ஆஸ்திரேலியாவின் பல பிரதான நகரங்களில் உள்துறை அமைச்சரின் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகதிகள் பல மாதங்களாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தப் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்த மெல்பேர்ண் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் சோசலிச கட்சியின் முன்னாள் செனட்டர் வேட்பாளருமான அரண் மயில்வாகனத்துடன் எதிரொலி நடத்திய நேர்காணல் இங்கு பிரசுரமாகின்றது.
கேள்வி: அரண் மயில்வாகனம் யார்...?
பதில்: இலங்கையில் நாகர் கோவிலில் பாடசாலை மாணவர்கள் மீது இலங்கை விமானப் படையின் தாக்குதலில் என் சகோதரன் , என் நண்பர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் கண்கண்ட சாட்சியாளன். அன்று முதல் ஒடுக்கப்பட்வர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை என் ஆழ் மனதில் குடி கொண்டது. அந்தச் சம்பவத்தின் பின்னர் நகர்கோவில் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து 13 வயதில் பெற்றோரை விட்டு பிரிந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவன். அதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த காலத்தில் ஆஸ்திரேலியாவின் தடுப்புக் காவலில் நான்கு வருடங்கள் இருந்தேன். அப்போதே - 2007 ஆம் ஆண்டிலேயே- ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்கியவன். அன்று முதல் நான் ஒரு சமூகச் செயற்பாட்டாளனாக இருக்கிறேன். 2007 ஆம் ஆண்டு காலத்தில் நான் லேபர் கட்சியின் உறுப்பினர். ஆனால் 2007 -2009 ஆம் ஆண்டு காலத்தில் லேபர் அரசு இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு வழங்கிய உதவிகளே என்னுடைய இப்போதைய போராட்டங்களுக்கான காரணம்.
கேள்வி: 24 மணி நேர போராட்டம் 100 நாட்களை தொட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஊடாக ஏதிலிகளுக்கு எவ்வாறு நிரந்தர விசாவை பெற்றுக் கொடுக்கப்போறீர்கள்..?
பதில்: இந்தப் போராட்டத்தை ஒரு முன்னோடியாகவே பார்க்கவேண்டும். மெல்பேர்ணில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே, ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட காரணமாக இருக்கிறது. இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான பாலமாக பல அமைப்புகள் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறன. Refugee Advocacy Network, asylum seekers resource center Refugee action collective, refugee action collection போன்ற பல அமைப்புக்கள் அரசாங்கத்துடன் எமது போராட்டம் குறித்து பேசி வருகின்றன.
நீங்கள் நேர்காணல் செய்யும் போது கூட மெல்போர்ண் மற்றும் சிட்னியில் போராட்டங்களில் ஈடுபடும் அகதிகளை இணைத்து எமது தரப்பாக asylum seekers resource center விரைவில் நாடாளுமன்றம் சென்று பல உறுப்பினர்களையும் சந்தித்த பேச்சு நடத்தவுள்ளது. அப்படி பல வழிகளில் பேச்சு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தப் போராட்டம் ஆரம்பிக்கும் போது எமது ஆதரவாளர்களுக்கு fast track proses குறித்து தெளிவு படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. பல அமைப்புகள் எமக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். திரைமறைவில் பல லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே ஒரு வெற்றிதான். இந்தப் போராட்டம் தீர்வைத் தருமா இல்லையா என்பது நாங்கள் கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்தே உள்ளது. 86 நாட்களுக்கு முன்னர் அகதிகள் என்ன கட்டத்தில் இருந்தார்களோ அதை விட முன்னேற்றமான பாதைக்குள் வந்து விட்டனர்.
கேள்வி: போராட்டகளத்தில் உள்ள பதாகைகளில் 9 ஆயிரத்து 500 , 10 ஆயிரம் , 12 ஆயிரத்து 500 அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்துகிறீர்கள். அகதிகளின் எண்ணிக்கையில் ஏன் இப்படி மாறுபாடு? உண்மையில் எத்தனை அகதிகள் இந்த சிக்கலில் மாட்டுப்பட்டுள்ளனர்? இதில் எந்த தொகை சரியானது..?
பதில்: இந்த அகதிகள் தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்றால், இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 31 ஆயிரம் பேர் நிரந்த விசா இல்லாமல் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்ற புள்ளி விவரம் இருந்தது. அந்தக் காலப்பகுதியில் 29 ஆயிரம் பேருக்குநிரந்தர விசா கொடுக்கப்படும் போது ஏன் 12 ஆயிரம் பேருக்கு நிரந்த விசா கொடுக்கப்பட வில்லை என்ற கேள்வி எழுந்ததது. அதன் அடிப்படையில் தான் முதலில் 12 ஆயிரம் பேருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் ஆரம்பமானது. அதேவேளை பலர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர். சிலருடைய விசாவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலிய அகதிகள் அமைப்பு விடுத்த அறிக்கையின் படி 9 ஆயிரத்து 500 அகதிகள் நிரந்தர விசா இல்லாது உள்ளனர். அந்த அறிக்கையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது 9 ஆயிரத்து 500 பேருக்கும் நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றோம்.
கேள்வி: குறித்த 9 ஆயிரத்து 500 பேரில் எந்தெந்த நாட்டவர்கள் உள்ளனர் ..?
பதில்: குறைந்தது 3 ஆயிரம் பேர் தமிழ் அகதிகள், 2 ஆயிரம் பேர் ஈரான் நாட்டவர்கள். இது ஆஸ்திரேலிய அகதிகள் அமைப்பின் புள்ளி விவரத்தின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த தகவல். இது கூட எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது.
கேள்வி: இவ்வாறான தெளிவில்லாத தகவல்களின் அடிப்படையை வைத்து கொண்டு 9 ஆயிரத்து 500 பேருக்கும் நிரந்தர விசா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனான போராட்டம் சரியானதா?
பதில்: அரசாங்கத்துக்கு சரியான எண்ணிக்கை தெரியும் தானே. அதேவேளை அரசாங்கத்தின் புள்ளி விவரங்களை வைத்தே நாம் இவற்றை அண்ணளவாக சொல்லுகிறோம்.9 ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கை அரசாங்கத்திடம் இருந்து ஆஸ்திரேலிய அகதிகள் அமைப்பு பெற்றுக்கொண்டதுதான். அந்த எண்ணிக்கையின் அடிப்படையிலும் fast track process இற்குள் அகப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதனை விடுத்து அனைத்து தமிழ் அகதிகளையும் அல்லது அனைத்து அகதிகளையும் தொடர்பு கொள்வது என்பது சாத்தியமற்றதாகும்.
கேள்வி: குறித்த 9ஆயிரத்து 500 பேரில் இந்தியா, பங்களாதேஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற உள்நாட்டுப் போர்கள் இடம்பெறாத நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளனராமே..?
பதில்: அந்த எண்ணிக்கை வேறு கணக்கில் வருகின்றது. அதாவது அரசாங்கத்தால் படகுவழி வந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களே குறித்த 9 ஆயிரத்து 500 பேர்.
நீங்கள் குறிப்பிடும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். நாங்கள் குறிப்பிடும் 9 ஆயிரத்து 500 பேருக்குள், இலங்கை, ஆப்கனிஸ்தான், ஈரான் , பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே உள்ளனர். பாகிஸ்தானிலும் எல்லைப்புறங்களில் வாழும் பல இனங்கள் தலிபான்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. அவர்களில் பலர் இங்கு உள்ளனர். மியான்மாரில் இருந்தும் வந்துள்ளனர். நாங்கள் போராடுவது அகதிகளுக்காக. மாறாக சுற்றுலா விசாவில் வந்த அகதிக்கோரிக்கையாளர்களுக்கல்ல.
கேள்வி: படகுவழி வந்தவர்களில் இந்தியர்களும் உள்ளனராமே..?
பதில்: எனக்குத் தெரிந்தளவில் 5-10 பேர்வரை இருக்கலாம். பெரிதளவில் இல்லை.
கேள்வி: குறித்த 9 ஆயிரத்து 500 பேருக்கும் விசா வழங்கக் கோருகிறீர்கள். அவர்களில் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்குமா.?
பதில்: நீண்ட காலமாக இந்த சமூகத்துக்காக பங்காற்றிக்கொண்டிருக்கும் அகதிகளுக்கு விசா வழங்கக் கோருகிறோம். அதேவேளை விசா வழங்கும் போது அரசாங்கம் குற்றப் பின்னணிகள் குறித்து ஆராயும். குற்றப்பின்னணியுடையவர்களுக்கு விசா நிராகரிக்கப்படும். அதேவேளை 9 ஆயிரத்து 500 பேரும் குற்ற பின்னணி கொண்டவர்களாக இருப்பின் அவர்கள் சிறைக்குள் இருந்திருப்பர். எங்களுடைய நோக்கம் கயளவ வசயஉம pசழளநளளந இல் பதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு ஒன்றை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் . இதையே நாம் நியாயமான கோரிக்கையாக முன்வைக்கிறோம்.
கேள்வி: சிட்னி-அடிலைட்- பிரிஸ்பேர்ண் போன்ற நகரங்களில் நடைபெறும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மெல்பேர்ண், போராட்ட ஒருங்கினைப்பாளர்களுக்கிடையில் தொடர்பாடல்கள் குறைவா அல்லது இல்லையா..?
பதில்: மாநில ரீதியாக ஒரு இணைப்பாளர் குழு இருக்கிறது. அந்தக் குழு போராட்ட நடவடிக்கை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறது. அண்மையில் அடிலைட் மற்றும் பேர்த் நகர போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெல்பேர்ண் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். சிட்னி போராட்டத்தின் பின்னணி குறித்து தெளிவு படுத்த வேண்டும் . சிட்னி தமிழ் அகதிகள் கழகத்தினருடன் சேர்ந்து அகதிகளைத் தொடர்பு கொண்டு போராட்டத்தை முன்னெடுக்க முயற்சிகளை மேற்கொண்டது மெல்பேர்ண் ஒருங்கிணைப்பாளர்கள்தான். ஆனால் மாநில ரீதியாக அவர்கள் தாங்கள் சுயமாக முடிவுகளை எடுக்க முடியும். உதாரணமாக சிட்னி போராட்டத்தில் சத்தமாக குரலெழுப்பி போராடுவதில்லை என்ற முடிவை அவர்கள் எடுத்தார்கள். ஆனால் மெல்பேர்ணி அப்படி அல்ல. சூழ்நிலைகளைப் பொறுத்து போராட்டம் மாறுபடும். ஆனால் குறிக்கோள் ஒன்றுதான். அதில் மாற்றம் இல்லை.
கேள்வி: பிரியா நடசேன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டதை போல 9 ஆயிரத்து 500 பேருக்கும் விசா கொடுக்க வேண்டும் என்றும் சிட்னியில் அமைச்சரை சந்தித்த சிட்னி ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தீர்கள்: அமைச்சரை சந்திப்பதற்கு முன்னர் அவருடன் எவற்றைப் பேச வேண்டும் என்பது குறித்து ஒருங்கிணைப்பளார்களுக்கிடையில் கலந்துரையாடுவதில்லை என்ற சந்தேகம் இதனால் எழுகின்றதே?
பதில்: நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பல சந்திப்புகள் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன.சில சந்திப்புகளின் போது சரியான முறையில் கேள்விகள் கேட்கப்படவில்லை என்றால் அது குறித்து தெளிவு படுத்துவது போராட்டதை இன்னும் சரியான பாதையில் எடுத்துச் செல்லும் என்று நம்புகின்றேன். பிரியா நடசேனுக்கு ஆஸ்திரேலிய சமூகம் எவ்வாறு குரல்கொடுத்ததோ அவ்வாறே போராடும் அகதிகளுக்கு பின்னாலும் ஆஸ்திரேலிய சமூகம் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது எப்படி பிரியா நடசேனுக்கு வழங்கியதை போல ஏனையோருக்கும் விசா வழங்க முடியாது?
கேள்வி: கயளவ வசயஉம நடைமுறை மற்றும் யுயுவ ஆகியன கலைக்கப்பட்டுவிட்டனவே..?
புதில்: அவை கலைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வில்லை. இந்த அரசங்கம் ஏதுவுமே செய்யவில்லை. ஆனால் செய்வதைப் போல காட்டிக்கொள்கிறது.
கேள்வி: இந்த அரசாங்கம் அகதிகளுக்கான தீர்வை தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கும் என நம்புகிறீர்களா..?
புதில்: ஜூலை மாதம் ஏன் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோமெனில் அடுத்த முறை லேபர் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம். அதனால் தான் அதற்கு முன்னர் ஒரு தீர்வை பெற்று கொள்ள வேண்டும் என்று போராடுகிறோம்.
வாழ்க்கைச் செலவு, வட்டி வீத அதிகரிப்பு போன்றவை இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகலாம். மறுபுறத்தே குடிவரவாளர்களை குறிவைத்து தனது பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார் பீட்டர் டட்டன். ஆட்சி மாற்றம் வந்தால் இந்த 9 ஆயிரத்து 500 அகதிகளுக்கும் மரண தண்டனைக்கு ஒப்பான காலமாக இருக்கும். எங்களுக்கு இந்தத் தேர்தலுக்கு முன்னரே தீர்வைத் தரலாம். ஆர்ப்பாட்டம் போட்டு தரவேண்டிய அவசியம் இல்லை. அமைச்சரிடம் பல அகதிகளின் மனு கையளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தீர்வை அவர் வழங்க முடியும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை மீளப் பெறலாம். இவற்றை செய்வதற்கு சட்ட மாற்றம் தேவையில்லை.
கேள்வி: இந்தப் போராட்டம் ஒரு புறமிருக்க, நீங்கள் ஒரு மாற்றுக்கட்சி அதாவது சோசலிச இயக்கத்தை சேர்ந்தவர். நீங்கள் லேபர் கட்சியை குறிவைத்து தாக்குவது லேபர்கட்சியை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றும் முயற்சியா…? உங்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக லேபர்கட்சிக்கு மக்கள் மத்தியில்செல்வாக்கு சரியாதா..?
புதில்: நான் ஒரு சோசலிசப் போராளி. எனக்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை. பணக்காரர்களும் பெரிய செல்வந்தர்களும், அரசியல்வாதிகளை கைக்கூலிகளாக தேர்ந்தெடுத்து தங்களுக்கான சாதகமான முடிவுகளை எடுக்கிற ஒரு இடமாகத் தான் நான் நாடாளுமன்றத்தை பார்க்கிறேன். நாடாளுமன்றத்தின் ஊடாக மக்களுக்கு தீர்வுகிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
2022 ஆம் ஆண்டு சோசலிச இயக்கத்தின் செனட் சபை உறுப்பினராகப் போட்டியிட்டேன். அதற்கு காரணம் லேபர் ஆட்சிக்கு வர வேண்டும். லேபருக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்ய முடியாது. அதேவேளை அகதிகளுக்கு ஆதரவானவர்களை திரட்டி லிபரலுக்கு எதிரான பிரசாரமாகத்தான் நாம் அதனை எதிர்கொண்டோம். சோசலிசவாதிகள் அடிமட்ட மக்களுக்கானவர்கள். லிபரலை விட லேபர் ஆட்சி மக்களுக்கு சாதகமானதுதான். ஆனால் லேபர் விடும் தவறுகளை நாம் சுட்டிக்காட்டுவோம். சோசலிசவாதிகளுக்கு லேபரை ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அகதிகள் பிரச்சினையில் 2009 ஆம் ஆண்டுமுதல் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். லிபரல் ஆட்சியில்தான் நான் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன்.
கேள்வி:தமிழ் ஏதிலிகள் கழகத்தில் உங்களுடைய பங்கு..?
பதில்: அந்த அமைப்பை உருவாக்கியதால் என்னை நிறுவுநர் என்றழைப்பர். ஆனால் இந்த அமைப்பில் யாரும் தலைவர்கள் கிடையாது. ஆனால் பேச்சாளர்களாக நான் மற்றும் ரதி, தனு ஆகியோர் இருக்கிறோம். இது குழுவாகச் செயற்படும் ஓர் அமைப்பு.
கேள்வி: அரண் மயில்வாகனம் முன்னெடுக்கும் போராட்டத்தில் யாரும் உள்நுழைந்து பெயரெடுக்க கூடாது என்று நினைக்கிறீர்களா..?
பதில்:நான் முன்னெடுக்கும் போராட்டங்களில் நான் மட்டும் தலைமையாக இருக்கமாட்டேன். பலர் தலைமைத்துவத்தை எடுத்திருப்பார்கள். அந்தவகையில் மெல்பேர்ண் போராட்டத்தில் ரதி , தனு, மகிந்தன் பிரசாந் போன்றோர் தலைமையேற்றுள்ளனர். முடிவுகள் எடுப்பது கூடஜனநாயக ரீதியாக தான் எடுப்போம். அதே நேரத்தில் அரண் மயில்வாகனம் வழிநடத்தும் போராட்டத்தில் வெளிநபர்கள் உள்நுழைந்து குழப்பங்களை உண்டு பண்ணும் செயற்பாடுகளுக்கும் நான் ஒரு போதும் அனுமதியளிக்கமாட்டேன். அதேவேளை லேபர்கட்சியை சேர்ந்தவர்களோ வேறுஅரசியல் கட்சி பின்புலங்களை கொண்டவர்களோ வந்து போராட்டங்களை திசை திருப்புவதற்கும் வழி விட மாட்டேன்.
கேள்வி: நீங்களும் ஒரு இடதுசாரி, இலங்கையின் ஜனாதிபதியும் ஒரு இடதுசாரி தானே?
பதில்: மார்க்சியவாதி என்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள். ஆனால் ஜேவிபி அப்படியல்ல. 80 களிலேயே சிங்களப் பேரினவாதச் சிந்தனையை - இனக்கலவரத்தை ஊக்குவித்ததில் ஜேவிபியின் பங்கும் அதிகம்.
70 களில் ஜேவிபியின் முன்னோடியாக இருந்த லயனல் போபகே தற்போது மெல்பேர்ணில் இருகிறார். அவர் ஜேவிபியை விட்டு விலகியதற்கான காரணம் தமிழர்கள் குறித்து அந்த அமைப்பு எடுத்த முடிவே.
அதுமட்டுமின்றி சமாதானப் பேச்சுகளை குழப்பவும் முயன்றது ஜேவிபி. மகிந்தவின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்ததும் ஜேவிபியே. ஆகவே அவர்களை ஒரு மார்க்சிய இயக்கம் என்று சொல்லிக்கொள்ள முடியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பவன்தான் ஒரு மார்க்சிய வாதியாக இருக்க முடியும்.
நேர்கண்டவர்: ஜே.ஜே