உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமையன்று ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டர்ம்ப்பின் மருமகன் உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க தூதுக்குழு சுமார் 5 மணி நேரம் ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மாஸ்கோவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த ட்ரம்ப்,
“ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரட் க்ரூஷ்னருடன் புதின் நல்லதொரு சந்திப்பை மேற்கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்னவென்பதை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் புடின்போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார் என்று ஸ்டீவ், க்ரூஷ்னர் தெரிவித்தனர். இதுவே அச்சந்திப்பின் சாராம்சம்” என்றார்.
ஆனால், கிரெம்ளின் மாளிகையின் மூத்த ஆலோசகர் யுரி கருத்து வெளியிடுகையில் , “உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அமெரிக்கா - ரஷ்யா இடையேயான மிக விரிவான பேச்சுவார்த்தை இது. ஆனால் எல்லைப் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு சமரசமும் எட்டப்படவில்லை. இருப்பினும், இரு தரப்புமே பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் பின்னணியில் இன்னும் ஏராளமான விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளன. இந்த சந்திப்பு குறித்த தகவல்களின் ரகசியம் காப்பாற்றப்பட விரும்புகிறோம். என்ன மாதிரியான சமரசங்கள் பேசப்பட்டன என்பன குறித்த தகவல்களை வெளியிடப்போவதில்லை. இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப்பிடம் அமெரிக்க தரப்பு பேசும். பின்னர் அவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள்” என்று குறிப்பிட்டார்.