அவுஸ்திரேலியாவின் வடக்கு மண்டலத்தில் (Northern Territory) இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் Country Liberals கட்சி பெருவாரியாக வெற்றி பெற்று புதிய முதல்வராக லியா ஃபினோக்கியாரோ (Lia Finocchiaro) பதவியேற்றிருந்தார். அண்மையில் அவரது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளில் ஒன்றான சிறுவர்களைக் குற்றவாளிகளாகக் காணுவதற்கான குறைந்தபட்ச வயதை 12 இலிருந்து 10 ஆக மீண்டும் குறைக்கவிருப்பதாக அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
முன்னரும் அமுலில் இருந்த இந்தச் சட்டத்தினால் பூர்விகக் குடிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர். "Raise The Age" என்ற இயக்கத்தின் செயற்பாட்டின் மூலம் சிறுவர் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக குறைந்த பட்ச வயதை 10 லிருந்து 12 ஆக உயர்த்திய முதல் ஆஸ்திரேலியப் பிராந்தியமாக வடக்கு மண்டலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து மற்றய மாநிலங்களிலும் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்ததன் மூலம் குற்றமிழைத்த சிறுவர்கள் திருந்துவதற்காக மீள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவே கருதப்பட்டது. சில மாநிலங்களில் இந்த வயதெல்லையானது, இப்போது 14 ஆக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வடக்கு மண்டலமானது பின் நோக்கிச் செல்லும் வகையில் எடுத்திருக்கும் இந்த முடிவு, மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பழங்குடியினரின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
வடக்கு மண்டலத்தில் கிட்டத்தட்ட 25 சதவீதமானோர் பூர்வ குடிகளாக இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவின் சனத்தொகையில் 10–17க்கு இடைப்பட்ட வயதினரில் சுமார் 5.7% வீதமானோர் மட்டுமே பூர்விகக் குடிகள் ஆவார்கள். ஆனால் 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறையில் இருந்த குழந்தைகளில் 63% சதவீதமானோர் பூர்விகக்குடிகள் என்பது அதிர்ச்சி தரக்கூடிய தரவாகும். இதன் பொருள், அவுஸ்திரேலியாவில் வாழும் சாதாரண சிறுவரைக் காட்டிலும், பூர்வகுடிச் சிறுவருக்கு 29 மடங்கு அதிகமான வாய்ப்பு சிறையில் இருப்பதற்கு உள்ளது.
அதிலும் வடக்கு மண்டலத்தில் காவலில் தடுத்து வைக்கப்பட்ட சிறுவர்களில் 97 சதவீதமானோர் பூர்வகுடிச் சிறுவர்களாக இருக்கின்றார்கள் என்ற தகவலும் கவலைக்குரியதே.
பூர்வகுடிமக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது அவர்களை முடக்குவதற்காக ஒரு காலத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை யாவரும் அறிவார்கள். அதன் ஒரு விளைவாகவே, குடும்பக் கட்டமைப்பும், சமூகக் கட்டமைப்பும் குலைந்துபோன ஒரு சமுதாயமாக இன்று அவர்கள் உருவாகியுள்ளார்கள் என்பதையும், அதன் வெளிப்பாடாகவே சிறுவர் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்ற உண்மையையும் யாராலும் மறுதலிக்க முடியாது.
சமூகத்தில் இளம் சிறார்களால் இழைக்கப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், மக்கள் அச்சத்துடன் வாழும் நிலையில் உள்ளார்கள். மக்கள் பாதுகாப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். ஆனால் மூலப்பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சிறுவர்களைக் குற்றமிழைப்பதற்குத் தூண்டும் காரணிகள் கண்டறியப்பட்டு, அவற்றை வேருடன் களைவதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
வழிதவறிப்போன சிறார்களை மீண்டும் பாடசாலைக்குக் கொண்டு வருவதன் மூலமோ அல்லது தொழிற்பயிற்சியை உருவாக்கி வாழ்வாதாரத்துக்கான வழியைக் காட்டுவதன் மூலமோ தான் அவர்களையும் சாதாரண மனிதர்களாக வாழ்க்கையின் ஓட்டத்தோடு இணைத்துக் கொள்ள முடியும். அதை விடுத்து மேலும் சிறார்களைத் தடுப்புக்காவலில் அடைத்து வைப்பதன் மூலம் பிரச்சினைகள் என்றுமே தீரப்போவதில்லை.
இன்னமும் பாற்பற்களைக் கொண்டுள்ள 10 வயது சிறார்களை, இப்போதும் பாலகர்கள் என அடையாளம் காணப்படுவர்களைக் குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று எண்ணுவதும் அதற்காக விவாதங்கள் நடப்பதும், அந்த மண்டலத்தின் தலைமைத்துவத்தின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது. இத்தனை இளம்வயதில் பிரச்சனையைச் சீர்தூக்கி ஆராய்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளக்கூடிய மனநிலை சிறார்களுக்கு இருக்கப் போவதில்லை.
வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத விடத்து உளச்சிதைவு கண்ட நிலையில் மீண்டும் வெளி உலகத்தைக் காணும் இளரத்தத்துக்குப் பழி வாங்கும் உணர்வுடன், எதற்கும் அஞ்சாத மனமும் வந்து விட்டிருக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது ஒரு சமூகம் மட்டுமல்ல வருங்காலத்தைப் பிரதிநிதிப்படுத்தப் போகும் ஒரு இளம் சமுதாயமும் என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது வரவுள்ள சட்டத்தினால், துள்ளித் திரிந்து பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சிறுவர்கள் புரியாத வயதில், விளைவுகளை அறியாமல் செய்யும் தவறினால் தடுப்புக் காவலில் வாடப்போகின்றார்கள்.
Spit Hood (துப்புதலைத் தடுக்கும் கவசம்) என்பதையும் மீள அறிமுகப்படுத்தப் போவதான வடக்கு மண்டல அரசாங்கத்தின் அறிவிப்பும் வரவேற்கப்படக் கூடியதல்ல. கதிரையில் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் போடப்பட்ட இந்தக்கவசத்துடன் சிறுவர் குற்றவாளி ஒருவர் அமர்ந்திருக்கும் நிலையைக் கற்பனை செய்வதே கடினமானதாக இருக்கின்றது. வடக்கு மண்டல சிறுவர்களுக்கான ஆணையாளர் ஷக்லீனா முஸ்க் (Shahleena Musk) வடக்கு மண்டலத்தின் "தண்டனை அடிப்படையிலான கொள்கைகள் பூர்வகுடிக் குழந்தைகள் மற்றும் மக்களுக்கெதிரான ஒரு போர்" என்று வர்ணிக்கின்றார். வெள்ளையினத்தவருக்கும் பூர்வகுடிகளுக்குமிடையேயான இடைவெளியைக் குறைப்பதாகச் சொல்லிக் கொண்டு அதற்கு மாறான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் முரணான கொள்கையையே காட்டுகின்றது.
சிறையடைப்பு விகிதங்களைக் குறைத்து, சிறுவர்களை ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான வாழ்க்கையை வாழ உதவக் கூடிய வழிமுறைகளைக் காட்டினால் மட்டுமே ஆளுமையான சமுதாயம் ஒன்றை உருவாக்க முடியும். கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமலும், எதிர்காலம் பற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் மீளவும் சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய முடிவுகளை அரசாங்கம் எடுத்திருப்பது வருத்தத்திற்குரியதாகும்.
சமூகத்தின் வருங்கால சந்ததியைப் பிரதிநிதிப்படுத்த வேண்டிய சிறுவர்கள், இளம்வயதிலே வாழும் சூழலிருந்து பிரிக்கப்பட்டு அடைத்து வைக்கப்படுவது என்பது ஆரோக்கியமான செயலாக இருக்கப் போவதில்லை. மிருங்கங்களின் வாழ்விடமும் வாழ்வாதாரமும் அழிகின்றது என்பது பற்றிக் கவலை கொள்பவர்கள் சகமனிதர்கள் மற்றும் குழந்தைகள் பற்றிக் கருத்திற் கொள்ளவில்லை என்பது வருத்தத்தைத் தருகின்றது.
வடக்கு மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறைசாலை பற்றிய அரச ஆணையத்தின் கண்டுபிடிப்புகள், சிறைச்சாலைகளில் காணப்படும் "மனிதாபிமானமற்ற" நிலைகளை வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில் பத்து வயதுச் சிறுவர்களைத் தடுப்புக்காவலில் அடைத்து வைப்பது உசிதமான முடிவாகத் தெரியவில்லை. 10 முதல் 14 வயதிற்குள் உள்ள சிறார்களைச் சிறையில் அடைப்பதால், சமுதாய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலோ அல்லது குற்ற எண்ணிக்கையைக் குறைப்பதிலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை அரசும் அதனுடன் தொடர்பான கட்டமைப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை மாற்றவும், சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் தேவையான பரிந்துரைகளை உள்ளடக்கிய தேசிய குழந்தைகள் ஆணையரின் அறிக்கையான ‘Help way earlier!’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை புதிய வடக்கு மண்டல அரசு படிக்க வேண்டும்" என்று லிடில் என்பவர் வலியுறுத்தியுள்ளார்.
எதை யார் சொன்னாலும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு இருக்கும் அதிகாரமே இறுதியில் வெற்றி பெறப்போகின்றது. பூர்வ குடிகள் அதிகளவில் வாழும் வடக்கு மண்டலத்தில் கல்வியறிவையும் குடும்ப நலன்களையும் மேம்படுத்தும் நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தீர்வு காணப்பட முடியுமாயின் அதுவே பிரச்சினையை ஆழமாக அணுகுவதாக இருக்கும். மற்றவை யாவும் தற்காலிகத் தீர்வைத் தரமுடியுமே தவிர நிரந்தரத் தீர்வாக இருக்கப்போவதில்லை.