கம்போடியாமீது தாய்லாந்து இன்று வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி வெளியிட்ட அறிக்கையில்,
“உபோன் ரட்சதானி மாகாணத்தில் இன்று அதிகாலை கம்போடிய துருப்புக்கள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன் காரணமாக ஒரு தாய்லாந்து வீரர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ராணுவத்துக்கு தகவல்கள் கிடைத்தன.
கம்போடியப் படைகளின் தாக்குதல்களை அடக்குவதற்காக தாய்லாந்து ராணுவம் விமானங்கள் மூலம் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா கருத்து வெளியிடுகையில்,
“திங்கள்கிழமை அதிகாலையில் பிரியா விஹார் மற்றும் ஒட்டார் மீஞ்சே ஆகிய எல்லை மாகாணங்களில் கம்போடிய படைகள் மீது தாய்லாந்து படைகள் தாக்குதல் நடத்தியது.
தாய்லாந்து ராணுவம் தமோன் தாம் கோயில் மற்றும் பிரியா விஹார் கோயிலுக்கு அருகிலுள்ள பிற பகுதிகளிலும் டாங்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால் கம்போடியா இதற்கு பதிலடி கொடுக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இன்றைய மோதலுக்குப் பிறகு கம்போடியாவின் எல்லையில் உள்ள பகுதிகளிலிருந்து தாய்லாந்தில் சுமார் 35,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறியது.
கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து மற்றும் கம்போடிய நாடுகளுக்கு இடையே நடந்த மோதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3,00,000 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். அமெரிக்க ஜனாதிபதியின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.