வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது தனது நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அவர் வழங்கினார்.
“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வசம் அமைதிக்கான நோபல் பரிசை நான் வழங்கினேன். இது எங்கள் தேசத்தின் சுதந்திரத்துக்காக அவரது தனித்துவ அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம்” என மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசை தனக்கு வழங்கிய மச்சாடோவுக்கு சமூக வலைதள பதிவு மூலம் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
‘நோபல் பரிசை பெற்றவர்கள் அதை அடுத்தவருக்கு பகிரவோ, மாற்றவோ முடியாது’ என இந்த விவகாரம் தொடர்பாக நோபல் கமிட்டி குழு தெரிவித்துள்ளது.