உக்ரைன் மீது ஒரே இரவில் 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரும்பினார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.
அதை ஜெலன்ஸ்கி நிராகரித்ததால், கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. போரை நிறுத்த சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இதற்கிடையில் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்குப் பிறகு பற்றி எரியும் கட்டிடங்கள், சேதம் அடைந்த இடங்களின் வீடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.
தாக்குதலில் டெர்னோபில் பகுதியில் 9 மாடி குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமாகி உள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டர்கள் காயம் அடைந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியும் பற்றி எரியும் கட்டிடங்களில் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.