ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
ஒவ்வொரு முறையும் ஊரில் வசிக்கின்ற எனது நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ பேசும்போது எழும் கேள்வி இது தான் , " அமெரிக்கா ,இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனவெறிப் போராட்டம் நடக்கிறதே. அத்தோடு வெள்ளையர்கள் புலம்பெயர்ந்த ஏனைய இன மக்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கிறதே. உங்கள் ஊரில் வாழும் வெள்ளையர்களுக்கு இந்த எண்ணமெல்லாம் கிடையாதா ? " என்று. அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் நகர்ந்துவிடுவேன்.
ஆனால் அப்போதெல்லாம் எழுத்தாளர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய ஒரு வாக்கியம் தான் நினைவுக்கு வரும் , " வெள்ளையர்களுக்கு இனவெறி இருக்கிறதா என்று கேட்பது , நாகபாம்பின் நாக்கில் விஷம் இருக்கிறதா என்று கேட்பதற்கு ஒப்பது " என்ற வாக்கியம் தான் அது . நீங்கள் புலம்பெயர்ந்த இந்தத் தேசத்தில் ஒரு முறையாவது இனவெறித் துவேஷ வார்த்தைகளையோ , அல்லது மிக நைச்சியமான ஒடுக்குமுறையையோ இதுவரை ஒரு தடவை கூட அனுபவிக்கவில்லையென்றால் , நீங்கள் கண்டிப்பாக தேவகுமாரன் தான்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி "ஆஸ்திரேலியாவுக்கான அணிவகுப்பு" என்ற பெயரில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வெள்ளை இன மக்கள் குடியேற்ற எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொண்டனர். முன்பு மறைமுகமாக சமூக ஊடகங்களில் மட்டுமே காணப்பட்ட இவ்வகையான இனவெறித் துவேஷங்கள் இப்பொழுது வெளிப்படையாக " குடியேற்ற எதிர்ப்பு" என்ற பெயரில் நாடெங்கிலும் திரண்டு வந்திருப்பதைக் காணும்பொழுது பயமாய் இருக்கிறது. இந்தப் பேரணிகளை பல்வேறு தீவிர வலதுசாரி மற்றும் நியோ-நாஜிக் குழுக்கள் ஒருங்கிணைத்திருந்தன. இந்த புதிய-நாஜிக் குழுக்கள் மற்றும் ஆணவம் பிடித்த தீவிர வலதுசாரிகள் அனைவரும் ஒன்று பட்டு ஓரணியாக இந்தப் பேரணிகளில் கலந்து கொண்டனர்.
இந்த நியோ-நாஜிக்கள் தங்களது "வெள்ளை இன மேலாதிக்கத்தை ஊக்குவிக்க 'சாதாரண குடும்ப மக்களின் ' வாழ்வாதாரக் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு காரணியாக " குடியேற்ற எதிர்ப்பு" ஒரு கேடயமாக பயன்படுத்தியதில் வெற்றி கண்டுள்ளனர் . பெரும்பாலான முக்கியமான அரசியல் கட்சிகள் இந்தப் பேரணிகளுக்கு வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்த போதிலும் மறைமுகமாக வெள்ளையல்லாத மற்ற மக்களின் குடியேற்றங்களுக்கு எதிரான வெறுப்பினை காண முடிந்தது. "ஆஸ்திரேலியாவுக்கான அணிவகுப்பு" நிகழ்வுக்கு வெள்ளை மேலாதிக்கவாதிகள் மட்டுமே ஆதரவளித்தனர் என்று நாம் நினைத்தாலும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், "சில நல்லவர்களும் கலந்து கொண்டனர்" என்று ஒப்புக்கொண்டார் . அந்த நல்லவர்கள் யார் ? விஷப்பாம்பில் எங்கேயப்பா நல்ல பாம்பு இருக்கிறது ?
ஆஸ்திரேலியாவின் இனவெறிக்கான இந்தப் பேரணிக்காக தீவிர வலதுசாரி 'தீவிரவாதிகள்' மீது மட்டும் குறை கூற முடியாது. இது மக்களின் மைய நீரோட்டத்தோடு கலந்திருப்பது நமக்கு நன்கு தெரிகிறது . இது மிக முக்கியமான ஆழமான சமூகப் பிரச்சினை என்ற வகையில் நாம் அணுகாவிடில் ஒன்றுபட்ட பல்வேறு இன மக்கள் கலந்த ஆஸ்திரேலியா என்பதை வெறும் காகிதத்தில் மட்டுமே காண முடியும். இந்தப் பேரணிகளின் போது வெள்ளை இன வெறியர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதைக் காணொளிகளில் பார்க்கும்பொழுது எதிர்காலத்தில் இந்த மண்ணில் வாழப் போகும் நமது சந்ததிகள் என்றும் அந்நியரே.
இந்தப் போராட்டங்கள் குடியேற்றங்களுக்கு எதிரான போராட்டமில்லை என்பது அவர்கள் பூர்வகுடி மக்களின் இறையாண்மை மையம் (Camp Sovereignty) மற்றும் பூர்வகுடி மக்களை தாக்கியது மூலம் அவர்களுக்கு வெள்ளை அல்லாத அனைவரும் எதிரிகளே என்பதை வெளிப்படுத்தியது. இங்கு வேலை பார்க்கும் இடங்களில் வெள்ளை அல்லாத எல்லோரிடமும் தவறாமல் ஒரு கேள்வி கேட்கப்படும் " உங்கள் ஊர் எந்த ஊர்? ". ஆனால் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவன் எந்த நாட்டிலிருந்து இந்த ஊருக்குப் புலம்பெயர்ந்தாலும் "அவன் ஆஸ்திரேலியர்களில் ஒருவன் " . இந்தப் போராட்டங்களுக்கு பிறகு "எனது இனம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆஸ்திரேலியாவிற்கான பேரணிக்குப் பிறகு, நான் எப்படி பாதுகாப்பாக உணர்வேன்?" என்ற கேள்வி எல்லா புலம்பெயர்ந்தோர்களிடம் எழுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது,வீட்டு வசதிப் பற்றாக்குறை ,வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் யார் தெரியுமா ? . வேறுயார், புலம்பெயர்ந்தவர்கள் தான் . இப்படி இந்த தீவிர வலதுசாரிகள் கூறும் ஒவ்வொரு கட்டுக்கதைகளுக்கும் பதில்சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் ஒவ்வொரு பொய்களையும் உடைக்கிறேன்.
1. குடியேற்ற எண்ணிக்கை பற்றிய தவறான தகவல்கள்:
"ஒவ்வொரு நாளும் 1,500 பேர் ஆஸ்திரேலியாவிற்கு வருகிறார்கள்" என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது .முதலில் இந்த எண்ணிக்கை "வெளிநாட்டு வருகை மற்றும் புறப்பாடு தரவுகளிலிருந்து" பெறப்பட்டது, அதாவது நாட்டிற்கு வருகை தந்த பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கியது அதாவது அந்த 1500 பேரும் புலம்பெயர்ந்தோர்கள் கிடையாது . கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் குடியேற்றங்களை விட 95,000 பேர் மக்கள் அதிகமாக நாட்டை விட்டு வெளியேறினர்.
இதன் காரணமாக அரசாங்கம் 2022-23 கால கட்டத்தில் மிக அதிகமாக நிரந்தர குடியேற்ற விசாக்களை வழங்கியது . ஆனால் லிபரல் கட்சியினரோ ’ லேபர் அரசாங்கம் தான் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் 1 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு விசா வழங்கியது’ என்று குற்றம் சாட்டினர். அதாவது 2020-21 கால கட்டங்களில் அனுமதிக்க வேண்டிய விசா எண்ணிக்கையை 2022-23 இல் வழங்கியது குற்றம் என்பதை மறைத்து தகவல் பரப்பி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 2024 ஆம் ஆண்டில் குடியேற்ற விகிதம் கடந்த ஆண்டை விட 37% குறைவு. ஆனால் தவறான விஷமத் தகவல்கள் பரப்புவதன் மூலம் சாதாரண மக்களுக்கு மிக அதிகமாக குடியேற்றவாசிகள் தங்கள் வேலைகளை அபகரித்துக்கொள்கின்றனர் என்ற எண்ணத்தை மனதில் வேரூன்ற வைக்கலாம் என்றால் மிகையில்லை .
2. குடியேற்றங்களுக்கும் வீட்டுவசதிப் பற்றாக்குறைக்கும் இடையிலான இல்லாத தொடர்பு
"அதிக அளவிலான குடியேற்றம் வீட்டுவசதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது" என்ற வாதம் தொடர்ந்து எல்லா மக்களிடமும் பரப்பப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் வீட்டுமனைத் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால் இது எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பது நமக்கு விளங்கும்.
அதாவது 2020-21 கால கட்டங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயந்தோர் எண்ணிக்கை கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைவு. அது மட்டுமின்றி அளவுக்கதிமாக மக்கள் நாட்டினை விட்டு வெளியேறினர். ஆனால் இந்த ஆண்டுகளில் வீட்டுமனை விலை குறைந்ததா ? என்ன நடந்தது? அரசின் தவறான செயல்முறை திட்டங்களில் வீடுகளின் விலை அதிகரித்தது. இதன் காரணமாக வீட்டுவசதிப் பற்றாக்குறை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தக் கால கட்டத்தில் உயர்ந்திருந்தது. குடியேற்றங்களுக்கும் ,வீட்டு வசதிப் பற்றாக்குறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நமக்கு நன்கு தெரிகிறது அல்லவா.
3. புலம்பெயர்ந்தோரின் பொருளாதாரப் பங்களிப்புகள்
"புலம்பெயர்ந்தோர்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களுக்குச் செல்ல வேண்டிய ( அதாவது வெள்ளையின மக்களுக்கு ) வளங்களை வீணாக்குகிறார்கள்" என்ற கூற்றுகள் வெளிப்படையாகவே முற்றிலும் தவறானவை; உண்மை வேறுவிதமாக இருக்கிறது .
நிரந்தரக் குடியிருப்பு விசா பெற்ற கணிசமான பகுதியினர் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப விற்பன்னர்கள். 2024-25 நிதியாண்டில் 185,000 பேருக்கு நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டது . இந்த விசாவில் 71 சதவிகிதம் நமது நாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள இடைவெளிகளை நிரப்ப சிறப்புத் தகுதிகள் மற்றும் திறன்களைக் கொண்ட திறமையான தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
" அதாவது நமது நாடு தொடர்ந்து செயல்பட தகவல் தொழில்நுட்பம் ,பொறியியல் கல்வி மற்றும் நர்சிங் போன்ற துறைகளில் போதுமான அளவில் பணியாற்ற ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் இல்லை" என்பதே இங்கு குறிப்பிடத்தகுந்த விஷயம். இந்த வேலைகள் நிரப்பப்படவில்லையெனில் , பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக முடியும் .புலம்பெயர்ந்தோர்கள் இங்குள்ள வளங்களைப் பறிப்பதில்லை; அவர்கள் அரசாங்க வழங்கும் சேவைகளில் நிதி பெறுவதை விட அதிகமாக வரிகளை திருப்பி செலுத்துகிறார்கள். அதாவது ஒவ்வொரு திறமையான புலம்பெயர்ந்தவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவிற்கு $250,000 நிகர லாபத்தை வழங்குவார்கள்" என்று கிராட்டன் நிறுவன புள்ளிவிபரம் நமக்கும் சொல்கிறது.
நியோ-நாஜிக் குழுக்களின் தலைவனான ஜாக் எல்டிஸ் " புலம்பெயர்ந்த வெள்ளையர்கள் அல்லாத அனைவரையும் இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டும் " என்று கோஷமிட்டபொழுது சிட்னியில் ஒரே ஆரவாரம். ஊடகத்துறையினர் அவரை நோக்கி “நீங்கள் நிறவெறியரா ?”என்று கேட்டதற்கு " ஆம் ,நான் நிறவெறியன் தான். நான் வெள்ளையன் என்பதில் பெருமை கொள்கிறேன்.இந்த மண்ணிலிருந்து வெள்ளையர் அல்லாத மக்கள் வெளியேறும் வரை போராடுவேன். நான் நியோ-நாஜி என்பதில் பெருமை கொள்கிறேன்” என்கிறார் . மெல்பேர்னில் நடந்த பேரணியில் உரையாற்றிய தமோஸ் செவேல் " "நமது ஆஸ்திரேலியாவைப் பாதுகாக்க வேண்டும், நாடாளுமன்றத்தின் ஆஸ்திரேலியாவை அல்ல, குடியேற்றத்தை நிறுத்தி மீண்டும் ஒரு வெள்ளையின தேசமாக மாற்ற வேண்டும்.
1.4 பில்லியன் சீனர்கள் மற்றும் 1.4 பில்லியன் இந்தியர்கள் உள்ளனர், இந்த உலகில் பில்லியன் கணக்கான பிற இன மக்கள் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் ஒரு தேசம் உள்ளது, இந்த நிலத்தில் அவர்களை இடம்பெயர அனுமதித்தால் இந்த நாடு வெள்ளையின ஆஸ்திரேலியாவாக இருக்காது. நமது எண்ணிக்கையைப் பார்க்காமல் , பிற நிறமக்களின் குடியேற்றத்தை நிறுத்தவில்லை என்றால், நமது இனத்தின் மரணம் நிச்சயம்." என்று இனவெறியுடன் பேசியிருக்கிறார். இவர்கள் மட்டுமின்றி முக்கியமான அரசியல்வாதிகளான பாலின் ஹேன்சன் மற்றும் Nampijinpa Price இனவெறியினை தூண்டக்கூடிய பேச்சுகளும் நம்மை அருவெருப்பு படவைக்கின்றன. நியாயமான நேர்மையான , பல்லினம் கலந்த ஆஸ்திரேலியாவாக வரும் காலங்களில் எப்படி இருக்க முடியும் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
Sam Selvon எழுதிய Moses Ascending நாவலில் நாயகனான மோசே எப்பொழுது இந்த வெள்ளையின நாட்டில் இனக்கலவரம் வெடிக்கும் என்று நினைக்கிறான். "அதாவது வெள்ளையர் மனதில் என்றைக்கு புலம்பெயர்ந்த கறுப்பர்கள் ( வெள்ளையினம் சாராதவர்கள் ) சொகுசாக , அனைத்து வசதிகளுடன் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்ற கருத்து என்று தோன்றுகிறதோ , அப்பொழுது எழும் கலவரமானது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் " என்று யோசிக்கிறான். இப்போது நடக்கும் கலவரங்களைப் பார்க்கும்போது எனக்கும் இதுதான் காரணமாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.