கட்டுரையாளர் - ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற சிறுகதை “பள்ளம்” . இந்தக் கதையில் நமது மக்களின் சினிமாவெறியை மிகநுட்பமாக விவரித்திருப்பார். நமது மக்கள் சினிமா பார்ப்பதற்கு ஓடுவது என்பது காலம் காலமாக நடப்பது. அந்த ஓட்டம் இன்னும் நிற்கவேயில்லை .
இந்த கதையில் வரும் சிறுவனுக்கு வலது கண் தெரியாது. அவனது அம்மா சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த சிறுவன் தொந்தரவு கொடுத்ததால் அவள் இவனது கண்ணை நொண்டி ஒரு கண் போய்விடும்.
அவள் அம்மா துயரம் தாளாது தற்கொலை செய்துவிடுவாள். அவளது கண்ணை இவனுக்கு பொருத்தியிருப்பார்கள். அதை பற்றிகேட்கும்பொழுது அவன் சொல்வான் " பார்வை இல்லை. பள்ளம் தான் ரொம்பிச்சு " என்பான். மிகவும் யோசிக்கவேண்டிய சிறுகதை. நாம் உணர்ச்சிவசமாக எடுக்கும் ஒவ்வொரு தீர்வுகளும் பிரச்சினைகளை தீர்க்காமல் , பள்ளத்தை மட்டும் நிரப்புகின்றன என்று அதி அற்புதமாக சொல்லியிருப்பார். கரூரில் அசம்பாவிதம் நடந்த பிறகு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு இந்த கதையையே நினைவூட்டின .
கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். ஆனால் கடந்த ஒருவாரமாக என்ன நடக்கிறது. இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரையொருவர் எதிரியாக்கி கொண்டு அதில் வெறுப்பினை உமிழ்ந்து வளர்த்து வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதை நீங்கள் எந்த தரப்பில் இருக்கிறீர்கள் என்பதே தீர்மானிக்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.
இந்த துயர சம்பவத்திற்கு என்ன காரணம் ? இப்படி செய்திருக்கலாம் , அப்படி செய்திருக்கலாம் என்று தொடர்ச்சியாக விவாதம் நடைபெற்று வருகிறது ( அடுத்த திரைப்படம் வெளியாகும் வரையில் தான். பிறகு இட்லிக்கடை நோக்கி ஓடிவிடுவார்கள் ) . கேட்ட இடம் கிடைக்கவில்லை என்கிறார்கள். அவர்கள் கேட்ட இடம் இதை விட அபாயகரமானது என்று அடுத்த தரப்பு. மின்சாரம் நிறுத்தப்பட்டது என்று ஒருவரும் , இல்லை அவர்கள் தான் ஜெனெரேட்டர் இயங்கும் விளக்கினை அணைத்தனர் என்கிறது அடுத்த தரப்பு.
விஜய் வேனில் ஏறி நின்று பேசியிருந்தால் கூட்டம் கலைந்து போயிருக்கும். வேன் விளக்கினை அணைத்து அணைத்து விளையாடினார் என்று பல்வேறு குற்றசாட்டுகள்.தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வரும் காணொளிகளைப் பார்க்கும்பொழுது நமக்கு மனவியாதி வந்து விடும் அளவிற்கு வெறுப்புரைகள் இரண்டு பக்கமும் பரப்பப்படுகின்றன.இவ்வாறான சமயத்தில் தான் நமக்கு காந்தியின் தேவை நமக்கு தேவையாகியிருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் சில வருடங்களுக்கு முன்பு "காந்தியம் தோற்கும் இடங்கள்" என்று ஒரு அருமையான உரையாற்றியிருப்பார். அந்த உரையில் காந்தி மூன்று இடங்களில் தோற்கிறார் என்று பேசியிருப்பார். முதலாவது காந்தியம் என்பதே அடிப்படை மனித இயல்புக்கு எதிரான நிலைப்பாடு: அதாவது அவர் அடிப்படை மனித இயல்புக்கு எதிரானவர்.
அடிப்படை மனித இயல்பு என்பது குழுவாகச் சேர்வது, பிறரை வெறுப்பது, அதன் அடிப்படையில் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்வது, "நாம்" மற்றும் "அவர்கள்" என்று எப்போதும் எதிரி என்று நினைப்போருடன்ஓயாமல் சண்டையிட்டுக்கொண்டே இருப்பது தான் . இதுநாள் வரையில் வரலாறு இவ்வாறுதான் உருவாகி வந்திருக்கிறது. காந்தி, இந்த "நாம்" மற்றும் "அவர்கள்" என்ற பேதத்துக்கு அப்பால் நிற்கிறார். அவர் வெள்ளையருக்கு எதிராக போராடினாலும், பேச்சுவார்த்தைக்காக லண்டன் சென்றபோது, அவரை எதிர்த்துப் போராடியவர்களாலும் மதிக்கப்பட்டார். இந்த அடையாளத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. காந்தி 'பிறர்' என்ற அடையாளத்துடன் அணுகக்கூடிய எவர் முன்னாலும் தோற்றுப் போகிறார்.
இதில் அறிவுஜீவி சமூகம் எளிய மக்களின் மீது பழியை ஏவுகின்றன. சினிமாக்காரனை பார்க்க நீங்கள் ஏன் அந்த கூட்டத்தினுள் சென்றீர்கள் என்று. இவர்கள் ஏதோ எந்த சினிமாவும் பார்த்ததில்லை இல்லை எந்த நடிகர் / நடிகையர் பின்னே அலைந்ததில்லை என்று. ஒரு கீபோர்டோ அல்லது அலைபேசியோ இருந்தால் என்ன வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலை ( இதில் நான் உட்பட அனைவரும் அடக்கம் ) .அந்த எளிய மக்கள் என்ன செய்தார்கள்?.
தாங்கள் திரையில் ஆராதித்த நாயகனை நேரில் பார்க்க சென்றார்கள். யாருக்காவது தெரியுமா இவ்வளவு கூட்டம் வரும் ,மிதிபட்டு சாவோம் என்று. அங்கே இருந்த காவல்துறை என்ன செய்தது என்று ? செய்திருக்கலாம். 10000 பேர் கூடும் இடத்தில் அதைவிட மக்கள் திரளும்போது காவல்துறை சரிசெய்திருக்கலாம். ஆனால் நாம் இப்போது கேள்விகள் கேட்பது எளிது. பொதுவாக நமக்கு கூட்ட மேலாண்மை என்பது குறைவு . அதுமட்டுமின்றி நமது மக்கள் பெருங்கூட்டமாக ஆனபிறகு என்ன செய்வார்கள் என்பது யாராலும் எதிர்பார்க்க முடியாது.
அங்கே அதுதான் நடந்தது, விஜய் ரசிகர்களை கட்டுக்கடங்காத வன்முறை கூட்டம் என்று குறை சொல்கிறார்கள். கழகங்களில் மட்டும் என்ன குறைச்சல்? நீங்கள் செய்யாத ரௌடித் தனமா ? தங்கள் அப்பா மற்றும் உறவினர்கள் செய்ததை பார்த்து வளர்ந்த கூட்டம் அப்படிதான் இருக்கும் .
இது தவறென்று நாம் சொல்லியிருக்கிறோமா ? இல்லை ஒவ்வொரு பட வெளியீட்டின்போது இவர்கள் செய்யும் கூத்துக்களை ரசிக வெளிப்பாடு என்று தொடர்ந்து ஊக்கம் செய்தது யார் ? . இது தமிழ்நாட்டில் மட்டுமா நடக்கிறது ? நமது படித்த பண்பட்ட மேதாவி அறிவுஜீவிகள் ஒவ்வொரு ரஜினி,விஜய் ,அஜித் படங்கள் வெளியாகும்போது அடிக்கும் கோமாளித்தனங்களை பார்த்தல் உங்களுக்கு நன்கு விளங்கும். யார் மேல் தவறு ? இந்த ஒட்டுமொத்த சமூகம் தானே ? பிறகு நாம் எப்படி விஜய் ரசிகர்கள் மேல் மட்டும் குறை சொல்ல முடியும் ?
இந்த அநியாயத்திற்கு நீங்கள் காரணம் இல்லையெனிலும் உங்களுக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த எளிய மக்களை இப்படி நிலையில் இருப்பதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை. நாமும் ஒருவகையில் காரணம் என்பதை உணர்ந்தால் , ஆக்கபூர்வமாக அடுத்த என்ன செய்யவேண்டுமென்பதை யோசிப்போம். யோசிக்க வேண்டும். காந்தியின் வழியும் அதுதான். காந்தியின் வாழ்வில் நண்பன் / பகைவன் என்பதே கிடையாது. பழிதீர்த்து வன்மம் பாராட்டுவதை விட ஆக்கபூர்வமாக என்ன செயலாற்ற முடியும். படிப்படியான செயல்கள் மூலம் இலக்கை நோக்கி அறவழியில் முன்னேற வேண்டும்.
ஒரு அரசியல் கட்சி தலைவராக விஜய் தனது தொண்டர்களை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பதை உணரவேண்டும் ( ஒரு சினிமா நடிகன் என்ற பார்வையிலிருந்து ஒரு தலைவன் என்ற நிலைக்கு முன்னேறி யோசிக்கவேண்டும். நாளைக்கு உங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் உங்களுக்கும் மற்ற திராவிட கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற நிலைதான் இப்போதும் உள்ளது . இதை நீங்கள் மாற்றவேண்டும் அல்லது அந்த திசையில் செல்ல பணியாற்றவேண்டும் ) .
ஒரு அரசாக பொதுமக்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டும்? வெறுமனே கூட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு அசம்பாவிதம் நடக்கும்வரை வேடிக்கை பார்க்கலாகாது . பெருங்கூட்ட மேலாண்மை விதிகள் இயற்றவேண்டும் .அதைக் கடைப்பிடிக்கிறார்களா என்று மேற்பார்வை செய்யவேண்டும். அப்படிச் செய்தோம் என்றால் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளைத் தடுக்கலாம்.ஊடகங்கள் தங்களுக்கு சமூகப்பொறுப்புணர்வு உள்ளது என்பதை உணரவே
ண்டும். வெறுமனே வதந்திகளைப் பரப்பாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக மக்களும் இந்த விதிகளை மதித்து நடக்கவேண்டும். இதெல்லாம் உடனே நடந்துவிட முடியாது. காந்திய வழிமுறை என்பது படிப்படியான அணுகுமுறை. சிறிய வெற்றிகள் ,பல்வேறு சமரசங்கள் வழியே இலக்கை அடைதல். முக்கியமாக, இங்கே அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும்படி வழிசெய்தல் வேண்டும்.
தொடர்ச்சியாக காணொளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது ஒரு காணொளியில் விஜயின் ரசிகர் மற்றும் தொண்டர் தனது குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு பேசுகிறார் " நான் தளபதி ரசிகன். அவரை பார்க்கத்தான் நாங்க இன்னைக்கு வந்திருக்கோம். அவர் கையால பேர் வைக்கத்தான் என் குழந்தையை தூக்கி வந்திருக்கேன்”என்று சொல்கிறார்.
அவர் முகத்தில் அப்படி ஒரு நம்பிக்கை , என் தலைவன் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவான் என. என்னை நிலைகுலையவைத்து விட்டது .எவ்வளவு நம்பிக்கை அய்யா உங்கள் மேல்? நீங்கள் பதிலுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? வசூல்ராஜா படத்தில் கான்சர் நோயினால் சாஹீர் இறந்த பிறகு கமல் அழுவார். ’நான் அவனை ஏமாற்றிவிட்டேன் . அவன் என்னைய கடவுள்னு நம்பிக்கிட்டு இருந்தான். அப்படி இல்லைனு நான் எப்படி சொல்வேன் அவன்கிட்டே?’ என்று. அஜித் தனது ரசிகர்களிடம் சொல்லிவிட்டார். விஜயும் தனது ரசிகர்களிடம் நான் கடவுள் அல்ல என்று சொல்லவேண்டும் .சொல்லுவார் என்று நம்புவோம்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் கிட்டத்தட்ட 85 மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் ஓய்வெடுக்காமல் பணியாற்றியிருக்கின்றனர் மேலும் மருத்துவமனை ஊழியர்களில் சுமார் 90% பேர் அழைக்கப்படாமலேயே வந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். . சேலம், திருச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 முதுகலை மாணவர்கள், காவல்துறை அனுமதியுடன் பிரேத பரிசோதனை செய்ய வரவழைக்கப்பட்டனர்.
இரவு முழுவதும் உழைத்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் 39 உடல்களின் பரிசோதனைகளை முடித்தனர். ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து அறுவை சிகிச்சைகளை நடத்தினர். கோவிட்-19க்குப் பிறகு பல ஆண்டுகளாக மருத்துவமனை இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ளவில்லை, ஆனால் இதுபோன்ற மகத்தான மனிதர்களை நாம் எப்பொழுதும் கண்டுகொள்வதில்லை. அதைவிட்டு அனைத்து தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாற்றி குற்றம் சொல்வதிலேயே தங்கள் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
திமுக அரசாங்கம் ஏன் இந்த கோரசம்பவம் நடந்து இத்துணை நாள்கள் ஆகியும் த.வெ.க நிர்வாகிகளை கைது செய்யாமல் இருக்கிறது ?. அவர்களுக்கு பயம். எங்கே கைது செய்தால் இன்னும் பெரிதாக வளர்ந்துவிடுவார்களோ என்று ? . த.வெ.க. நிர்வாகிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம் என்றால் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்த அன்று ஓட்டம் பிடித்த விஜய் அவர்கள் மூன்று நாட்களுக்கு பிறகு காணொளி வெளியிடுகின்றார்.
அதில் எந்த குற்றவுணர்ச்சியோ ,கழிவிரக்கமோ எதுவும் இல்லை. என் தொண்டர்களின் மேல் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பயங்கரம் என்கிறார். என்ன நடக்கிறதய்யா இங்கே ? நீதிமன்றத்தில் நடந்த புஸ்ஸி ஆனந்த் ,நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் நீதிபதி அவர்கள் , விஜயின் இந்த மனிதாபிமானற்ற தன்மையை கேள்வி கேட்கிறார் . விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்கிறார். என்னவோ தமிழ்நாட்டில் அத்துணை தலைவர்களும் நேரத்திற்கு வந்துபோவது மாதிரி. ஒரு மந்திரி வருவதற்காக நூற்றுக்கணக்கான குழந்தைகளை வெயிலில் நிற்கவைத்தவர்கள் தானே. மொத்தத்தில் தமிழ்நாட்டில் அறம் என்றால் கிலோ என்னவிலை என்ற நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கிறோம்.
பச்சைக்குழந்தைகள் மேல் மிதித்து கொன்றவர்கள்தானே நாம். அந்த கூட்டம் நடத்திய நிர்வாகிகள் ,விஜய் ,காவல்துறை ,அதிகாரிகள் .அங்கு கூடிய ரசிகர் வெறியர்கள், ஆண்டாண்டுகாலமாக சினிமா என்ற பெயரில் வெறித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துவிட்ட நாம் என்று அனைவரின் கைகளிலும் ரத்தக்கறை இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. கண்ணை மூடினால் உயிரிழந்த அந்த ஏதுமறியா பிஞ்சு குழந்தைகளின் முகங்கள் என்னை தொந்தரவு செய்கிறது.