சுமதி-கான்பரா
கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்தாலும், இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை விட்டுக்கொடுப்பதில்லை. ஊரில் இருந்த பொழுது என்னென்ன கலாசாரங்களைப் பின் பற்றினார்களோ, அதையே எங்கு சென்றாலும் முடிந்த வரை பின்பற்ற நினைக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக முக்கியமான விழாக்களை பெருமளவில் முன்னெடுக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பான விழா இருக்கின்ற பொழுதிலும், இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது தீபாவளி தான்.
உண்மையில் தீபாவளி அனைத்து இந்துக்களுக்கான விழாதானா? என்ற கேள்வி எழுந்தாலும், அதனை கடந்து விட்டு பார்த்தால், பெரும்பான்மை இந்தியர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடுவதற்கான ஒரு முன்னெடுப்பாகவே இந்த விழாவினைக் காணலாம். அதற்காகவே அனைத்து இந்தியர்களும் அந்த விழாவைக் கொண்டாடலாம். ஆனால்அப்படி ஒரு விழாவில், அதே மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தெய்வமாக/தலைவனாகக் கொண்டாடும் ஒரு உருவத்தை எரிப்பது என்பது எந்த விதத்தில் அறமாக இருக்க முடியும்?
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் தீபாவளி என்றால் தீப ஒளி, தீமைகளை அகற்றி நல் எண்ணங்களை விதைக்கும் நாள் என்று சொல்லிக் கொண்ட போதும், அநேக இந்துக்களுக்கு தீபாவளியை பற்றி சொல்லப்பட்ட கதை, நரகாசுரன் கொள்ளப்பட்ட நாள். வடநாடு இந்துக்கள் 'ராமலீலா' என்று கொண்டாடுகிறார்கள். நரகாசுரனுக்கு பதிலாக ராவணனின் உருவ எரிப்பு விழா.
ராவணனை தீமையின் மொத்த உருவமாக சித்தரித்து, தீமையை எரிப்பதாக ராவணனின் உருவத்தை எரிக்கிறார்கள். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டில், இன்னமும் ஒரு மனிதனை தீமையின் சின்னமாக சித்தரித்து அவன் உருவத்தை எரித்து, நம் குழந்தைகளுக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறோம் என்பதை பெற்றோர் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அது ஒருபுறம் இருக்க, உண்மையில் ராவணன் தீமையின் அடையாளம் தானா? இதைத் தெரிந்து கொள்ள ராமாயணத்தை படிக்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. பல்நூற்றுக்கணக்கான ராமாயணக் கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டவை.ஒரு கதையில், சீதைக்கு ராமன் சித்தப்பன், ஒரு கதையில் ராவணன் மகள் சீதை, ஒரு கதையில் ராவணன் காதலித்த பெண் சீதை. இதைப் போல பல மாறுபட்ட பிரதிகள் உள்ளன. ராமாயண கதைக்குள் செல்லாமல் ராவணனின் குணங்களை மட்டும் எடுத்து பார்த்தால் உண்மையில் இவனையா தீமையின் அறிகுறியாக சித்திரிக்கிறார்கள்? என்றே தோன்றும்.
ராவணனை மிஞ்சிய சிவ பக்தனை காண இயலாது. அப்படி ஒரு பக்திமானை தீமையின் நீட்சியாக சித்தரிப்பதே விசித்திரமாக இருக்கிறது. கடவுளின் மேல் அளவுக்கதிமான பக்தி உடைய ஒரு மனிதன் அரக்கனாக இருக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை பக்தர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
மகளோ, காதலியோ, தங்கைக்காக பழிவாங்கவோ, எதுவாக இருந்தாலும், சீதை, ராவணனால் மிகக் கண்ணியமாகவே நடத்தப்பட்டாள் என்றே அனைத்து கதைகளும் பதிவு செய்கின்றன. ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் கவர்ந்து வருவது குற்றம் தான்,அது என்ன நியாயமான காரணமாக இருந்தாலும். ஆனால் அவள் மேல் தன் விரல்நுனி கூட படாமல் பார்த்து கொண்ட ராவணன் கண்ணியமானவனாகவே தென்படுகிறான்.
மறுபுறம், இப்படி ஒரு கண்ணியவானை ஒருவன் வதம் செய்தது ஆண்டாண்டு காலமாய் கொண்டப்படுகிறது என்றால், ராவணனை வதம் செய்த ராமன் எவ்வளவு நல்லவனாக இருப்பான் என்று எண்ணி ராமாயணக் கதையைப் படித்தால், ராமன் மிக பெரிய ஏமாற்றத்தையே கொடுக்கிறான். ராவணனால் ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்த சீதையை, அவளின் கற்பை நிரூபிக்க தீக்குண்டத்தில் இறக்கியவன் ராமன். இதை ராவணன் உருவத்தை எரிப்பவர்கள் கூட மறுக்க முடியாது. கட்டிய மனைவியை சந்தேகித்து தீக் குழியில் இறக்கிய ராமனுடன் வாழ்ந்த சீதை காட்டிற்கு அனுப்பப்பட்டு, இறுதியில் ராமனுடன் வாழ முடியாமல் பூமிமாதாவே வாய் பிளந்து அவளை அழைத்துச் செல்வாள்.
இப்படிப்பட்ட ராமனைக் கொண்டாடுவது அவரவர் விருப்பம் மற்றும் நம்பிக்கை. அப்படிப்பட்டவனை கொண்டாட ஒரு பகுதி மக்கள் இருக்கும் பொழுது, ராவணனை கொண்டாட மக்கள் இருக்க மாட்டார்களா என்ன.ராவணனைத் தங்களின் தெய்வமாகவும் தலைவனாகவும் கொண்டாடும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.
இந்தியாவில் ராவணனைக் கடவுளாக வழிபாடும் கோவில்களில் சில :
தக்ஷணன் கோவில் - கான்பூர் , ராவண்கிராம் ராவண கோவில் - விதிஷா, காங்கரா- இமாச்சல பிரதேசம், ராவண மந்திர் - பிஸ்ரக், உ.பி., காக்கிநாடா ராவண கோவில் - ஆந்திரா, மண்ட்சார் - எம். பி, காட்சிரோலி - மகாராஷ்டிரா. தமிழ்நாட்டில் சேலம், மீனாட்சிபுரம், புதுக்குளம், முருகத்துரான்பட்டியிலும் ராவணன் கோவில் அமைந்துள்ளன. இவை தவிர மற்ற சில கோவில்களிலும் ராவணனின் சிலைகள் உள்ளன. சில பழங்குடியின மக்கள் ராவணனைத் தங்கள் குலதெய்வமாக கொண்டாடி வருகிறார்கள்.
ராவண உருவத்தை எரிப்பது தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் செயலாகவே சில சாதியினரால் கருதப்படுகிறது. மஹாராஷ்ட்ரிய மாநிலத்தில் மூவாயிரத்துக்கும் மேலான பழங்குடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ராவணன் படத்தை வைத்து வழிபடுகிறார்கள். அதே சமயம், ராவணனின் உருவ எரிப்பை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கமால்பூர், ரஞ்சி, பெந்திரி, மலதாஹிர் போன்ற கிராமங்கள் ராவணனை வழிபடுபவர்கள். ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பவர்களை இழிவு படுத்தும் குறியீடாகவே ராவணன் உருவ எரிப்பு நிகழ்கிறது.
அப்படி பல்வேறு மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் ராவணனின் உருவத்தை எரிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதை ஆஸ்திரேலியாவில் நடத்த போவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் ஒரு பிரிவினர் ராவணன் உருவத்தை எரிப்பதை எதிர்த்து களம் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். தீபாவளிக் கொண்டாட்டத்தின் பொழுது ராவணனை தெய்வமாக வழிபடும் மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்ற அடிப்படையில், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும், குயின்ஸ்லாந்து தமிழ் மன்றங்களும் இணைந்து போர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் ராவண எரிப்பு நிகழ்வைத் தடுப்பதில் கொஞ்சம் கால தாமதமானாலும், நிச்சயமாக அந்நிகழ்வு தடுத்து நிறுத்தப்படும் என்றே நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கலாசாரம் என்ற பெயரில், ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள், ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக இங்கேயும் ராவணன் எரிப்பை முன்னெடுப்பது, இந்தியார்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை. அனைத்து இன, மொழி, நிற மக்களையும் அரவணைத்து செல்லும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு மதசார்பற்ற நாட்டில், ஒரே வேரை கொண்ட இருவேறு பிரிவினர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை, தெரிந்தோ தெரியாமலோ, சிறுமை படுத்துவதும் , தங்கள் நம்பிக்கையை மற்றொரு பிரிவினர் மேல் திணிக்கும் செயலை எதிர்த்து குரல் கொடுப்பதே அறமாக இருக்கும்.
தமிழர்கள் மட்டுமில்லை, பொதுவாக பெண்களிடம் பெயரை குறிப்பிடாமல் ராமன் மற்றும் ராவணனின் குணாதிசயங்களைத் தெரிவித்தால், அவர்கள் தங்களுக்கோ தங்கள் பெண்களுக்கோ ராவணனை போன்ற ஒரு துணையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒருவேளை, ராவணன் அநீதி விளைத்தவனாகவே இருந்தாலும், ஒரு உருவத்தை எரிப்பதன் மூலம் வன்முறை அல்லாமல் இளநெஞ்செங்களில் வேறு என்ன விதைக்க போகிறோம்? அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. அவ்வழியில் இது போன்ற அழிக்கும் செயல்களை நம் இளம் பிள்ளைகளுக்கு கடத்தி விடக்கூடாது.
உலகெங்கிலும் வாழ்ந்த பல சர்வாதிகாரிகள் மரணத்தை நாகரீக சமூகம் கொண்டாடுவதில்லை. அப்படி இருக்க, பல மக்களுக்கும் தெய்வமாக விளங்கும் ராவணனை எரிப்பதை பொது மக்கள் ஒன்று கூடி தடுத்தே ஆக வேண்டும்.