இந்த நாட்டில் தமிழ் மொழி நிலைக்குமா என்பது போன்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கும் நிலையில், விக்ரோரியாவில் VCE தமிழ்மொழிப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் புதியதோர் உற்சாகத்தைத் தந்திருக்கிறார்கள்.
விக்ரோரியத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் படி, 30 சத வீதமான மாணவர்கள் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருப்பதோடு, ஒரு மாணவர் 50க்கு 50 புள்ளிகளையும் பெற்றிருக்கிறார். அதேவேளை, பாரதி பள்ளியில் 36 சத வீதமான மாணவர்கள் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றதோடு, ஒரு மாணவர் 50க்கு 49 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்திகள், தமிழ் மொழியைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
“எமது சொந்த நாடுகளை விட்டு ஆஸ்திரேலியாவில் நாங்கள் குடியேறியபோதும், எமது அடையாளமாக உள்ள தமிழ் மொழியையும், எங்கள் கலாசாரத்தையும் நாங்கள் மறக்கவில்லை” என, ஊடகங்களில் வெளியான அறிக்கையொன்றில் விக்ரோரியத் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பாடசாலை அதிபர் பரம் பரமநாதன் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
பாரதி பள்ளியின் நிறுவுநரும் அதிபருமான மாவை நித்தியானந்தன் அபிப்பிராயம் தெரிவிக்கையில், “1998 இல் VCE தமிழ் மொழிப் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மாணவர் தொகையும் பெறுபேறுகளும் தொடர்ந்து முன்னேறியே வந்துள்ளன. கடந்துபோன ஆண்டுகளிலும் பல மாணவர்கள் 50க்கு 50 உட்பட உயரிய புள்ளிகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டின் பெறுபேறுகள், மாணவர் தொகை என்ற அளவில் ஒரு மகிழ்ச்சியான பாய்ச்சல் எனலாம். ஆனால், மாணவர் சாதனை என்பது எப்போதும் போலவே நன்றாகத் தான் உள்ளது. கடந்த காலத்தில் முன்னோடிகளாக இருந்த மாணவர்கள் சாதித்தவற்றை, இன்றைய சாதனைகள் ‘கிரகணமாகி’ மறைப்பது நன்மையானதல்ல. 40 புள்ளிகளுக்கு மேல் பெறுவோரின் சத வீதமென்பது, பாரதி பள்ளியில் எப்போதுமே உயர்வாகத்தான் இருந்துள்ளது. கடந்த ஆண்டு கூட, 32 சத வீதமாக இருந்தது. இந்த ஆண்டு 36 சத வீதத்துக்கு உயர்ந்திருக்கிறது.
“பரீட்சை எழுதுவது நாங்களல்ல. பாரதி பள்ளியில் எல்லா மாணவர்களையும் பாரபட்சமின்றித் தயாரித்து அனுப்புகிறோம். அவர்களில் சிலர், தமது சொந்த ஆர்வத்தால், ஆசிரியர்களிடமிருந்து இன்னும் மேலதிகமான உதவிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவையெல்லாம், கட்டணமற்ற உதவிகளே.”
மாவை நித்தியானந்தன் மேலும் குறிப்பிட்டதாவது: “30 ஆண்டுகளின் முன்னர் VCEயில் தமிழ் மொழியைக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்பு மிக்க பல தமிழ் அன்பர்கள் அரும் பாடுபட்டார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இக் குழுவில் அங்கம் வகிக்கும் பேற்றினை நானும் பெற்றிருந்தேன். தொடர்ச்சியான இந்த 30 ஆண்டுகளும் VCEயை அவதானித்து வந்ததோடு, நெருக்கமாக இணைந்தும் இருந்துள்ளேன்.
“பரீட்சையில் தோற்றிய எல்லா மாணவர்களையும் நாம் மதிக்க வேண்டும். கூடிய புள்ளி எடுத்தவர்களைப் பாராட்டுவதில் தவறில்லை. அதேவேளை, ஓரிருவரை மட்டும் சுற்றி நடக்கும் ஆரவாரங்களும் ஆர்ப்பரிப்புகளும் அளவுக்கு மீறும் போது, ஏனைய மாணவர்களில் சிலர் உளரீதியாகச் சோர்வடைவதைக் காண்கிறோம். தமிழ் படித்த மாணவர்களுக்கு இது நிகழக் கூடாதது.”
தமிழர் நலனுக்காக ஆர்வமுடன் செயற்படும், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் பின்வரும் கருத்துகளை எதிரொலிக்குத் தெரிவித்தார்.
“ 20 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெறும் மாணவர்களுக்கு, VCAAவினால் புள்ளியே வழங்கப்படுவதில்லை என அறிகிறோம். பரீட்சையில் இவர்கள் பலிக்கடாக்கள் ஆக்கப் படுகிறார்கள். எத்தனை தமிழ் மாணவர்கள் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் ஒவ்வொரு பாடசாலையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பாடங்களைத் தெரிவுசெய்யும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உண்மையான நிலை தெரிவது மிக அவசியம். VCE என்பது, அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது. நல்லதை மட்டும் பறைசாற்றி, மிகுதியை மூடி மறைத்தல் நிகழுமாயின், அது தவறு”- இவ்வாறு அந்த அன்பர் குறிப்பிட்டார்
எல்லா மாணவர்களின் மீதும் நியாயமான, ஒரே விதமான கவனிப்பு உள்ளதா என்ற கேள்வியும் சமூகத்தில் உரத்துக் கேட்கிறது. இது தெளிவுபடுத்தப் படவேண்டும். உயர் புள்ளிகளையும் விகிதாசாரங்களையும் காட்டுவதற்காக, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து, ஊட்டி ஊட்டி வளர்ப்பதும் ஏனையோரைக் கைவிடுவதும், தமிழுக்குச் செய்யும் சேவையல்ல என்பதை வலியுறுத்துகிறோம்.