ஆர்.சுதந்தன்
இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமாகிவிட்டார். இவர் ஒரு தொழில அதிபர் தானே, தொழிலதிபர் என்றால் ஒரு பெரும் முதலாளி தானே, அவருக்கு நாம் ஏன் வருந்த வேண்டும்> என்று நீங்கள் நினைக்கலாம், நியாயம் தான்.ஆனால் இந்த தொழில் குழுமம் சற்று வித்தியாசமானது.
ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா. கடந்த 1955ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
உயர்கல்விக்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் தலைவரானார். 2012ஆம் ஆண்டு, 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸ்-இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது.
நாம் சமையலில் பயன்படுத்தும் உப்பு முதல் உலகின் விலை உயர்ந்த கார் வரை டாடா நிறுவனம் இல்லாத துறையே இல்லை. இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபராக ரத்தன் டாடா திகழ்கிறார்.
இன்றைக்கு டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள். டாடா நிறுவனத்தின் 66% பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இந்த வருமானத்தின் பெரும் பகுதியை நேரடியாக இந்த ட்ரஸ்டுகளின் வழியே கல்வி, மருத்துவம், சமூகம், கலை என இந்த சமூகத்திற்கே திருப்பியளிக்கும் ஒரு முன்மாதிரயான நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.
புதிய பரிசோதனைகளை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், இளைஞர்களை, கண்டுபிடிப்பாளர்களை, விஞ்ஞானிகளை, ஆய்வாளர்களை எப்பொழுதும் தன் உடன் வைத்திருந்தவர்.
கொரோனாத் தொற்று இந்திய நாட்டையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போது அந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும், எல்லாம் தொழில்கள் மூடப்பட்டு இருந்த நேரத்திலும் ரத்தன் டாடா இந்தச் சூழலை உணர்ந்து ரூ.1500 கோடிகளை முதல் தவணையாக இந்திய அரசுக்கு வழங்கினார்.
அதானி போலவோ அம்பானி போலவோ ஆர்ப்பாட்டம் செய்யாமல், அடக்கமாக இருப்பது எப்படி என்பதற்கு ரத்தன் டாடா முன்னோடி. அதனால் அவர் நல்லவராகத் தோற்றமளிக்கிறார். அவரிடமிருந்து அந்த அடக்கத்தைக் கற்றுக்கொள்ளவது அவசியமானதாகிறது.