானில் செயல்பட்டு வரும் ஐ.நாவின் இடைக்கால படையணியில், 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் பணியாற்றிவருகின்றனர்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஐ.நா-அங்கீகரிக்கப்பட்ட எல்லையான லிட்டானி நதிக்கும் நீலக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரோந்து செல்வதே அவர்களின் பணி.
முன்னதாக, வியாழன் அன்று, இஸ்ரேலிய டாங்கி ஒன்று கண்காணிப்புச் சாவடியை நோக்கிச் சுட்டதில் இரண்டு இந்தோனேசிய அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர், இதனால் அவர்கள் கோபுரத்திலிருந்து விழுந்தனர்.
அயர்லாந்தின் பாதுகாப்புத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சீன் க்ளான்சி, கண்காணிப்பு நிலையத்தின் மீதான தாக்குதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றியதாக கவலை தெரிவித்தார்,
பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் தலைவர்கள் கூட்டாக ஐ.நா. பணியாளர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளைக் கண்டனம் செய்து, அவற்றை நியாயப்படுத்த முடியாதவை என்று விவரித்து, அவர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
லெபனான் சுகாதார அதிகாரிகள், பெய்ரூட் அருகே உள்ள கிராமங்களில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் குறைந்தது ஒன்பது பேரைக் கொன்றதாக தெரிவித்தது. சமீபத்திய அதிகரிப்பில் ஒட்டுமொத்தமாக 2,000 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஹெஸ்பொல்லா சுமார் 320 எறிகணைகளை வடக்கு இஸ்ரேலில் செலுத்தியுள்ளது, அவற்றில் சில இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன. பலியானவர்களில் இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் உள்ளனர்.
சபா.தயாபரன்.