டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனையடுத்து டெல்லி பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேகடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.
எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் டெல்லி முழுவதும் உச்சபட்ச உசார் நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா ஆலோசனை நடத்தி ,முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திய அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.