ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
வாழ்க்கை அழகானது. சிதையும் ஏதோ ஒரு கனவு வாழ்வின் சமநிலையை குழைத்தாலும், வேறொரு கனவை சாத்தியப்படுத்துவதன் மூலம், வாழ்க்கை தன்னைத்தானே சமன் செய்துக் கொள்கிறது. - அரவிந்த் சச்சினானந்தன்
ஆஸ்திரேலியாவின் முதன்மையான பிரச்சினை என்னவென்று யாரிடம் கேட்டாலும் உடனே பதில் கிடைத்துவிடும். குடியிருப்பு வசதி பற்றாக்குறை. அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் விலைவாசி உயர்வு ,அதன் பலனாக வீட்டு வாடகை உயர்வு.சராசரி ஆஸ்திரேலிய குடிமகனின் கனவு சொந்த வீட்டில் குடியேறுவது தான்.
ஒருகாலத்தில் ஏறக்குறைய எல்லோராலும் வீடு வாங்க முடியும் என்ற நிலை மாறி ,வீடு வைத்திருப்பதே ஆடம்பரம் என்ற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். பேராசை பிடித்த நில உரிமையாளர்கள், வீடுகளை விற்கும் இடைத்தரகர்கள் ,அரசாங்கத்தின் முட்டாள்தனமான அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து வீடு என்பது பெருங்கனவாக பெரும்பான்மையோருக்கு ஆகிவிட்டது. இந்த நேரத்தில் நமது சிக்கல்களை மிக நுண்ணியமாக படம்பிடித்திருக்கிறது "3BHK" திரைப்படம்.
“வாடகை கொடுக்க வக்கில்லை. உங்களுக்கெல்லாம் ரேடியோ ஒரு கேடா” ,
“தேர்வுக்காக படிக்கும் நேரத்தில் கதவை தட்டி மின்விளக்கை அணைக்கவும் - கரண்ட் பில் யார் கட்டுவா “ மற்றும் இன்ன பிற கொடுஞ்சொற்களை வீட்டு உரிமையாளர்களிடம் வாங்கி மனம் வெதும்பியிருக்கிறீர்களா ? வெள்ளத்தில் வாடகைக்கு குடி இருந்த வீடு மூழ்கி மாடி வீடு வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர் முன்னே கூனிக்குறுகி நின்றிருக்கிறீர்களா ?
ஆம் என்றால் உங்களுக்கு இந்த படம் பிடிக்கும். இல்லையென்றாலும் இந்த படத்தை பாருங்கள். உங்களுக்கு அந்த அனுபவம் என்னவென்று விளங்கும்.
படத்தின் பெயரிலேயே படத்தின் மொத்த கதையையும் சொல்ல முடிந்த படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு தான் இல்லையா? ஆதலால் இயக்குனர் படத்தின் கதையை விளக்க ரொம்ப மெனக்கெடாமல் முதல் காட்சியிலிருந்தே நமக்கு கதாபாத்திரங்கள் அறிமுகம் ,அவர்கள் குணாதிசயங்கள் என்று எளிதில் நமக்கு கடத்த முடிகிறது. எல்லா சராசரி கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களைப் போல இந்த படத்திலும் ஒரு குடும்பம் ,அவர்களின் பல கவலைகள் அதில் தலையாய பிரச்சினை சொந்த வீடு இல்லை என்பது தான். ஒவ்வொரு வாடகை வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை வருகிறது.
ஒவ்வொரு பிரச்சினை வரும்போது அவர்கள் நகரத்தை விட்டு இன்னும் தொலைவில் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இங்கே தங்கள் மூத்த மகனை ( சித்தார்த் ) ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ,அவர்கள் மகளை (மீதா ரெங்கநாத்) ஒரு அரசுப்பள்ளியிலும் படிக்கவைக்கின்றனர் . இந்த படம் முழுவதிலும் சித்தார்த் மிக இயல்பாக பொருந்துகிறார். தன்னுடைய ஆசைகளை தனக்குள்ளே ஒளித்துவைத்துக்கொண்டு ,தனது தந்தை சொல்வதை கேட்டு நடப்பதிலாகட்டும், ஒவ்வொரு முறை வீடு வாங்க முடிவெடுக்கும்போதும் ஆசை நிறைவேறாகாமல் போகும்போது தவிப்பதாலாகட்டும் என்று படம் முழுவதும் நடிப்பில் மிளிர்கிறார்.
கற்றது தமிழ் படத்திற்கு பிறகு நான் ரசித்த காதல் திரைப்படம் இந்த படம் தான். அவ்வளவு அழகாகவும் ,இயல்பாகவும் வந்திருக்கிறது. சித்தார்த்தின் காதலி படத்தில் இரண்டே முறை அவரது கைகளை பிடித்து ஆறுதல் சொல்லுவார். அப்பொழுது அவரின் கண்கள் மின்னும் ,சித்தார்த் தனது கவலைகளை எல்லாம் மறந்து போவார். Drink hot water .Burn your lips . Remember the people who remembers you . எல்லா தமிழ்ப்படங்களில் வரும் கதாநாயகன் போல் ஒரே பாடலில் பணக்காரர் ஆவதில்லை. ஒவ்வொரு முறையும் வாழ்க்கை புறக்கணித்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தோல்வியிலும் துவண்டு விடாமல் மற்றோரு முறையும் எழுத்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலேயும் ஒரு மனிதன் வாழமுடியுமானால் , அதற்குப் பின்னே குடும்பம் என்கிற அமைப்பு அவனைத் தாங்கிக்கொள்வதை வெகு அழகாக எடுத்திருக்கிறார்கள். இங்கே சித்தார்த் , சரத்குமார் ஆகியோரின் ஒவ்வொரு தோல்விக்கு பின்னே குடும்பம் அரவணைத்துக்கொள்கிறது.தங்களது லட்சியமான வீடு வாங்கும் முடிவை ஒவ்வொரு முறையும் ,குடும்பத்திற்காக தியாகம் செய்துகொண்டேயிருக்கிறார்கள். நெகிழ்ச்சி.
ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தை தன்னைப்போல் ஆகிவிடக் கூடாது ,அதாவது தன்னைப் போல தோற்றுவிடக்கூடாது என்பது தான் குறிக்கோள்.இங்கேயும் படம் முழுவதிலும் தனது தோல்விகளை தனது குழந்தைகள் மேல் ஏற்றாமல் கடைசிவரை தனது குழந்தைகளுக்காக தியாக வாழ்க்கை வாழ்கின்றனர் சரத்குமாரும் ,தேவயானியும். படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் கொடுமைக்கார கணவர் குடும்பத்திலிருந்து தனது மகள் வெளியேறியபோதிலும் அந்த முடிவுக்கு குடும்பமே துணை நிற்கிறது. இந்த இடத்தில் தற்கொலை செய்து இறந்துபோன ரிதன்யாவின் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை இந்தப் படத்தை பார்த்திருந்தால் அந்த முடிவினை எடுத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா ,உன் எதிர்காலம் நல்ல பிரகாசமாக இருக்கும்”- என்று ஒவ்வொரு முறை சொல்லும்போதும் ஒரு மகனாக சித்தார்த் கடைசிவரை தனக்கு பிடிக்காத விஷயத்தை தந்தைக்காக செய்யும் மகனாக சிறந்த நடிப்பினை வழங்கியிருக்கிறார். பாடல்கள் எதுவும் வலிந்து புகுத்தாமல் இயல்பாக வருவது நல்ல முயற்சி. வெகு காலத்திற்கு பிறகு குத்துப்பாட்டு ,சண்டை இல்லாத யதார்த்த சினிமா பார்க்கும்பொழுது நாம் எங்கே தமிழ்ப்படம் பார்க்கிறோமோ இல்லை மலையாளப் படமா என்ற சந்தேகம் வருவது இயல்பு.
என்ன படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால் ,ஆம் நிச்சயமாக இருக்கிறது. முதலில் சரத்குமாரின் கதாபாத்திரம் படத்தில் ஒன்றாமல் ,எல்லா காட்சிகளுக்கும் ஒரே டெம்ப்ளட் முகபாவத்தை வைத்திருந்தாலும், இறுதிக் காட்சிகளில் மிக நன்றாகவே ஒன்றி நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் வீடு வாங்கும் முயற்சி தோல்வி அடையும்போது ,நமக்கே படத்தின் இறுதியில் சிறிது எரிச்சல் வந்தாலும் ,அது தானே நிதர்சனம். அரவிந்த் சச்சினானந்தத்தின் சிறுகதையிலிருந்து இந்தப்படத்தை மிகச்சிறப்பாக இயக்கிய இயக்குனர் ஸ்ரீகணேஷ்-ற்கு பாராட்டுக்கள்.இன்னும் அழுத்தமான நல்ல படங்களை தொடர்ந்து தரவேண்டும்.
வீடு என்ன நான்கு சுவர்களால் ஆன கட்டிடமா ? இல்லை , மரியாதை.