இஸ்ரேலில் சிறை பிடிக்கப்பட்ட சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கை மனநோயாளி என விமர்சித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர்தான் கிரெட்டா தன்பெர்க்.
உலக நாடுகளை சுற்றி வந்து சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசுபாடு, புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சென்றார்.
அவருடன் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
அப்போது இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார். இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என தெரிவித்தார். இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் கிரெட்டாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்துள்ளார்.
' கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப்போதும் மூர்க்கமாக உள்ளார். அவர் நல்ல ஒரு மனநல வைத்தியரை பார்க்க வேண்டும்" என ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.