ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறியட்ரம்ப், இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகித வரியும் பின்னர், கூடுதல் 25 சதவிகித வரிவிதித்தார்.
டிரம்ப்பின் நடவடிக்கையை மீறிய இந்தியா, சீனாவுக்கு கூடுதலாக 500 சதவிகித வரி விதிப்பு குறித்த சட்டமூலத்துக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரான் தொடரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அரசுக்கு உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது.
இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அ டிரம்ப் எச்சரித்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவிகித உடனடி வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “ஈரானின் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உடனடியாக 25 சதவிகித வரிவிதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வந்த இந்த வரிவிதிப்பானது இறுதியானது மற்றும் உறுதியானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிவிதிப்பால், இந்தியா, துருக்கி, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.