அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான போரை நிறுத்த புடினுக்கு 50 நாள்கள் காலக்கெடு விதித்திருந்தார் ட்ரம்ப். தற்போது அதை அவர் குறைத்துள்ளார்.
ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 4ூ ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே ஜனாதிபதி ட்ரம்ப்பின் போர் நிறுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காத சூழலில், அங்கு தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
“இனியும் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை. போர் நிறுத்தம் சார்ந்த முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை. புடின் இது குறித்த முடிவை எடுக்க வேண்டும். மக்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். புடினின் செயல்பாட்டின் மீது அதிருப்தி கொண்டுள்ளேன். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு இப்போது ஆர்வம் இல்லை.
ரஷ்ய மக்களை நான் நேசிக்கிறேன். அதனால் கூடுதல் வரி விதிப்பது குறித்து கொஞ்சம் யோசிக்கிறேன். அதை ரஷ்யாவோடு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் போரை நிறுத்த வேண்டும் என கெடு விதிக்கிறேன். நான் அமைதியை விரும்புகிறேன். அது நடக்காத பட்சத்தில் தீவிர வரி விதிப்பை தவிர வேறு வழியில்லை” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் நாடுகளின் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தாக்கம் உலகளவில் தீவிரமானதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.