நாட்டை ஆளக்கூடிய சபையாகக் கருதப்படுகின்ற, நாட்டு மக்களுக்காக சட்டங்கள் இயற்றப்படுகின்ற சட்டவாக்க சபைக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அனுப்புவதற்குரிய பொதுத்தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இவ்வாரம் முதலே பிரச்சார போர் உக்கிரமடையும்.
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்று பதவியேற்ற கையோடு, புதிய அமைச்சரவை நிறுவப்பட்ட பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், பிரச்சார புயல் அரசியல் களத்தை மையங்கொள்ளவில்லை.
கூட்டணி அமைப்பதில் குழப்பம், வேட்பு மனு தயாரிப்பதில் குழப்பம், கட்சிக்குள் வெட்டு, குத்து என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்கள் அரசியல் கட்சிகளில் அரங்கேறி, ஒருவகையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. விருப்பு இலக்கங்களும் வழங்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருணாகலை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் கடும் மடை பெய்ததால் பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு சில வேட்பாளர்கள் சிறு அளவில் பரப்புரைகளை முன்னெடுத்தனர். தற்போது வானிலை சீராகியுள்ளது. பிரச்சாரமும் ஆரம்பமாகியுள்ளது. ஆனாலும் இவ்வாரம் முதலே பிரச்சாரப்பணிகள் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு, அரசியல் களம் அனல் கக்க ஆரம்பிக்கும்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள்
பொதுத்தேர்தலுக்கென தென்னிலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைக்காது.
ஜனாதிபதி தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களை அடிப்படையாகக்கொண்டே பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரமும் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு பொதுத்தேர்தலின்போது மக்களின் ஆiணைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
தமக்கு நாடாளுமன்றத்தின் ஆட்சி கிடைக்கப்பெற்றால் ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலையும் ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே அக்கட்சி எதிர்கொள்கின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, திலித் ஜயவீர தரப்பு என்பனவும் ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை அடிப்படையாகக்கொண்டே பொதுத்தேர்தல் பயணத்தையும் முன்னெடுக்கின்றன.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாத வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைக்கக்கூடும். இலங்கை தமிழரசுக் கட்சி, ஈபிடிபி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன இதில் உள்ளடங்கும்.
அநுர களத்தில்: திசைக்காட்டி வேட்பாளர்களுக்கு கடிவாளம்
தேசிய மக்கள் சக்தியாக ஓரணியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு வேட்பாளரும் விருப்பு வாக்கை மட்டும் இலக்காகக்கொண்டு செயற்படக்கூடாது எனவும், கட்சியை வெற்றிபெற வைப்பதே முதன்மை இலக்காக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென குழுவொன்றுகூட அமைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதானக் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்று உரையாற்றுவார். அவர் மாவட்ட ரீதியில் பங்கேற்கும் பிரதான கூட்டங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து வேட்பாளர்களும் ஒரே தடவையில் மேடையேற்றப்படவுள்ளனர்.
மஹிந்தவின் சாதனையை முறியடிப்பாரா ஹரிணி?
2020 பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்காக இது அமைந்துள்ளது.
அதற்கு முன்னர் 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 லட்சத்து 566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த சாதனையையே மஹிந்த 2020 இல் முறியடித்தார். 5 லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகளைப் பெற்ற இரு அரசியல் வாதிகள் மஹிந்த, ரணில் ஆவார்கள். இருவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை களமிறங்கியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இச்சாதனையை முறியடிக்கும் வகையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தேசிய மக்கள் சக்தி விருப்பு வாக்குக்கு முன்னுரிமை வழங்காததால் மஹிந்தவின் சாதனை தொடரக்கூடிய சாத்தியமும் உள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம்
சஜித்தின் எதிர்காலம் கேள்விக்குறி
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள நிலையில் மேலும் சில உறுப்பினர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர். கூட்டணியில் மட்டும் அல்ல ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் உள்ளக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அஜித் மானப்பெரும தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது சஜித்துக்காக பிரச்சாரம் செய்த நடிகை தமிதா, தற்போது சஜித் தரப்பை விளாசித்தள்ளிவருகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பதவி விலக முடிவெடுத்திருந்தாலும் அவரது பதவி விலகல் கடிதத்தை சஜித் ஏற்கவில்லை. ஹிருணிக்காவை தற்காலிகமாக சமரசப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை சஜித்தின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் சில உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். கட்சியின் தலைமைப்பதவியை கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா ஆகிய இருவரும் இம்முறையும் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கடந்த முறை எதிரணி விருப்பு வாக்கு பட்டியலில் சஜித் முதலிடம் பிடித்திருந்தாலும் இம்முறை ஹர்ஷ டி சில்வாவுக்கே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாததால் அவரை விரும்பக்கூடிய தரப்புகள், ஹர்ஷ டி சில்வாவையே ஆதரிக்கக்கூடும். விருப்பு வாக்கு பட்டியலில் சஜித் பின்தள்ளப்பட்டு, ஹர்ஷ முதலிடம் பிடித்தால் அது சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்தாக அமையவுள்ளது.