தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானமும், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
தெற்கு சீனக் கடல் பகுதி மிகவும் சர்ச்சை மிகுந்த பகுதியாகும். இந்தக் கடல் பகுதியை சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்த நிலையில், தெற்கு சீனக்கடலில் அமெரிக்காவின் போர் விமானமும், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அமெரிக்க ஏவுகணை விமானம் தாங்கிக் கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்த எம்எச் 60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில், இருந்த 3 விமானிகள் பத்திரமாக வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து, பிற்பகல் 3:15 மணியளவில், எப்ஏ-18 எப் சூப்பர் ஹார்னெட் போர் விமானமும் விபத்துக்குள்ளானது. இதில், இந்த 2 விமானிகளும் பத்திரமாக வெளியேறி உயிர்பிழைத்தனர். இந்த அடுத்தடுத்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
டிரம்ப் விரைவில் சீன ஜனாதிபதியை சந்திக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் ஹெலிகாப்டரும், விமானமும் அடுத்தடுத்து தெற்கு சீனப்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.