அ.முத்துக்கிருஷ்ணன்
ஒக்ரோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல் நிகழ்த்தியதில் இருந்து பாலஸ்தீனத்தில் பெரும் போர்ச் சூழல் உருவாகியது. இந்தப் போர்ச் சூழல் அங்கே 2023 இல் தொடங்கவில்லை மாறாக 76 ஆண்டுகளாக, இஸ்ரேல் என்கிற நாடு உருவாகியது முதலே அந்த நிலத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனர்களை அவர்களின் தாயகத்தில் இருந்து விரட்டியது, அவர்கள் உலகில் பல நாடுகளில் அதிகளாக வாழ்வதும் நம் காலத்தின் பெரும் துயரம்.
பாலஸ்தீனம் என்கிற நாடு கொஞ்சம் கொஞ்சமாக உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போனதும் இன்று அவர்களில் காசா மற்றும் மேற்கு கரையில் சிறிய திட்டுகளில் வாழ்ந்து வருவதற்கும் இந்த உலகமே சாட்சியம். இஸ்ரேல் இந்த இன அழிப்பிற்கு எதிராகவே ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் உருவாகின.
ஹமாஸ் அமைப்பின் ’ஒக்ரோபர் 7 ’ தாக்குதலுக்கு பதிலடி என்கிற பெயரில் இஸ்ரேல் ஒரு ஆண்டு முழுவதுமே தன் எல்லைகளை மீறிய வண்ணம் இருக்கிறது. ஹமாஸை அழிப்பது எங்கள் நோக்கம் என்று கூறி களத்தில் இறங்கிய அவர்கள் இன்று வரை காசாவில் இருந்து ஹமாசை வெளியேற்ற முடியவும் இல்லை, ஹமாஸ் வசம் பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்கவும் முடியவில்லை, இந்த தோல்வியை மறைக்க அவர்கள் வேறு பக்கங்களில் தாக்குதல்களை தொடுத்ததன் வழியே இந்தப் போரை இன்னும் விரிவாக்கியுள்ளார்கள்.
ஏப்ரல் 1, 2024 அன்று சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகத்தை தரைமட்டமாக்கினார்கள், அங்கிருந்த ஈரான் ராணுவ அதிகாரி முகமத் ரேசா சாகேதியை கொன்றார்கள், இந்த தாக்குதல் முதலே இஸ்ரேல் ஈரானைக் குறிவைக்க தொடங்கிவிட்டது என்கிற நோக்கம் புலப்பட்டது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள குருதிஸ்தானில் இருக்கும் மோசாத் தளத்தை தாக்கி பதிலடி கொடுத்தது அத்துடன் நில்லாமல் ஏப்ரல் 14,2024 அன்று 300 ட்ரோன்களை ஈரான் இஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நோக்கி அனுப்பி தனது வலிமையை உலகிற்கு காட்டியது. இந்தத் தாக்குதல் மென்மையானதாக இருப்பினும் ஈரான் தயார் நிலையில் தான் உள்ளது என்பதை இஸ்ரேலுக்கு உணர்த்தவே இது நிகழ்த்தப்பட்டது.
மே மாதம் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைய்ஸி ஹெலிகொப்டர் விபத்தில் காலமானார், இதுவும் இஸ்ரேலின் கைங்கரியமாக இருக்குமோ என்கிற பேச்சு உலகம் முழுவதும் நடைபெற்ற போதும் நேரடிச் சாட்சியங்கள் இல்லாததால், ஈரான் பொறுமை காத்தது. ஜூலை மாதம் ஈரானில் தேர்தல் நடைபெற்று அங்கே ஜனாதிபதியாக மசெளட் பேசேஷ்கியான் பதவியேற்றார். இந்த பதவியேற்பில் கலந்து கொள்ள அங்கே வந்த ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹானியே பெரும் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். அடுத்த நாளே ஹிஸ்புல்லாவின் படைத் தளபதிகளில் ஒருவரான பவுத் சுக்ர் லெபனனின் பெய்ருத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். உடன் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு நூற்றுக்கணக்கான ரொக்கெற்றுகளை இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஏவியது.
ஒக்ரோபர் 7, 2023க்கு பிறகு அதிகாரப்பூர்வமாக 48,000 பேரை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்துள்ளன, அவர்களின் இன அழிப்பும் ரத்த வெறியும் இன்னும் அடங்கவில்லை. சில வாரங்கள் முன்பு ஹிஸ்புல்லா அமைப்பில் பேஜர்களும் வாக்கி டோக்கி கருவிகளும் வெடித்து பெரும் அழிவை அந்த அமைப்பு சந்தித்தது. இஸ்ரேல் லெபனன் மீது வான் வழி தாக்குதலை தொடங்கியது. லெபனன் தலைநகரம் பெய்ருத்தின் மீது கடும் தாக்குதல்கள் நடைபெற்றன, ஹுஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இஸ்ரேல் லெபனனுக்குள் தரை வழியாக நுழைந்தது. ஆனால் அவர்களால் பெரிதாக முன்னகர்ந்து செல்ல இயலவில்லை.
ஈரானின் பொறுமையை இஸ்ரேல் தொடர்ந்து சோதிக்க, ஒக்ரோபர் 1 இரவு ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நோக்கி அனுப்பியது. மொத்த உலகமும் இந்தத் தாக்குதலில் உறைந்து போனது. இஸ்ரேலில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் நெவாடிம் விமானப்படைத் தளம் ஆகியவைகளையே இலக்குகள் என்று ஈரான் அறிவித்தது. ’இஸ்ரேல் பொதுமக்களைக் கொல்லும் நோக்கம் எங்களுக்கில்லை சர்வதேச போர் நடைமுறைகளுக்கு இனங்கவே நாங்கள் ராணுவத் தளவாடங்களை அழிக்க இந்த ஏவுகணைகளைச் செலுத்தினோம் ’என்றது ஈரான். ’இத்துடன் நிறுத்திக் கொள்வோம் ஆனால் இதனைத் தாண்டி நீங்கள் மீண்டும் தாக்குவீர்கள் என்றால் நாங்கள் முழுமையான போருக்கும் தயாராகவே இருக்கிறோம்’ என்றது ஈரான்.
இஸ்ரேல் தொடர்ந்து இத்தனை பெரும் வன்மத்துடன் இயங்குவதற்கும், இத்தனை நாடுகளில் தாக்குதல்கள் நடத்துவதற்கும் மூல காரணமாக இருப்பது அவர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கும் நிதியும் ஆயுதங்களுமே. அமெரிக்கா தலையிட்டாலோயொழிய இஸ்ரேலை அடக்கவும் இயலாது, ஒரு உலகப் போர் உருவாவதைத் தடுக்கவும் முடியாது. இஸ்ரேல் பொறுப்பற்று இயங்குகிறது என்பதை உலகமே அறியும். ஆனால் அமெரிக்கா இத்தனை பொறுப்பற்று இருப்பது வரலாற்று பிழை. அமெரிக்கா தனது வரலாற்று பாத்திரத்தை வகிக்குமா அல்லது மீண்டும் தவறுகள் செய்யுமா என்பதற்கு காலம் தான் பதிலளிக்கும்.