ஆனைமுத்து சுப்பிரமணியன்
கருனாநிதியின் பேரன் என்பதால், ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி தமிழ்நாட்டில் துணை முதல்வராகப் பதவியேற்றார் என்கிற ஒரு குரல் இங்கே கடந்த வாரம் மிக தீவிரமாக ஒலித்தது. இது இப்பொழுது ஏதோ முதல் முறையாக ஒலிக்கவில்லை மாறாக அவருக்கு அமைச்சராக பதவி வழங்கப்போகிறார்கள் என்றும், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போகிறார்கள் என்றும் வதந்திகள் சமூக ஊடகங்களில் உலவிய நேரத்திலும் இதே குரல்கள் முணுமுணுக்கவே செய்தன.
2006இல் முரசொலியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற உதயநிதி,2008 ஆம் ஆண்டு ரெட் ஜெயண்ட் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். 2012இல் அவர் கதாநாயகனாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளிவந்தது, இந்தத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால் தமிழநாட்டின் மக்கள் மத்தியில் புழங்கும் பெயராக மாறினார் உதயநிதி. இதனைத் தொடர்ந்து 15 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் நின்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அதே காலகட்டத்தில் திமுக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்றார் .நேரடி கட்சி அரசியலில் ஈடுபட்டார். 2018ல் கலைஞர் கருணாநிதியின் இறப்பின் பின்னர் திமுக இளைஞரணியின் செயலாளராக பதவியேற்கிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதுமே பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஒற்றைச் செங்கலை தூக்கி காட்டி பிரசாரம் செய்ததன் வழியே தமிழ்நாட்டு ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றார். இந்திய நாடாளுமன்றம் வரை இந்த செங்கல் ஒரு கருவியாக மாறியது.
2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். 2022ல் தமிழ்நாட்டு அமைச்சரவையில் பங்கேற்றார். 2023ல் சனாதனம் குறித்து ஆற்றிய உரை அவரை இந்திய அளவில் பிரபலமாக மாற்றியது, உதயநிதி மீது இந்தியா முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்திய அளவில் ஒரே சமயத்தில் புகழையு, கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டார். 2024 செப்ரெம்பர் மாதம் அவருக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கருணாநிதியின் பேரன் என்பதால், ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி தமிழ்நாட்டில் துணை முதல்வராகப் பதவி வழங்கப்பட்டது, அய்யோ எல்லாம் போச்சே, இப்படி இந்தியாவில் நிகழ்ந்ததேயில்லையே என்கிற ஒப்பாரி குரல்கள் நம் காதில் விழவே செய்கிறது, இந்த குரல்களின் உண்மை இருக்கிறதா என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தான் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்கிற பாஜகவின் குரல் மிகவும் போலியானது. நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்களே அந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் யார்? என்று சங்கிகளிடம் கேட்டால் அவர்களிடம் இருந்து பதில் ஏதும் வராது. இது ஏதோ அன்புமணி அல்லது துரை வைகோ பற்றிய பார்வை மட்டும் அல்ல. இன்னும் கொஞ்சம் அவர்களின் பழைய பல்லவியை நீங்கள் கேட்டால் நேரு குடும்பம், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என்பார்கள்.
இந்தியா முழுமையையும் நீங்கள் ஒரு சுற்று சுற்றி வந்தால் முலாயம் சிங் யாதவுக்கு பிறகு அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்ரேவுக்கு பிறகு ஆதித்யா தாக்ரே, முப்தி முய்கமத் சயீத்துக்கு பிறகு மகபூபா முப்திக்கு, பரூக் அப்துல்லாவுக்கு பிறகு ஒமர் அப்துல்லா அதே நேரம் வங்கத்தில் மம்தாவுக்கு பிறகு அபிஷேக் பானர்ஜி என்கிற ஒரு போக்கை நீங்கள் காணலாம். அதே நேரத்தில் பாஜகவின் தலைவர்கள் சொல்வது போல் இவை எல்லாம் இந்தியாவின் எதிர்க்கட்சிகளில் மட்டுமே நடைபெறுகிறது, பாஜக என்கிற கட்சி ஒரு புனிதமான கட்சி என்றால் அந்த புனிதத்தில் உள்ள மாட்டு கொழுப்பை வெளிப்படுத்திச் சொல்வதும் நம்முடைய கடமை தானே.
பரிக்கர், பட்நவிஸ், மொன்சரேட்டா, பாட்டில், மகாஜன், முண்டே, ரானே, தோமர், சிந்தியா, பாஸ்வான், சிண்டே என்று பாஜக கட்சியின் அமைச்சரவைகளில் இடம் பெற்றுள்ள அத்தனை பெயர்களின் பின்னாலும் ஒட்டியிருப்பவை சாதியின் பெயர்கள் மட்டும் அல்ல இவை எல்லாம் அந்த கட்சியில் உள்ள வாரிசு அரசியலில் பெயர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட 395 தொகுதிகளில் 30% பேர் வாரிசுகள் என்றும் அவர்களின் முக்கியமான அமைச்சரவைகளில் இடம் பெற்றுள்ள பலர் வாரிசு அரசியலின் வழியே அதிரடியாக பொறுப்புகள் வழங்கப்பட்டவர்கள் என்பதையும் நீங்கள் உற்றுப் பார்க்க வேண்டும்.
திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் இருக்க, இந்த மூத்தவர்களை மதிக்காமல் இப்படி கட்சி துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு வழங்கவிட்டதே என்று கதறும் பாஜக காரர்களிடம் பாஜகவின் மூத்த தலைவர்களாக வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் என அனைவரையும் தூக்கி வீசிவிட்டு மோடி எப்படி பதவிக்கு வந்தார் என்று கேட்டால் பதில் வராது, இந்தத் தலைவர்களில் பலர் கொடூரமான தனிமையில் மதிப்பற்று உயிரிழந்தார்கள், இவர்களில் பலரை மோடி புகைப்படங்கள் எடுக்க மட்டுமே அவர்களின் தள்ளாத வயதில் பயன்படுத்தினார், அதே நேரத்தில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பதவியில் இருக்க கூடாது என்ற மோடி தன்னுடைய 70 வயதுக்கு மேல் பதவியை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்து விடுவாரா என்றால் பதில்கள் ஏதுவும் இல்லாது பாஜக காரர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விடுவார்கள்.
உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர், ஆனால் நிர்மலா சீத்தாராமன், ஜெயசங்கர் ஆகியோர் பாஜகவின் ஆட்சியில் மத்திய கபினெட் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கிறார்களே, இவர்கள் கட்சியில் வேலை செய்தவர்களா, இவர்கள் மக்களால் எங்காவது இந்தியாவின் ஒரு வார்ட் தேர்தலிலாவது போட்டியிட்டு வென்றுள்ளார்களா, பாஜகவின் போராட்டங்கள் எதிலாவது பங்கேற்றிருக்க்கிறார்களா, சிறை சென்றிருக்கிறார்களா என்று வினா எழுப்பினால் நம்முடன் தொடர்பை துண்டித்துக் கொள்வார்கள்.
உலகம் முழுவதுமே குடும்ப அரசியல் என்கிற போக்கு உள்ளது,அமெரிக்க ஜனாதிபதிகளின் பட்டியல் வரை நீங்கள் குடும்ப அரசியல் போக்குகளை பார்க்கலாம். உலகில் ஆசியா, சகாரா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இவை கூடுதலாக உள்ளது என்பதை நாம் பார்க்கலாம். நிலப்பிரபுத்துவம் எங்கெல்லாம் இருந்ததோ, இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த வாரிசு அரசியலில் கேடு இருக்கவே செய்கிறது. தங்களின் குழந்தைகளுக்கு சொத்தை அப்படியே கொடுக்கும் பழக்கம் உள்ள இடங்களில் அது அதிகமாகவே இருக்கிறது, ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த போக்கு குறைவாக உள்ளதைக் காண முடிகிறது, அங்கே குழந்தைகள் தாங்களாகவே தங்களின் கல்லூரி படிப்பிற்கு கடன் வாங்கி படித்து தங்களின் வாழ்வை நிர்னயித்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது, அப்படியான இடங்களில் இந்த வாரிசு போக்குகள் குறைவாக உள்ளது என்பதையும் நாம் காண வேண்டும்.
ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் ஒரு கேடுதான், அரசியல் என்பது ஒரு அறிவு சார் செயல்பாடு, ஒருவர் தன்னை அதற்கு பல பத்து ஆண்டுகள் தயார் செய்து கொள்ள வேண்டும், சமூகத்தை பற்றி, பொருளாதாரத்தை பற்றி, உலக போக்குகளை பற்றிய தீவிர அறிதல் கோரும் ஒரு துறை இது, மக்களின் மீது அடிப்படையில் ஒரு மரியாதையும் அவர்களின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்ற ஒரு பண்பும் வேண்டும். உதயநிதியிடம் என்ன பன்பு உள்ளது என்பதை இன்னும் கூர்மையுடன் அவதானிப்போம்.